ADVERTISEMENT

தமிழ்த் தேசியவாதிகள் கவனிக்க...

04:26 PM Apr 12, 2019 | Anonymous (not verified)

1937 தேர்தல்களில் நீதிக்கட்சி தோல்வியுற்றதும் தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கத் தலைவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் கூறும் அறிவுரை, "ஒற்றுமை மிகவும் முக்கியம்.' 1944-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் நாள் மதராஸ் கன்னிமேரா ஹோட்டலில், சண்டே அப்சர்வர் ஆசிரியரான பி. பாலசுப்பிரமணியம் அளித்த நண்பகல் விருந்தின்போது டாக்டர். அம்பேத்கர் உரை நிகழ்த்தினார்.

ADVERTISEMENT



டாக்டர் அம்பேத்கார் உரை "நான் ஆய்வு செய்த அளவில், பிராமணர் அல்லாதார் கட்சி ஒன்று தோன்றியிருப்பது இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்ச்சி ஆகும். பிராமணர் அல்லாதார் கட்சியின் அடிப்படைக் கோட்பாடு, அந்தச் சொல் குறிப்பிடுவது போல ஒரு வகுப்புவாதத் தன்மை கொண்டதன்று. பிராமணர் அல்லாதார் கட்சியை நடத்துபவர்கள் யார் என்பது முக்கியம் அன்று. பிராமணர்களுக்கும், தீண்டத்தகாதவர்களுக்கும் இடைப்பட்ட ஒரு வகுப்பார் இதனை வழிநடத்துகின்றனர். ஜனநாயக வழிப்பட்டதாக அந்தக்கட்சி செயல்படவில்லை என்றால் அதனால் ஒரு பயனும் இல்லை. எனவே, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் இக்கட்சியின் வளர்ச்சியை கவலையுடனும் அக்கறையுடனும் கவனித்து வருகின்றனர். ஒரு பிராமணரல்லாதார் கட்சியின் தோற்றம் நாட்டின் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். அக்கட்சியின் வீழ்ச்சியும் வேதனையுடன் காணவேண்டிய ஒரு நிகழ்ச்சியே. 1937 தேர்தல்களில் ஏன் அக்கட்சி படுதோல்வி அடைந்தது என்பதை அக்கட்சித் தலைவர்கள் தமக்குத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டும். தேர்தலுக்கு முன்னால் 24 ஆண்டுக்காலம் மதராசில் பிராமணர் அல்லாதார் கட்சியின் ஆளுமை இருந்துவந்தது. நீண்ட காலம் அதிகாரத்தில் இருந்த அக்கட்சி அட்டைவீடு போலச் சரிந்துபோனது எதனால்? பிராமணர் அல்லாதார் மத்தியிலேயே இக்கட்சியின் செல்வாக்கு கெட்டது எதனால்? இந்த வீழ்ச்சிக்கு இரண்டு காரணங்கள் உள்ளன என நான் கருதுகிறேன்.

ADVERTISEMENT



1. பிராமணர் பிரிவுக்கும் இவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன என்பதை இவர்கள் உணரவில்லை. பிராமணர்களுக்கு எதிராகத் தீவிரமாக அவர்கள் பிரச்சாரம் செய்தபோதும், இவர்களுக்கு இடையிலுள்ள வேறுபாடுகள் கொள்கை வழிப்பட்டவை என்று இவர்கள் கூறமுடியுமா? பிராமணர் தன்மை அவர்களிடமே எவ்வளவு இருந்தது? அவர்கள் "நவாப்'களாக இருந்தார்கள்.

2. இரண்டாம் தர பிராமணர்களாக தங்களை எண்ணிக்கொண்டார்கள். பிராமணியத்தை விட்டொழிப்பதற்கு பதிலாக, எட்டத் தகுந்த இலக்காக கருதி அதன் ஆத்மாவை இவர்கள் இறுகப் பற்றியிருந்தார்கள். பிராமணர்களுக்கு எதிரான அவர்களது கோபம் எல்லாம் தங்களுக்கு அவர்கள் இரண்டாந்தரப் பட்டம் தருகிறார்கள் என்பதே.



நீதிக்கட்சியின் தோல்விக்கான காரணங்கள்

1. ஒரு கட்சியைச் சேர்ந்தார்கள், இன்னொரு கட்சியை எதிர்க்கச் சொல்லும்போது இவ்விரு கட்சிகளுக்கிடையே உள்ள கொள்கைரீதியான வேறுபாடுகள் என்ன என்று அவர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளவில்லை என்றால் அந்தக் கட்சி எப்படி வேரூன்றும்? எனவே, பிராமணிய வகுப்பினருக்கும் பிராமணரல்லாதோருக்கும் இடையிலுள்ள கொள்கை வேற்றுமைகளை ஒழுங்குற எடுத்துக் கூறாததே அந்தக் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணம்.

2. கட்சியின் வீழ்ச்சிக்கு இரண்டாவது காரணம் அதனுடைய வேலைத் திட்டம் மிகக் குறுகலானதாக இருந்தது ஆகும். இக்கட்சியின் எதிரிகள் "வேலை தேடிகள்' என்று இக்கட்சியை வர்ணித்தனர். இந்தச் சொல்லைத்தான் "இந்து' பத்திரிகை அடிக்கடி பயன்படுத்தியது. இந்தக் குற்றச்சாட்டை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் அடுத்த கட்சியினரும் இதே வகைப்பட்டவர்தானே. பிராமணரல்லாதார் கட்சியின் வேலைத் திட்டத் திலுள்ள ஒரு குறை என்னவென்றால், அவர்கள் தமது இளைஞர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகள் கிட்டவேண்டும் என்று கூறுவதே, இது மிகவும் நியாயமானதுதான். பிராமணரல்லாத இளைஞர்கள்- இவர்களுக்கு வேலை கிடைப்பதற்காக கட்சி 30 வருட காலம் போராடியிருக்கிறது. தமக்கு வேலையும், ஊதியமும் கிடைத்த பின்னர் தமது கட்சியை, நினைத்துப் பார்த்தார்களா? கடந்த இருபது வருடங்களாக பதவியிலிருந்த கட்சியை கிராமங்களில் வசிக்கும் 90 சதவீத மக்களை மறந்துவிட்டனர். இவர்கள் வசதி சிறிதுமற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டு கடன்காரர்களின் பிடியில் சிக்கி அல்லல்படுகின்றனர்."இந்தக் காலகட்டத்தில் இயற்றப் பட்ட சட்டங்களை நான் பரிசீலித்தேன். நிலச்சீர்த்திருத்தம் என்ற ஒரேயொரு நடவடிக்கை தவிர, குத்தகைதாரர்கள் விவசாயிகள் பற்றி இவர்கள் ஒரு சிறிதும் கவலைப்படவில்லை. அதாவது, ""காங்கிரஸ் பேர்வழிகள் இவர்களது ஆடைகளையே திருடிச் சென்று விட்டனர்'' என்றுதான் இது காட்டுகிறது.



நடந்துள்ள சம்பவங்கள் என்னைப் பெரிதும் வருத்துகின்றன. ஒரு கட்சி மட்டும்தான் அவர்களைக் காப்பாற்றும் என்று மட்டும் நான் அழுத்திச் சொல்ல விரும்புகிறேன். ஒரு கட்சிக்கு நல்ல தலைவர் வேண்டும். ஒரு கட்சிக்கு நல்ல அமைப்பு வேண்டும், ஒரு கட்சிக்கு அரசியல் மேடை வேண்டும்.''"தலைவர்களை நாம் நன்றாகவே விமர்சிக்கலாம். காங்கிரஸ் கட்சியை எடுத்துக்கொள்வோம். மகாத்மா காந்தியை மற்றெந்த நாடு தமது தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கும்? அவருக்கு தொலைநோக்கோ, விஷய ஞானமோ, ஆய்வுத் திறனோ இல்லை. தனது வாழ்க்கை முழுதும் பொது வாழ்வில் தோல்வியே கண்டவர் அவர். இந்தியா வெற்றியடைய இருந்த தருணங்களில் காந்தியால் எதுவும் நன்மை விளைந்ததாகக் கூறமுடியாது. மூன்று வருடங்களுக்கு முன்பு ஜின்னா பாகிஸ்தான் பிரச்சனையை எழுப்பியபோது அதை ஒரு பாவம் என்று கூறி அதற்குச் செவிமடுக்க மறுத்தார். இறுதியில் பிரச்சனை பெரிதாக வளர்ந்தது. திரு. காந்தி திகிலடைந்தார். இப்போது குட்டிக்கரணம் போட்டு அதனுடன் மல்லாடி வருகிறார். எனினும் அவர் இன்னும் தேசத் தலைவராக இருந்துவருகிறார். ஏனென்றால், தனது தலைவர்களை காங்கிரஸ் கட்சி கேள்வி கேட்பதில்லை.''

"ஜின்னாவை எடுத்துக் கொள்ளுங்கள், அவர் ஒரு எதேச்சதிகாரத் தலைவர். முஸ்லீம் லீக் என்பது அவரது தனிச் சொத்து. ஆனால் முஸ்லீம்கள் அவர் மீது நியாயமான நம்பிக்கை வைத்துள்ளனர்.'' காந்தியின் மீது எத்தகையதொரு குற்றச்சாட்டு செய்யப்பட்டாலும் கட்சி அமைப்பை அது சீர்குலைக்கும் என்பதால் ஜனநாயகத்துக்கு முரணான பல விஷயங்களை காங்கிரஸ் சகித்துக் கொள்கிறது. எனவே, பிராமணரல்லாதோருக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் ""ஒற்றுமை என்பது மிகவும் முக்கியமானது. எனவே தாமதமின்றி பாடம் கற்றுக் கொள்ளுங்கள்'' என்பதுதான். (பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் -பகுதி 37, பக் 405-408, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை).

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT