ADVERTISEMENT

வறுவல் ஒருபக்கம்... கேக் மறுபக்கம்... ஆங்கிலோ இந்தியர்களின் டேஸ்ட் இதுதான்!

03:43 PM Dec 22, 2020 | santhoshkumar

ADVERTISEMENT

கிறிஸ்துமஸ் பண்டிகை என்றவுடன், நம் அனைவருக்கும் கண் முன் வருவது வித விதமான அலங்காரங்கள், வண்ணமயமான கொண்டாட்டம். அதுமட்டுமின்றி, நாம் அனைவரையும் மகிழ்விக்க வரும் கிறிஸ்துமஸ் தாத்தா. இவை தவிர நாம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று உணவு. அவற்றில் முக்கியமானவை ஆங்கிலோ இந்தியர்களின் பாரம்பரிய உணவு முறைகள்.

ADVERTISEMENT

உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர். அந்த நாளில் கிறிஸ்துவர்கள் தங்கள் இல்லங்கள் மற்றும் கிறிஸ்துவ தேவாலயங்களில் ஸ்டார்களை தொங்க விடுவது வழக்கம். அதேபோல், இயேசு பாலன் மாட்டுத்தொழுவத்தில் பிறந்த நிகழ்வை நினைவு கூரும் வண்ணம் வீடுகளில் குடில்களும் அமைப்பார்கள்.

கிறிஸ்துமஸ் நாளில் நீங்கள் பல விதமான ருசி மிகுந்த சிக்கன், மட்டன், வான்கோழி இறைச்சி, பழ கேக், ஜெல்லி புட்டு, போன்ற உணவு வகைகளை ருசித்திருப்பீர்கள். ஆனால், ஆங்கிலோ இந்தியர்களின் பாரம்பரிய உணவுகளை இதுவரை ருசிபார்த்தது உண்டா? ‘உலக அளவில் பரவி உள்ள ஆங்கிலோ இந்தியர்கள் எந்த மாதிரியான உணவு வகைகளை சாப்பிடுவார்கள்?’ என்ற கேள்வி நம்மில் பலருக்கு தோன்றும்.

ஆங்கிலோ இந்தியர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் வாழ்ந்த, ஐரோப்பியர்களுக்கும், இந்தியர்களுக்கும் திருமண உறவினால் பிறந்த கலப்பினத்தவர்கள். எனவே, ஆங்கிலோ-இந்தியர்களின் வாழ்க்கை முறை முற்றிலும் ஐரோப்பிய கலாசாரம் மற்றும் பண்பாட்டைத் தழுவியே காணப்படும். இவர்கள், பிரிட்டிஷ் இந்தியாவில் அனைத்து துறைகளிலும் செல்வாக்குடன் வாழ்ந்த சிறுபான்மைச் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஆங்கிலோ இந்தியர்கள் வாழ்ந்தனர். ஆசிரியர்களாகவும் அரசு ஊழியர்களாகவும் பெரும்பாலானவர்கள் இருந்தனர். 90களில் கூட ஆங்கிலோ இந்தியர்களென்றால் நம் சிறுவர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு ஈர்ப்பு இருந்தது. அவர்களது தோற்றம், உடைகள், கலாச்சாரம் ஆகியவை சற்று வித்தியாசமாகவும் மாடர்னாகவும் இருந்தன. ‘ஆடுகளம்’ படத்தின் நாயகி டாப்ஸியின் பாத்திரம் ஆங்கிலோ இந்தியனாக வடிவமைக்கப்பட்டது. தற்போது ஆங்கிலோ-இந்திய சமூகம் இந்தியாவை விட்டு வெளியேறினாலும், நாட்டில் எஞ்சி இருப்பவர்கள் தங்கள் மூதாதையர்களின் சமையல் முறைகளை தற்போது வரை, பின்பற்றி வருகின்றனர்.

இது குறித்து 80 வயதான ஆங்கிலோ இந்தியர் ஒருவர் கூறும்போது, ''டிசம்பர் மாதம் தொடங்கிய முதல் ஞாயிற்றுக்கிழமை முதலே, நாங்கள் எங்களது வீட்டில் வித விதமான உணவு வகைகளை தயாரிக்க துவங்குவோம். இந்த சமையல் குறிப்புகளும், உணவுப் பொருட்களும் ஆங்கிலோ இந்தியர் அல்லாத மற்ற கிறிஸ்துவர்களிடம் மிகவும் பிரபலமாக பார்க்கப்படும். வருடம் தோறும் பல விதமான உணவு வகைகளை நாங்கள் தயார் செய்வது வழக்கம். அதேபோன்று, இந்த ஆண்டும் மிருதுவான ரோஜா குக்கீகள், இளஞ்சிவப்பு மற்றும் பச்சை ரிப்பன் கேக்குகள், பிளம் கேக்குகள், போன்றவற்றை தயார் செய்துள்ளோம்” என்றார்.

இது பற்றி பிரபல பேக்கரி நிறுவனர் விக்டோரியா மேத்யூஸ் கூறும்போது, ''பல ஆண்டுகளாக தரமான கேக்குகள் மற்றும் கிறிஸ்துமஸ் கேக்குகள் தயாரிப்பதில் மற்ற கடைகளுக்கு முன் உதாரணமாக திகழும் பிரபலமான பேக்கரி எங்களுடையது. மீட்லோஃப் (Meatloaf) மற்றும் ஷெப்பர்ட் பை (shepherd’s) போன்றவை இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகைகள் ஆகும். அவை, அனைத்து தரப்பட்ட மக்களும் வாங்கி உண்ணும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த ஆண்டும், குழந்தைகள் மைனி கேக், டைமண்ட் கேக், போன்றவற்றை விரும்பி வாங்கி சென்றனர். இவை தவிர, ஆங்கிலோ-இந்தியர்களின் பாரம்பரிய கிறிஸ்துமஸ் உணவு வகைகளான கோழி வறுவல் (chicken roast) அல்லது வான்கோழி வறுவல் (turkey roast) போன்றவை விற்பனையில் முக்கியமானவை" என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT