ADVERTISEMENT

மாணவர் வழிகாட்டி: சிஎம்ஏ படிப்புக்கு சிறப்பான எதிர்காலம்! #3

06:02 AM Aug 03, 2020 | rajavel

ADVERTISEMENT

பிளஸ்-2 முடிச்சாச்சு. நேற்று சிறப்பாக இயங்கிய துறை இன்று வரவேற்பு குறைந்திருக்கும். ஆனால் சில துறைகளுக்கு எப்போதும் சந்தையில் மவுசு குறைவதில்லை. அப்படியான துறைகளில் ஒன்றுதான், தணிக்கைத்துறையும். முந்தைய பகுதியில் சிஏ (CA) படிப்பின் முக்கியத்துவம் குறித்து பார்த்தோம். இப்போது அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் சி.எம்.ஏ. (CMA) படிப்பின் முக்கியவத்துவம், சந்தையில் அத்துறைக்கான தேவை குறித்து பார்க்கலாம்.

ADVERTISEMENT

சிஎம்ஏ என்றொரு படிப்பும் இருக்கிறதா? இதுவும் தொழில் படிப்புதானா?

இரண்டு வினாக்களுக்கும் ஒரே பதில், ஆம் என்பதுதான். பட்டய கணக்காளர் (சிஏ) படிப்பு எந்தளவுக்கு மிகவும் தனித்துவம் வாய்ந்த தொழில்படிப்போ அதற்கு சற்றும் குறைவில்லாதது சிஎம்ஏ எனப்படும் செலவு மற்றும் மேலாண்மைக் கணக்காயர் படிப்பு ஆகும். இதை ஆங்கிலத்தில், Cost and Management Accountant' (காஸ்ட் அன்டு மேனேஜ்மென்ட் அக்கவுண்டண்ட்) எனலாம். இந்தியாவில் மிக உயரிய பாடப்பிரிவுகளுள் சிஎம்ஏ தொழிற்படிப்பும் ஒன்றாகும்.

இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட் அண்டு மேனேஜ்மென்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா என்பது ஒரு தன்னாட்சி பெற்ற, சட்ட ரீதியான நிறுவனம். சுருக்கமாக ஐசிஎம்ஏஐ. இந்நிறுவனம், 1959ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி, இந்திய பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி உருவாக்கப்பட்டது. அப்போது முதல் இந்த ஐசிஎம்ஏஐ நிறுவனம் நாட்டின் முன்னேற்றத்திற்கும், தொழில்துறை வளர்ச்சிக்கும் அளப்பரிய சேவைகளை வழங்கி வருகிறது. இதுவரை 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிஎம்ஏக்களை உருவாக்கியுள்ளது. 3 லட்சத்திற்கும் மேற்பட்ட சிஎம்ஏ மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்து வருகிறது.

சி.எம்.ஏ.,க்களுக்கு இப்போதும் எதிர்காலம் இருக்கிறதா?

இப்படியொரு வினாவே தேவை இல்லாதது. ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், நம் நாட்டின் தொழில்துறைகளுக்கும், அரசுத்துறை பணிகளுக்கும் இன்றைய நிலையில்கூட இன்னும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட சி.எம்.ஏ.,க்கள் தேவைப்படுகின்றனர். உலகம் முழுவதும் சுமார் இரண்டரை கோடி சிஎம்ஏ., வல்லுநர்களுக்கு உடனடி தேவை இருக்கிறது. இதன்மூலம், இந்த பாடப்பிரிவுக்கு உள்ள முக்கியத்துவம் மற்றும் தேவையை நீங்கள் (மாணவர்கள்) புரிந்து கொள்ள முடியும்.

பிளஸ்-2 முடித்துவிட்டு நேரடியாக சிஎம்ஏ படிப்பில் சேர முடியுமா? கல்வித்தகுதிகள் என்னென்ன?

தாராளமாக படிக்கலாம். ஏற்கனவே சிஏ படிப்பு பற்றி இத்தொடரில் பார்த்துள்ளோம். அதற்கு என்னென்ன கல்வித்தகுதியோ அதேதான் சிஎம்ஏ படிப்புக்கும் அடிப்படைத் தகுதிகள். அதாவது, பிளஸ்2வில் தேர்ச்சி பெற்ற யார் வேண்டுமானாலும் சிஎம்ஏ படிப்பை தேர்வு செய்து படிக்கலாம். சொல்லப்போனால், பிளஸ்-2வில் எந்த பாடப்பிரிவை எடுத்துப் படித்து இருந்தாலும் இப்படிப்பில் சேரலாம். பிளஸ்2 மட்டும் தேர்ச்சி பெற்றவர்கள் சிஎம்ஏ படிப்பில் முதலில் அடிப்படை நிலை எனப்படும் பவுண்டேஷன் தேர்வு எழுத வேண்டியது அவசியம். பட்டப்படிப்பு முடித்தவர்கள் சிஎம்ஏ தொழில்படிப்பில் நேரடியாக இண்டர்மீடியேட் பிரிவில் சேர்ந்து பயில முடியும்.

சிஏ படிப்பை போல இதிலும் பவுண்டேஷன் கோர்ஸ் இருக்கிறதாக புரிந்து கொள்ளலாமா?

ரொம்ப சரியாக சொன்னீர்கள். ஆனால் எல்லோருமே பவுண்டேஷன் கோர்ஸில் சேர்ந்து பயில தேவையில்லை. நாம் மேலே சொன்னது போல, பிளஸ்-2 முடித்தவர்கள் சிஎம்ஏ படிப்பில் சேர்வதற்கு முன்பு, சிஎம்ஏ பவுண்டேஷன் கோர்ஸில்தான் சேர முடியும். சிஎம்ஏ பவுண்டேஷன் என்பதுதான் இப்படிப்பின் அடிப்படை நிலை. இவற்றில் மொத்தம் நான்கு தாள்கள் உள்ளன. தலா 100 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால்தான் தேர்ச்சி பெற முடியும். நான்கு பாடங்களையும் சேர்த்து சராசரியாக 50 சதவீத மதிப்பெண்கள் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.


பவுண்டேஷனுக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும்?

பவுண்டேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்ததாக இண்டர்மீடியேட் பிரிவில் சேரலாம்.

ஒரு பி.எஸ்சி., மாணவரால் சிஎம்ஏ படிப்பில் சேர முடியுமா?

நிறைய மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இப்படியொரு சந்தேகம் இருக்கிறது. பி.காம்., எம்.காம்., போன்ற வணிகவியல் பட்டப்படிப்புகள் மட்டுமின்றி எந்த ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்களும் சிஎம்ஏ தொழில்படிப்பில் நேரடியாக இண்டர்மீடியட் பயிற்சியில் சேர்ந்து படிக்கலாம்.

சிஎம்ஏ - இடைநிலை (இண்டர்மீடியேட்):

இடைநிலைப் பிரிவில் மொத்தம் 8 பாடங்கள் உள்ளன. அவை குரூப்1, குரூப்2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் தலா நான்கு பாடங்கள் உள்ளன.


இறுதிநிலை தேர்வுகள் எப்போது எழுதலாம்?

இண்டர்மீடியட்டில் தேர்ச்சி பெற்றவர்கள், குறைந்தபட்சம் 6 மாதங்கள் பயிற்சி (மொத்த பயிற்சிகாலம் 3 ஆண்டுகள்) முடித்தபின், இறுதிநிலைத் தேர்வை எழுதலாம். இறுதிநிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மீதமிருக்கும் இரண்டரை ஆண்டுகால பயிற்சியைத் தொடரலாம்.

இறுதிநிலைத் தேர்வுகள்:

இவற்றிலும் மொத்தம் 8 தாள்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 100 மதிப்பெண்கள் கொண்டது. இந்த 8 பாடங்களும், தலா 4 பாடங்கள் வீதம் குரூப்1 மற்றும் குரூப்2 என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேவை. ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு பகுதியிலும் சராசரியாக 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருத்தல் அவசியம்.

இதர பயிற்சிகள் என்னென்ன?

3 ஆண்டுகள் களப்பயிற்சி மட்டுமின்றி, வேறு கட்டாய பயிற்சிகளும் சிஎம்ஏ பயிலும் மாணவர்களுக்கு உண்டு. அவை...

* 3 நாட்கள் கொண்ட கம்யூனிகேசன் மற்றும் மென்திறன் பயிற்சி

* 100 மணி நேரம் கொண்ட கட்டாய கணினி பயிற்சி

* 7 நாள்கள் கொண்ட இண்டஸ்ட்ரி ஓரியண்ட் பயிற்சி

* 15 நாள்கள் கொண்ட மாடுலர் டிரெயினிங் பயிற்சி

வேலைவாய்ப்புகள் பற்றி சொல்லுங்களேன்?


சிஎம்ஏ தேர்ச்சி பெற்றவர்கள், நேரடியாக அமெரிக்காவில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அக்கவுன்டண்ட்ஸ் அமைப்பில் உறுப்பினராக சேரலாம். உலகின் எந்த மூலையிலும் பணியாற்றலாம். அல்லது பட்டய கணக்காளர், மருத்துவர், வழக்கறிஞர் போல சுயமாகவும் பயிற்சி செய்யலாம்.

அரசு மற்றும் தனியார் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் தலைவர், நிர்வாக இயக்குநர், தலைமை நிதி அதிகாரி, தலைமைச் செயல் அதிகாரி, நிதிகட்டுப்பாட்டு அலுவலர், நிதி ஆலோசகர், தலைமை உள்தணிக்கை அதிகாரி, பங்கு தணிக்கையாளர், தடயவியல் தணிக்கையாளர், சமகால தணிக்கையாளர், விலை நிர்ணய ஆலோசகர் என பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றும் வாய்ப்புகள் உள்ளன. தொழில்துறையிலும், மறைமுக வரி விதிப்புகளிலும் சிஎம்ஏக்களின் பங்கு இன்றியமையாதது ஆகும்.

மேலும் கலால் மற்றும் சுங்கத்துறை, நிதி அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், மத்திய போக்குவரத்து அமைச்சகம், நபார்டு வங்கி, டிராய், டிஏவிபி, ஐஆர்டிஏ, ரிசர்வ் வங்கி, ஜவுளித்துறை, பத்திரப்பதிவுத்துறை, மருந்து விலை நிர்ணய ஆணையம் உள்ளிட்ட துறைகளிலும் சிஎம்ஏக்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

சிஎம்ஏ முடித்தவர்களுக்கு ஐசிஎம்ஏஐ நிறுவனமே வளாகத்தேர்வு மூலம் வேலைவாய்ப்புகளையும் பெற்றுத்தருகிறது.

இதற்காக தனியாக ஒரு வலைதளம் (www.icmai.in) இயங்குகிறது. குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, அதில் சிஎம்ஏக்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்து தகவல்களும் இத்தளத்தில் வெளியிடப்படுகின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT