ADVERTISEMENT

நான்கு மனைவிக்காரர் கதை என்னானது பாருங்கள்...

11:48 AM Feb 07, 2019 | Anonymous (not verified)

உண்மையாக இருப்பது என்பது எளிதானது கிடையாது. ஆனால் அதனைக் கடைப்பிடித்தால் இறுதி வெற்றி உறுதி. உண்மையின் மதிப்பு உடனடியாகத் தெரியாது. ஆனால் கடைசியில் தெரிந்தாலும் அதன் பின்னர் அந்த மதிப்பு அழியவே அழியாது.

மீசைக் கவிஞர் பாரதியாரின் இறுதிச் சடங்கில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மிகச் சிலரே கலந்து கொண்டனர். ஆனால் இன்று பாரதியின் பெயரைத் தமிழ் அன்பர்கள் அனைவரும் தினந்தோறும் ஏதாவது ஒரு வகையில் உச்சரித்துக் கொண்டே இருக்கின்றனர். உண்மைக்கு என்றும் அழிவில்லை. ஆரம்ப காலத்தில் அதன் அருமை தெரிவதில்லை. பிற்பாடு தெரிந்த பின்னர் அதற்கு அழிவே இல்லை.‘கடவுள் உண்மை என்பதைவிட, உண்மையே கடவுள் என்பது தான் சரியானது’ என்றார் மகாத்மா காந்தி.அந்த அளவிற்கு உண்மை வலிமையானது. ஆனால் அதன் சிறப்பைப் பலரும் உணர்வதே இல்லை. அதனைத் தங்களுக்கு எதிரியாகவே நினைக்கிறார்கள். அதனைக் கண்டாலே பல அடி தூரம் ஒதுங்கிச் சென்றுவிடுகிறார்கள்.

ஒருவர் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி அவ்வளவாக அழகில்லை என்பதால் அவள் மீது அன்பும், பாசமும் சிறிதளவும் இல்லாமல் இருந்தார். அவள் எது கேட்டாலும் வாங்கிக் கொடுக்கவே மாட்டார். அவளை முழுமையாக வெறுத்தார். எனவே இன்னொரு பெண்ணை இரண்டாவது மணம்புரிந்தார்.அவளும் பேரழகி கிடையாது என்றாலும் குழந்தை பாக்கியம் அவள் மூலமாகவும் கிடைக்கப்பெறவில்லை என்பதால் அவளையும் விலக்கிவைத்தார். ஆனாலும் அவள் மீது அவருக்கு பாசம் இருக்கத்தான் செய்தது. மேலும் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அவளை அணுகுவார். அவள் விருப்பப்பட்டு ஏதாவது கேட்டால் எப்போதாவது வாங்கிக் கொடுப்பார்.மூன்றாவதாக வேறொரு பெண்ணை மணம் செய்தார். அவள் பேரழகாக இருந்ததால் அவள் மீது சதா அவருக்கு சந்தேகம் வந்து கொண்டே இருந்தது. அத்துடன் வெளியே எங்காவது அழைத்துக் கொண்டு போகவும் தயங்கினார். அவள் யாருடனாவது ஓடிப்போய் விடுவாளோ என்ற பயம் இருந்தது.எனினும் இவள் மீது பாசம் இருக்கத்தான் செய்தது. அடிக்கடி வந்து பார்த்துச் செல்வார். தேவையானவற்றை வாங்கிக் கொடுக்கவும் செய்தார்.

பின்னர், நான்காவதாக மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண் இவரை விடவும் மிகவும் இளமையாக இருந்ததால் அவள் மீது அளவுக்கு அதிகமாகப் பாசம் காண்பித்து வந்தார். அவள் ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து வந்தார்.திடீரென்று அவர் நோய்வாய்ப்பட்டார். அவரால் படுக்கையை விட்டு எழுந்திருக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது.இந்நிலையில் அவரது நான்காவது மனைவி தனது பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். பதறிப்போய் இவர் கேட்டபோது, ‘‘படுக்கையில் விழுந்துவிட்ட உங்களோடு இனிமேல் என்னால் குடும்பம் நடத்த முடியாது’’ என்று உறுதியாகச் சொல்லி விட்டாள். வருத்தமடைந்த அவர் தனது மூன்றாவது மனைவியை அழைத்தார். உடம்புக்கு முடியாமல் போன தனக்கு தேவையான உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

ADVERTISEMENT

உடம்புக்கு முடியாமல் போய்விட்ட நிலையில் அவர் மனைவியாக இருந்து பயனில்லை என்றும், தன்னை விரும்பும் வேறொருவரை மணந்து கொண்டு சந்தோஷமாக வாழப்போவதாகவும் கூறிவிட்டுச் சென்று விட்டாள். மனமுடைந்து போனார் அவர். தனது இரண்டாவது மனைவியை அழைத்து உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அவளோ தன்னிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொண்டதற்காக இரக்கப்பட்டு இரண்டோ அல்லது மூன்றோ நாட்கள் வேண்டுமென்றால் பார்த்துக் கொள்வதாகக் கூறினாள். அப்படியே உதவியாக இருந்துவிட்டுப் பிறகு அவளும் நீங்கிவிட்டாள். நொந்து போனார் அவர். இனிமேல் மிச்சம் இருப்பது முதல் மனைவி மட்டும்தான். அவளிடம் மருந்துக்குக்கூட அவர் அன்பு செலுத்தியதே இல்லை என்பதால் அவளை உதவிக்கு அழைக்கக் கூச்சமாக இருந்தது. என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என்று நினைத்துப் பேசாமல் படுக்கையிலேயே கிடந்தார்.

இந்நிலையில் அவரது முதல் மனைவி வந்தாள். உடம்புக்கு முடியாமல் இருக்கும் அவருக்கு உதவி செய்ய வந்திருப்பதாகவும், அனுமதித்தால் செய்வதாகவும் பணிவுடன் கூறினாள்.அதைக்கேட்டதும் அவர் வெலவெலத்துப் போனார்.உண்மையான அன்பு எங்கே இருக்கிறது என்பதே தெரியாமல் பொய்களையும்,பகட்டுகளையும் உண்மை என்று நம்பினார். முடியாத காலத்தில் பொய்கள் பறந்து விட்டன. உண்மை மட்டுமே உறுதியாக அவர் பக்கம் நின்றது.இதுவே யதார்த்தம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT