Skip to main content

‘‘ஐயோ! ஒரு நம்பரில் சான்ஸ் பறிபோய்விட்டதே’’

பொறாமைக் குணம் என்றும் உங்கள் முன்னேற்றத்தை முழுவீச்சில் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விடும்.இந்தக் குணம் இருந்தால் சதா அடுத்தவர்களைப் பற்றியே சிந்திக்கத் தோன்றும். அவர்களின் நிலைமையைப் பார்த்து மனம் வெதும்பும். பொறாமைக் குணம் இருந்தால் ஒருபோதும் அமைதி கிடைக்காது. அடுத்தவர்களின் வளர்ச்சி கண்டும் மனம் பொறுக்காது. அதுமட்டுமில்லாமல்  அவர்களின் வளர்ச்சியைத் தடுக்க என்னென்ன வழிகள் உண்டோ அத்தனையிலும் ஈடுபடுவார்கள்.அவர்களைப் பற்றிப் பொய்யான, தவறான தகவல் களைப் பரப்பி விடுவார்கள்.அவர்களின் உடைமைகளுக்கு முடிந்த வரையில் பாதிப்பை ஏற்படுத்தி அதில் சுகம் காண்பார்கள்.மேலும் அவர்கள் உயிருக்கே தீங்கு விளைவிக்கக்கூடிய வகையில் செயல்படுவார்கள்.இந்தவகையான தவறுகளைச் செய்து கொண்டே இருப்பார்கள். இதன்மூலம் எதிரியை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தன்னைத்தானே களங்கப்படுத்திக் கொள்வார்கள்.

jealous picture

பொதுவாக பொறாமை யார் மீது ஏற்படுகிறது? நமது அண்டை அயலார்கள் மீதே ஏற்படுகிறது.

‘முகேஷ் அம்பானி கோடி கோடியாக சம்பாதிக்கிறாரே!’ என்று தெருக்கோடியில் உள்ள டீக்கடைக்காரர் பொறாமை கொள்வது இல்லை. ஆனால் அடுத்த தெருவில் உள்ள டீக்கடைக்காரரைப் பற்றி அவர் பொறாமைப்படுவார்.பக்கத்து வீட்டுக்காரரும், எதிர் வீட்டுக்காரரும்தான் பொறாமைப் படுபவர்களாக இருக்கிறார்கள்.ஒரு லாட்டரி சீட்டு அதிபரிடம் ஒருமுறை ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. ‘‘ஐந்து கோடி ரூபாய் பரிசு அறிவிக்கிறீர்கள். பரிசு 100 என்ற எண்ணுக்கு விழுந்தால் அதற்கு முந்தைய 99 எண்ணை வைத்திருப்பவர் மற்றும் அதற்குப் பிந்தைய 101 எண் சீட்டை வைத்திருப்பவர் மனம் என்ன பாடுபடும்?’’ என்று கேட்கப்பட்டது.அதற்கு அந்த லாட்டரி சீட்டு அதிபர் கூறிய பதில் என்ன தெரியுமா? ‘‘ஐயோ! ஒரு நம்பரில் சான்ஸ் பறிபோய்விட்டதே’’ என்று  சலிப்படைவதோடு சரி. ஆனால் பரிசு விழுந்தவரின் பக்கத்து வீட்டுக் காரரும், எதிர் வீட்டுக்காரரும்தான் இதனைக் கண்டு பெரிதும் மன உளைச்சல் அடைகிறார்கள். ரொம்பப் பொறாமைப்படுகிறார்கள்’’ என்றார்.இது மிகவும் சிந்திக்கத் தூண்டுகிற அர்த்தம் உள்ள பதில். நம் அருகில் இருப்பவர்கள் மூலமாகவே பொறாமை நம்மைத் தாக்குகிறது.சம துறையில் உள்ளவர்கள் ஒருவரையருவர் மனமுவந்து பாராட்டுவது என்பது மிக அரிது.ஒரு எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரை உண்மையாகவே பாராட்டுவது இல்லை. பொறாமைப்படுகிறார்.ஒரு மாணவன் தன் வகுப்பில் உள்ள தன் சக நண்பன் அதிக மதிப்பெண் பெற்றால் பொறாமை அடைகிறான்.ஒரு பெண் ஒரு ஆணின் பேரழகைப் பற்றிப் பொறாமைப் படுவதில்லை. ஆனால் ஒரு பெண் பேரழகாய் இருந்தால் இன்னொரு பெண் பொறாமைப்படுகிறாள்.எனவே பொறாமை என்பது பெரும்பாலும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்களுக்கு இடையேதான் ஏற்படுகிறது.ஆனால் பொறாமைப்படுகிறபோது அதனால் கிடைப்பது நிச்சயம் இழப்பே. பொறாமை என்றுமே வெற்றியைத் தரவே தராது.

நாய் ஒன்றுக்கு எலும்புத் துண்டு கிடைத்தது. அதனைக் கவ்விக் கொண்டு மற்ற நாய்களால் தொந்தரவு இல்லாத இடத்தில் சென்று அதனை ஆற அமர சாப்பிட விரும்பியது.எனவே அங்கிருந்து தூரத்தில் உள்ள இடத்திற்கு அதனைக் கவ்விப் பிடித்தவாறு ஓடியது. அப்போது வழியில் ஒரு கால்வாய் குறுக்கிடவே அதனுள் இறங்கி அக்கரையை அடைய நீந்தியது.அப்போது நீரில் அதன் நிழல் தெரிந்தது. நீருக்குள் இன்னொரு நாயும் இருப்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டது. இன்னும் உற்றுப் பார்த்தபோது தான் வாயில் வைத்திருந்த எலும்புத் துண்டை அந்த நிழலும் வைத்திருப்பதைப் பார்த்தது.‘ஆஹா! என்னைப் போலவே இந்த நாயும் எலும்புத் துண்டை வைத்துக் கொண்டு என்கூடவே வருகிறதே! இதனை அடித்துத் துரத்த வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டு அதனைக் கடித்துக் குதறுவதற்காகத் தன் வாயைக் கோபமாகத் திறந்தது.அதன் வாயில் கவ்விக் கொண்டிருந்த எலும்புத் துண்டு தண்ணீருக்குள் விழுந்து ஆழத்தில் மறைந்துபோனது.பொறாமைக் குணம் உள்ளவர்களுக்கு நஷ்டம்தான் அதன் பரிசாகக் கிடைக்கும்.அதேபோல பொறாமை அடைந்து அதனால் எதிராளிக்கு அவப்பெயரைச் செய்வதும் மிகவும் தவறான செயல் ஆகும். ஆனால் பொறாமை உணர்ச்சி கொண்டவர்கள் இதைத் தங்கள் கடமையாகவே செய்வதுதான் துயரத்தின் உச்சம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்