ADVERTISEMENT

தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு -பகுதி 1

05:18 AM Feb 12, 2018 | santhoshkumar

ADVERTISEMENT

முடியாட்சி காலத்திலேயே ஜனநாயகத்தின் மீதான பார்வை தமிழகத்திற்கு இருந்துள்ளது. சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட குடவோலை முறை என்பது இன்றைய தேர்தல் முறைகளுக்கு ஒரு முன் னோடியாக இருந்திருப்பதை கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது. ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்ற அரசவை நிறுவனங் கள் முடியாட்சிக்குள் முளைவிட்ட ஜனநாயகக் குருத்துகள் எனலாம்.

ADVERTISEMENT


பிரிட்டிஷாரின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் தமிழகம் தேர்தலை சந்தித்தது. இதில் வாக்களிக்கும் உரிமை கொண்ட குடிமக்களாக வரிசெலுத்துவோர், பட்டம் பெற்றோர் உள்ளிட்டவர்கள் இருந்தனர். வெள்ளையர்கள் ஆட்சியில் மாண்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் காரணமாக 1919Š-ஆம் ஆண்டில் இரட்டையாட்சி முறை கொண்டு வரப்பட்டது. அரசியல் சட்டமாக நடை முறைக்கு வந்தது. இதன்படி ஆளுநருக்கு மட் டுமே பதிலளிக்கக்கூடிய உயரதிகாரிகள் ஒரு பக்கம் ஆட்சி செய்வார்கள். அதே நேரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட மன்றத்திற்குக் கட்டுப்பட்ட அமைச்சர்கள் கொண்ட அவை இன்னொரு பக்கம் ஆட்சி செய்யும் .

அப்போது நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் கிடையாது. தமிழர்கள் வாழும் பகுதியுடன் ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றின் சில பகுதிகளும் இணைந்து சென்னை மாகாணம் என அழைக்கப்பட்டு வந்தது. 1920-ஆம் ஆண்டு முதல் மாகாணத் தேர்தல் நடந்தது. இரட்டையாட்சி முறையை ஏற்க வில்லை என காந்தியடிகள் அறிவித்ததால், காங்கிரஸ் கட்சி இத்தேர்தலில் போட்டியிட வில்லை. இத்தேர்தலில் நீதிகட்சி வெற்றி பெற்றது. சென்னை மாகாணத்திற்கான முதல் அமைச்சரவையில் ஏ.சுப்பராயலு ரெட்டியார் முதலமைச்சராக (அப்போது அதற்கு பிரிமியர் எனப் பெயர்) பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின் சில நாட்களில் சுப்பராயலு மரணமடைந்ததால், பனகல் அரசர் என அழைக்கப் பட்ட இராமராயநிங்கார் முதலமைச்சரானார். 1923-ல் நடைபெற்ற இரண்டாவது தேர்தலிலும் இவரே முதல்வரானார். மருத்துவக் கல்லூரியில் (எம்.பி.பி.எஸ்) ஒரு மாணவன் படிக்க வேண்டுமென்றால் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை அப்போது இருந்தது. இதனை உடைத்தெறிந்த வர் பனகல் அரசர். இதன் மூலமாக பிற்படுத்தப் பட்ட-தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந் தவர்களும் பெண்களும் மருத்துவக் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு உருவானது பனகல் அரசரின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப் பட்ட மிக முக்கியமான சீர்திருத்தம், அற நிலையப் பாதுகாப்புச் சட்டம். சரியான பராமரிப்பின்றி தனிப்பட்டவர்களால் ஆண்டு அனுபவிக்கப்பட்டு வந்த கோவில் சொத்து களை இச்சட்டத்தின்கீழ் அரசாங்கத்தின் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தார்.

சென்னை மாகாணத்திற்கான மூன்றாவது தேர்தல் 1927-ஆம் ஆண்டு நடைபெற்றது. இத் தேர்தலில் நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தோல்வியடைந்தனர். அக்கட்சியின் ஆதரவுடன் சுயேட்சைகளின் ஆட்சி நடைபெற்றது. முதலமைச்சர் சுப்பராயனுடன் எஸ்.முத்தையா முதலியாரும் எஸ்.ஆர். சேதுரத்தினமய்யரும் அமைச்சரானார்கள். முத்தையா முதலியார் வகுப்புவாரி பிரதிநிதித்துவ வேலைவாய்ப்பு முறையை சட்டமாகக் கொண்டு வந்தார். 1929-ல் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஒவ்வொரு சமுதாயத்தின்மக்கள்தொகையின் அடிப்படையில் வேலையினை பங்கீட்டு அளிக்கும் சட்டமாக இது அமைந்தது. 1937 வரை நீதிக்கட்சி ஆட்சி நீடித்தது.


1937-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் பங்கேற்று வெற்றி பெற்றது. ஜூலை 17-ஆம் நாள் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் சுதந்திரப் போராட்ட வீரரும் வழக்கறிஞரும் ராஜாஜி என அழைக்கப்படுவருமான ராஜாஜியின் ஆட்சிக்காலத்தில் அனைத்து சமுதாயத்தினரும் கோவிலுக்குள் நுழைந்து வழிபடுவதற்கான ஆலயப் பிரவேசச் சட்டம் நிறைவேற்றப் பட்டது. உழவர் கடன் நிவாரணச் சட்டம், கைத்தொழில் பாதுகாப்புச்சட்டம் ஆகியவை இவரது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டங்களாகும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர் களுக்கும் இந்தியைக் கட்டாயப் பாட மாக்கினார் ராஜாஜி. இந்த மொழியாதிக் கத்தை எதிர்த்து பெரியார்-அண்ணா தலை மையில் தமிழகத்தில் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. பலர் சிறை சென்றனர். இரண்டாம் உலகப்போரில் இந்தியாவை பிரிட்டிஷ் அரசு வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தியதைக் கண்டித்து காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்தது.

1946-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. டி.பிரகாசம் 1946 ஏப்ரல் 30-ஆம் நாள் முதலமைச்சரானார். இவரையடுத்து, ஓமந்தூர் ராமசாமி ரெட்டி யார் முதல்வரானார். இந்தியா சுதந்திரமடைந்த போது சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் ஓமந்தூரார்தான். அவர் ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வந்தார். 1949-ல் சென்னை மாகாண கவுன்சிலுக் கான தேர்தல் நடந்தது. இதிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. குமாரசாமி ராஜா முதல்வரானார். சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெறுகிறவரை இவரே முதல்வர் பொறுப்பினை வகித்தார்.


இந்திய நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் 1952-ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லாதபோதும், பல கட்சி களின் ஆதரவுடன் 1952-ஆம்ஆண்டு ஏப்ரல் 10-ஆம் நாள் சென்னை மாகாண முதல்வராக ராஜாஜி பதவியேற்றார். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தில் நிலவி வந்த உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதில் ராஜாஜி அக்கறை செலுத்தினார். பண்ணையாள் பாது காப்பு சட்டத்தின் மூலமாக விவசாயத் தொழி லாளர்களுக்குநலன் விளைவித்தார் ராஜாஜி. அவருடைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வித் திட்டம் பெரும் சர்ச்சையையும் போராட்டத்தையும் உண்டாக் கியது. இதனால் 1954-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் நாள் முதல்வர் பதவியிலிருந்தும் காங் கிரஸ் கட்சியிலிருந்தும் ராஜாஜி விலகினார்.

அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல் வராகப் பொறுப்பேற்ற காமராஜர் 1954 முதல் 1963 வரை தமிழகத்தின் முதல்வராகப் பணி யாற்றினார் 1957, 1962 தேர்தல்களில் இவ ரது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியே வெற்றி பெற்றது. இலவச கல்வி, மதிய உணவுத் திட்டம், தமிழ் ஆட்சிமொழி சட்டம்,. வைகை நீர்த்தேக்கம், அமராவதி- சாத்தனூர் -கிருஷ்ண கிரி -மணிமுத்தாறு-ஆரணியாறு நீர்த்தேக்கங் கள் உருவாக்கம், குந்தா நீர் மின்திட்டம் ஆகியவை இவரது ஆட்சியில் உருவானவை யாகும். மத்திய அரசுடன் வாதாடி,நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத் மிகுமின் நிலையம், ஆவடி கனரக வாகன தொழிற் சாலை, ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை ஆகியவற்றைக் கொண்டுவந்தார். இவரது ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலம் எனப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT