ADVERTISEMENT

பேக்கேஜ்கள், டிஸ்கவுண்ட்கள்.. துணிக்கடைகளை மிஞ்சும் கருத்தரிப்பு மைய விளம்பரங்கள், நம்பலாமா? - 'அதித்ரி' மருத்துவர் ரஜினி பதில்

10:16 AM Oct 23, 2018 | vasanthbalakrishnan

தீபாவளிக்கான விளம்பரங்கள் அனைத்து எஃப்.எம்களிலும் ஒலிபரப்பாகின்றன. அதில், துணிக்கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள், நகைக்கடைகள் வரிசையில் இணைந்திருக்கின்றன கருத்தரிப்பு மைய விளம்பரங்கள். பல விதமான பேக்கேஜ்கள், தள்ளுபடிகள், 'உங்களுக்குள் இருக்கும் அப்பாவை அறிந்துகொள்ளுங்கள்', 'முழு ஆணாகுங்கள்' போன்ற வசனங்கள், ஒவ்வொரு ஊரிலும் கிளைகள் என பிற சந்தை பொருட்களுக்கு இணையான வணிகத்தில் இருக்கின்றது கருத்தரிப்பு. ஒரு காலத்தில் விரிவாகப் பேசப்படாத குழந்தையின்மை இப்பொழுது வெளிப்படையாகப் பேசப்படுவதும், பெண் மட்டுமே காரணம் என்ற எண்ணம் மாறி, ஆண் உடல் குறைபாடுகளும் கருத்தில்கொள்ளப்படுவதும் நல்ல முன்னேற்றம் என்றால், முன்பு உறவுகள் மட்டும் கொடுத்த அழுத்தத்தை இப்பொழுது இந்த விளம்பரங்களே கொடுக்கின்றன என்பது கொஞ்சம் ஆபத்தானதுதானே... என்னதான் நடக்கிறது?

கருத்தரிப்பு சிகிச்சையில் பதினெட்டு ஆண்டுகளுக்கும் மேல் நல்ல நம்பிக்கையை பெற்றுள்ள பில்ரோத் மருத்துவமனையின் மூத்த கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரஜினியிடம் பேசினோம். இவர் பில்ரோத் மருத்துவமனையின் கருத்தரிப்பு சிகிச்சை மையமான 'அதித்ரி'யின் தலைமை மருத்துவ ஆலோசகர். பில்ரோத் மருத்துவமனையின் மேலாண்மை இயக்குனர் மருத்துவர் ராஜேஷ் ஜெகந்நாதனின் இரட்டை குழந்தைகள், இந்த மருத்துவமனையில் இவரது வழிகாட்டுதலில் பிறந்தவை என்பது கூடுதல் தகவல்.


ADVERTISEMENT

ADVERTISEMENT

இவ்வளவு விளம்பரங்கள்... வாசகங்கள்... நம்பலாமா? உண்மை என்ன டாக்டர்?

அந்தக் காலத்தில் சமூக அழுத்தம், சூழல் காரணமாக குழந்தையில்லாத தன்மை குறித்து அதிகம் பேசாமல், விவாதிக்காமல் இருந்தார்கள். ஆனால், இப்பொழுது கல்வியாலும் இணையதள வீடியோக்கள் உள்ளிட்ட பல தகவல் தளங்களாலும் தம்பதிகள் தைரியமாக வெளியே வந்து, 'இந்தக் குறை இருக்கிறது, இதற்கு என்ன மருத்துவம்' என்று பேசுகிறார்கள். இது நல்ல விஷயம். ஆனால், இதையே பலர் மூலதனமாக்கி வியாபாரமாக்குகின்றனர். அது மிகத் தவறு. தள்ளுபடி என்று விளம்பரங்கள் வருகின்றன. அப்படி பார்க்கும்போது, விலை கம்மியாக இருக்கிறதென்று மக்கள் உடனே செல்லக்கூடாது. ஏன்னா, இந்த சிகிச்சையில் செலவு அதிகம், வெற்றி வாய்ப்பு குறைவு. இதை யாரும் மறுக்க முடியாது. அதே போல இந்த சிகிச்சையில் மருந்துகளின் விலை, செய்யப்படும் சோதனைகளின் விலை ஒன்றுதான்.

தள்ளுபடி ரெண்டு விதமா கொடுக்க முடியும். ஒன்று, நேர்மையாக சர்விஸ் ஃபீஸ், கன்சல்டிங் ஃபீஸ், சோதனைகளுக்கான கட்டணம், இந்த வகையில் கொடுக்கமுடியும். இன்னொன்று, கொடுக்கப்படும் மருந்தில் சற்று குறைந்த தரம், திறன் உள்ள மருந்துகளைக் கொடுப்பாங்க. எதில் தள்ளுபடி என்று நல்லா தெரிஞ்சுக்கிட்டுதான் மக்கள் முடிவு செய்யணும். உதாரணமா கருத்தரிப்புக்காக பியூர் FSH, HMG இரண்டு வகை ஊசிகள் இருக்கின்றன. நாங்க எப்பவும் பியூர் FSHதான் கொடுப்போம். அந்த ஊசியின் விலையில் பாதிதான் HMG ஊசியின் விலை. சில மையங்கள் அதைப் பயன்படுத்தலாம். ஆனால், உருவாகும் முட்டைகளின் தரமும் அந்த அளவுக்குத்தான் இருக்கும். சக்ஸஸ் ரேட் (வெற்றிகரமாக கருவுறும் வாய்ப்பு) அதனால் பாதிக்கப்படலாம். இது தெரியாத மக்களிடம், தள்ளுபடி என்று கூறி மருந்துகளை மாற்றுவது மிக மிக தவறு.

நீங்க சக்ஸஸ் ரேட் குறைவு என்று சொல்றீங்க, ஆனா சில விளம்பரங்களில் 'எங்களிடம் வந்தால் 100% சக்ஸஸ் ரேட்' என்னும் அளவுக்கு சொல்றாங்களே?

ஹா..ஹா... பொய் சொல்றாங்க என்றுதான் அர்த்தம். அறிவியலுக்கென்று ஒரு லிமிடேஷன் இருக்கு. உலக அளவில் இந்த சிகிச்சையின் சக்ஸஸ் ரேட் 35% தான் இருந்தது. சமீபமாக லேட்டஸ்ட் டெக்னாலஜியில், மிகுந்த அக்கறை, கவனத்துடன் செய்யும்போது இது 50% சதவிகிதம் வரை அதிகரிச்சுருக்கு. ஆனால், இந்த 50% சக்ஸஸ் ரேட் என்பது வியாபார ரீதியாக நடத்தப்படும் எல்லா இடத்திலும் சாத்தியமில்லை. விளம்பரத்தால் எப்படியாவது உள்ளே இழுத்துவிடலாம் என்பதுதான் இப்படிப்பட்ட விளம்பரங்களின் நோக்கமாக இருக்க முடியும். சிகிச்சைக்கு வருபவர்களின் வயது, உடல்நிலை, கர்ப்பப்பை பாதிப்பு, கருமுட்டையின் தரம், ஆண் அணுக்களின் பாதிப்பு அளவு எல்லாவற்றையும் பொறுத்துதான் சொல்ல முடியும். வெறும் விளம்பரங்களை நம்பி புதுப்புது இடங்களுக்கு செல்வதை தவிர்த்துவிட்டு, நல்ல மையங்களில் தொடர்ந்து சிகிச்சை பெற்றால் வெற்றி வாய்ப்புகள் அதிகம், இழப்புகள் நேராது.



IVF, IUI சிகிச்சையில் மோசடி நடப்பதாக செய்திகள் வருகின்றன. படங்களில் காட்டப்படுகிறது. அதற்கு உங்கள் பதில் என்ன?

நீங்க 'குற்றம் 23' பற்றி சொல்றீங்க. IUI என்பது ஆண் அணுக்களை பெண் கர்ப்பப்பையில் செலுத்தும் முறை. இதில் சம்மந்தப்பட்ட தம்பதியில் ஆணின் அணுக்கள் தேவையான தரத்தில் இருந்தால்தான் சிகிச்சை வெற்றியடையும். வெகு சில கருத்தரிப்பு மையங்கள், அதாவது ஒன்றிரண்டு கருத்தரிப்பு மையங்கள், தங்கள் சக்ஸஸ் ரேட்டை அதிகரித்துக் காட்டுவதற்காக வேறு ஆண் அணுக்களை பயன்படுத்தலாம். அது மிக அரிதாக நடக்கலாம். அந்தப் படத்தில் அதை தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள். நீங்கள் சிகிச்சை பெறும் கருத்தரிப்பு மையத்தின் அணுகுமுறையிலேயே இது வெளிப்படும். உங்களிடம் அனைத்தையும் சொல்லி, டெஸ்ட் ரிஸல்ட்ஸ் வச்சு டிஸ்கஸ் பண்றாங்களா, இல்லை சிகிச்சை பெறுபவர் பக்கத்தில் யாரும் வரக்கூடாது, போன்ற மிகுந்த கண்டிப்புகள் காட்டி மறைமுகமாக நடக்கிறார்களா என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்.

ஒரு பக்கம் பெருகி வரும் குழந்தையின்மை பிரச்சனைகள், மறுபக்கம் பெருகி வரும் மையங்கள், நடுவில் எதை நம்பி செல்வது என்ற குழப்பம். இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன. விடைகளை அடுத்த பகுதியில் கேட்போம் 'அதித்ரி' மையத்தின் மருத்துவர் ரஜினியிடம்.

நேர்காணலின் அடுத்த பகுதி...


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT