ADVERTISEMENT

குறிவைக்கப்படும் அன்பிற்குரியோரின் கரும்பக்கங்கள்! -தொழிலதிபர் ஒருவரின் அனுபவப் பகிர்வு!  

11:17 AM Aug 14, 2020 | santhoshkumar

ADVERTISEMENT

பெண்களுக்கான ஆடைத் தயாரிப்பில் முன்னணி நிறுவனம் அது. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அதன் கிளைகள் உள்ளன. ‘மூச்சுவிடக்கூட நேரமில்லை..’ எனச் சொல்வார்கள் அல்லவா! அந்த அளவுக்கு பிசியாக இருந்த அந்த நிறுவனத்தின் இயக்குநரை, எங்கும் நகரவிடாமல், கரோனா காலக்கட்டம் கட்டிப்போட்டது. அவ்வப்போது, சும்மா பொழுதை கழிப்பது மனதை உறுத்த, சிந்திக்கவும், எழுதவும் ஆரம்பித்தார். அத்தனையும் அனுபவமே! அவரது சிந்தனைத் துளிகளில் சிலவற்றை இங்கு காண்போம்!

ADVERTISEMENT

தேவைக்கும் அதிகமாகவே பேசுகிறோம்!

‘சொல்லிமுடியாதவை’ என்ற பதம் நம் எல்லோருக்கும் பொதுவானது. நம் செயல்களுக்கானது. எனக்கு சொல்லிமுடியாதவை என்று பெரிய லிஸ்ட் இல்லை. ஏனென்றால், அனேகமாக எனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லவேண்டியவற்றை, தேவைக்கும் அதிகமாகவே சொல்லிவிடுகிறேன். அதனால் பிரச்சனைகளும், காதல்களும், உறவுகளும், பூகம்பங்களும், பிரிவுகளும், வந்தாலென்ன என நினைத்து சொல்லிவிடுகிறேன்.

தந்திர தாக்குதல் உத்திகள்!

சில நேரம் 'அதை சொல்லியிருக்க வேண்டியதில்லை', 'அதை அந்த வார்த்தைகளில் சொல்லியிருக்க வேண்டியதில்லை', 'அதை அந்த நேரத்தில் சொல்லியிருக்க வேண்டியதில்லை' என்று வேண்டுமானால் பிறகு தோன்றுமே தவிர, சொல்லியது பெருந்தவறு என எப்போதும் தோன்றியதில்லை. சொன்ன விஷயங்களால், சொன்ன தொனியால் ஏற்பட்ட உறவுகள் உண்டென்றாலும், ஏற்பட்ட பிரிவுகளும் உண்டு. வாயை மூடிக் கொண்டிருந்தால், மனிதன் பெரும் பிரிவுகளைச் சந்தித்திருக்க வேண்டியிராத வாழ்வை வாழ்ந்திருக்கலாம். ஒரு விவாதத்தினிடையே, யார் முதலில் ஆயுதத்தை தூக்குகிறார்களோ, அவர்களே வெற்றி பெற்றவர்களாகிறார்கள், கொலைக்கருவிகள் வேண்டியதில்லை. தந்திர தாக்குதல் உத்திகளை, வெறுமனே சொற்களின் வழியாக பயன்படுத்த முடியும். அந்த ஆயுதங்கள் எளிமையானவை.

வார்த்தை யுத்தத்தால் அழியும் உறவுகள்!

எந்த உறவிலும் சில கரும்பக்கங்கள் இருக்கும். அதை அழகியலாகவே பார்த்து வந்திருப்போம். எந்த உறவைக் காப்பதற்காக விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறோமோ, அந்த உறவின் கரும்பக்கங்களைக் குறி வைத்துவிடுவோம். கடும் விவாதத்தின்போது, அந்த கரும்பக்கங்களைக் குறி வைப்பது ஒரு கூர்மையான ஆயுதம்தான். எதிரி தடுமாறி விட அது உதவலாம். அந்த விவாதமும் சட்டென முடிவுக்கு வந்து விடும். எதிரி கடந்து வர விரும்பும் ஒரு விஷயத்தை தூக்கி முன்னால் போட்டு நிலைகுலைய வைப்பது, எல்லோரும் அவரவர் தரத்திற்கு செய்வதுதான். அந்த திடுக்கிடும் வார்த்தைகள் சற்று கொடூரமானவைதான். ஆனால், எதிராளியை யுத்த களத்திலிருந்து வெளியேற்றிவிடும் அந்த வார்த்தைகள். இந்த யுத்த நெறியை துரதிர்ஷ்டவசமாக நம் நண்பர்கள், சகோதரர்கள், உறவினர்கள், காதலர்கள், காதலிகள், சக வேலையாட்கள் ஆகியோரிடம்தான் உபயோகப்படுத்துகிறோம். எதிரிகள் எப்போதும் நம்மிடம் அதை செய்வதில்லை. நாமும் எதிரிகளிடம் அதை செய்வதில்லை. நம் அன்பிற்குரியவர்களாக இருந்தவர்களிடம்தான், அதை உபயோகித்திருப்போம். நானும் அந்த ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறேன் - உங்களைப் போலவே!

அந்தரங்க ரகசியம் ஆயுதமானால்?

ஒருவருடன் நீங்கள் அந்தரங்க நெருக்கத்தோடு இருந்தபோது, அவர் தன்னைப் பற்றி, உங்களிருவர் உறவு குறித்து அவர் நெகிழ்வது பற்றி, தன் குடும்பத்தை பற்றி பகிர்ந்து கொண்ட ரகசியத்தை, அவரை விரோதித்தோ, வாதத்திலோ, ஒரு நாளில், ஒரு ஆயுதமாக பயன்படுத்தலாம்தான். அந்த கணம் நீங்கள் வெற்றியும் பெறலாம். ஆனால், என்றென்றும் திரும்ப அடைய முடியாதபடி, மனிதனுக்கே உரிய ஒரு ஆதார தகுதியை நிரந்தரமாக இழக்கின்றீர்கள். அந்த இழப்பின் மதிப்பு, பல ஆண்டுகளுக்கு பிறகே தெரியவரலாம். ஒரு சிறிய விவாத வெற்றிக்காக, நாம் நம்மளவில் அடையும் மாபெரும் தோல்வி அது. பிறரை அவமதிக்க வேண்டும் என நினைப்பது ஒரு மனிதனுடைய அகங்காரத்தின் இடையறாத விருப்பம். அதற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். ஒரு விவாதத்தின் கொடூர வேகத்தில் அது வெளிப்பட்டு விடுகிறது.

கொடூர கொடுக்குகளாய் வார்த்தைகள்!

வார்த்தைகளால் எரிந்து போன அளவுக்கு, உலகில் அழிந்த உறவுகள், பெரும் யுத்தங்களால்கூட நிகழ்ந்ததில்லை. ஏதோ ஒரு வார்த்தைக்காக, பல ஆண்டுகள் பேசிக் கொள்ளாமல் வாழ்ந்த தம்பதிகளைப் பார்த்திருக்கிறேன். ஒரு வார்த்தை வெளிவந்ததற்காக, பல ஆண்டுகளாக முகத்தில் விழிக்காத சகோதர, சகோதரிகள் இருக்கின்றனர். குழந்தைகளை விட்டு விலகிய பெற்றோர், நண்பனைப் பிரிந்தவர்கள் என வீதிதோறும் இருக்கிறார்கள். அதை சரி பண்ணிக் கொள்ளும் வாய்ப்புகளையாவது பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், உதிர்ந்த வார்த்தைகள் ஒட்டவிடாது விரட்டும். ‘சொல்லிமுடியாதவை’ எத்தனையோ இருந்தாலும், சொல்லிவிட்ட வார்த்தைகளின் காயங்களுக்குத்தான் உடனடி மருந்து தேவை. சொல்லிமுடியாதவை நல்ல வார்த்தைகளாகத்தான் இருக்கும். ஆனால் சொல்லிவிட்டவை கொடூர கொடுக்குகள். சொல்லிவிட்டவற்றை திரும்பப்பெற ஜென்மங்கள் தாண்ட வேண்டும்!

அனுபவத் தெறிப்புகள் தொடரும்…

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT