ADVERTISEMENT

மாணவர் வழிகாட்டி: பி.ஏ. பொருளாதாரம் படிச்சாலும் உயரலாம்! #13

07:05 AM Sep 18, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவிட்-19 தாக்கத்தால் உலக நாடுகள் பலவும் பொருளாதார ரீதியில் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. இம்மாதிரியான சூழ்நிலையில் நாட்டின் பொருளாதார செயல்பாடுகளை மீட்டெடுக்கும் பொறுப்பு அனைத்துத் துறைகளுக்கும் இருக்கிறது. குறிப்பாக, பொருளியல் வல்லுநர்களுக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது.

பொருளாதாரம், வாழ்வில் இரண்டற கலந்து விட்டது. எனினும், மாணவர் என்ற அளவில் அவர்களுக்கு மேல்நிலையில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும்போதுதான் அதைப்பற்றிய அடிப்படை பாடமே தொடங்குகிறது எனலாம். அதுவும், மேல்நிலை வகுப்பில் கணிதம், அறிவியல் பாடப்பிரிவுகளைக் கடந்து குரூப்-3 எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பொருளியல் பாடம் அறிமுகம் ஆகிறது.

பொதுவாகவே மூன்றாவது பாடப்பிரிவை தெரிவு செய்வோரில் பலரும், உயர்கல்வி என்று வரும்போது பி.காம்., பட்டப்படிப்பிற்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். எந்தளவுக்கு பி.காம்., படிப்பிற்கு வேலைவாய்ப்பு இருக்கிறதோ, அதே அளவுக்கான வேலைவாய்ப்புகளும், வளமான எதிர்காலமும் பி.ஏ., பொருளாதாரம் படிக்கும் மாணவர்களுக்கும் இருக்கிறது. இதை நாம் ஆரம்பத்தில் இருந்தே இந்த தொடரில் சொல்லி வருகிறோம். எந்த படிப்பும் மோசமானது அல்ல; எல்லா படிப்புக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கிறது. பொருளியலும் அப்படித்தான்.

பிளஸ்-2 கலைப்பிரிவு மாணவர்களுக்கு, பி.ஏ. தொகுதியில் மொழிப்பாடம் முதல் ஏராளமான பாடப்பிரிவுகள் இருக்கின்றன. இப்போது நாம் பொருளாதாரம் படிப்பிற்கான வாய்ப்புகள் குறித்து காணலாம்.

பாடப்பிரிவு: பி.ஏ., பொருளாதாரம்

கால அளவு: 3 ஆண்டுகள்

தகுதி: பிளஸ்-2 தேர்ச்சி. கலைப்பிரிவில் பொருளாதாரத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

இணையான படிப்புகள்: பிளஸ்-2 முடித்து இளங்கலை பொருளாதாரம் படிக்க விரும்புவோர், அத்துடன் பி.ஏ., வணிக பொருளாதாரம், பி.எஸ்சி., கணித பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுகளையும் எடுத்து படிக்க முடியும். இவை மூன்றுக்கும் சின்னச்சின்ன வேறுபாடுகள் இருக்கின்றன. அவற்றை புரிந்து கொண்டு படித்தாலே போதுமானது.

பி.ஏ. பொருளாதாரம்: பொருளாதாரத்தில் அடிப்படைகள், கோட்பாடுகள், பயன்பாடுகள் ஆகியவற்றை மையமாக கொண்ட பாடமாகும்.

பி.ஏ. வணிக பொருளாதாரம்: இது நிறுவன நடத்தை, நிதி மேலாண்மை, செலவு கணக்கியல் வணிக தொடர்பியல், சந்தைப்படுத்துதல் ஆகிய கூறுகளை உள்ளடக்கியதாகும்.

பி.எஸ்.சி. கணித பொருளாதாரம்: இப்படிப்பில் நடைமுறை பாடங்கள் மட்டுமின்றி, புள்ளியியல், கணிதம் ஆகியவற்றை விரிவாக படிக்கலாம்.

சேர்க்கை நடைமுறை: அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., பொருளியல் பயிற்றுவிக்கப்படுகிறது. இக்கல்லூரிகளில் சேர பிளஸ்2வில் பெற்ற மதிப்பெண்கள் போதுமானது.

மேலும், புது டெல்லியில் உள்ள இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத்தின் மூலம் நிதியுதவி பெறும் நிறுவனமான மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகானாமிக்ஸ் (எம்எஸ்இ) கல்வி நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளைக் கொண்ட ஒருங்கிணைந்த எம்.ஏ., பொருளாதாரம் படிப்பில் சேர்ந்து பயிலலாம். இதில் முதல் மூன்று ஆண்டுகள் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது. அதன்பிறகு இரண்டு ஆண்டுகள், மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் நிறுவனத்திலும் பயிலலாம். இக்கல்வி நிறுவனத்தில் சேர இந்திய அளவில் நடத்தப்படும் நுழைத்தேர்வில் வெற்றி பெறுவது அவசியம்.

பொருளியல் துறை என்பது வாழ்வின் தவிர்க்க முடியாத பேரங்கமாக திகழ்கிறது. கிராமப்புற வளர்ச்சி, புள்ளியியல், உள்நாட்டு உற்பத்தி, வங்கித்துறை, நிதி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளுடன் நெருக்கிய தொடர்புடையது என்பதால், இத்துறைக்கு எல்லா காலத்திலும் மவுசு குறைவதே இல்லை.

படிப்புக்கான செலவு: அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ. பொருளாதாரம் படிப்பு வழங்கப்படுவதால், பெரும்பாலும் செலவு மிக மிகக்குறைவு. முதல் தலைமுறை பட்டதாரியாக இருந்தால், பொருளியல் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்குமே படிப்புக்கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்கிறது. ஒரு சாதாரண கல்லூரியில் படிப்பதைக் காட்டிலும், இதற்கென உள்ள தனித்துவமான கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும்போது கூடுதல் திறனை வளர்த்துக்கொள்ள ஏதுவாகிறது.

வேலைவாய்ப்புகள்: பி.ஏ. பொருளியல் படித்து முடித்த பட்டதாரிகளுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. சுய தொழில் முனைவோராகவும் உருவாக முடியும்.

பொதுத்துறை வங்கிகள் மட்டுமின்றி மத்திய, மாநில அரசுகளில் பல துறைகளிலும் போட்டித்தேர்வுகள் மூலம் வேலைவாய்ப்பில் சேரலாம்.

தனியாரைப் பொருத்தவரை தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், பன்னாட்டு மற்றும் வணிக நிறுவனங்கள், பங்கு பரிவர்த்தனைகள், சந்தை ஆய்வுத்துறை உள்ளிட்ட பல துறைகளிலும் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. மேலும், நிறுவன மற்றும் வாடிக்கையாளர் சேவை மேலாளர், சந்தை ஆய்வாளர், பொருளாதார ஆலோசகர், பொருளாதார முன்கணிப்பாளர், பொருளாதார மற்றும் சமூக தொழில் முனைவோர், இழப்பீடு மற்றும் பெனிஃபிட் மேலாளர், கடன் மற்றும் நிதி ஆய்வாளர் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளும் உள்ளன. பிஏ பொருளியல் படித்த தனித்திறன் உள்ள ஒருவரால் தனக்குத்தானே வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதோடு, மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க முடியும் என்பது இப்படிப்பின் மற்றொரு சிறப்பு அம்சம் ஆகும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT