ADVERTISEMENT

"நத்திப் பிழைக்கிறான்" என்பதன் அர்த்தம் தெரியுமா??? -கவிஞர். மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #9

04:41 PM Jun 22, 2018 | kamalkumar

ஒரு சொல்லின் ஏதேனும் ஓர் அசை அதனோடு தொடர்புடைய பொருளைத்தான் தரும் என்பது சொற்பொருளாய்வின் அடிப்படை. அத்தகைய அடிப்படையான சொல்லுருபைக் கொண்டே அடுத்தடுத்த சொற்களை ஆக்கிக்கொண்டே சென்றோம். இப்படியெல்லாம் சொற்கள் தோன்றலாம் என்ற மனப்பதிவு நம்முடைய மொழிமனத்திற்குள் கட்டமைக்கப்பட்டிருக்கும். மொழி மனம் என்பது உயிர்க்குள் இலக்கும் நினைவாற்றலோடும் தனக்குள்ளாக எண்ணும் தன்மையோடும் தொடர்புடையது.

ADVERTISEMENT


ADVERTISEMENT

நாம் பேசாதிருக்கும்போது உள்ளுக்குள் புரளும் எண்ணங்கள் சொற்களைக்கொண்டே உருவாவதை நாம் ஏற்றாக வேண்டும். அதனால்தான் நாம் எண்ணுவது நேரடியாக நம் மொழி நினைவைக் கட்டமைக்கிறது. எண்ணங்களைப் போலவே சொற்கள் தோன்றுகின்றன. நாம் சினத்தோடு இருக்கையில் கடுமையான சொற்களும், இயல்பாக இருக்கையில் தண்மையான சொற்களும் வெளிப்படுகின்றன.

சொல்லின் ஓர் அசை ஓரிடத்தில் ஒரு பொருளைத் தந்தால் அது பயன்படுத்தப்படும் பல இடங்களிலும் அதே பொருளிலோ அதற்கு நெருக்கமான பொருளிலோதான் வழங்கப்படும். இங்கே அசை என்று நான் குறிப்பிடுவது சொல்லின் பொருளாக அமையும் ஒரு பகுதியைத்தான். ஓர் அசைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்கள் வழங்கப்படுகையில்தான் அது வழங்கும் பொருளிலிருந்து மாறுபடும். ஓர் எடுத்துக்காட்டின் வழியாக இதை விளங்கிக்கொள்ள முயல்வோம்.

“நத்திப் பிழைக்கிறான்” என்று நாம் சொல்வதுண்டு. யாரை அப்படிச் சொல்வோம்? யாரையேனும் அண்டியிருந்து, அவர் சொல்கின்றவற்றுக்கெல்லாம் இணங்கிப்போய், அவருடைய மனத்தைக் குளிர்வித்து, கைகால்களை அமுக்கிவிட்டுப் பிழைப்பதைத்தான் அவ்வாறு சொல்கிறோம். ஒருவரைக் குளிர்வித்துப் பிழைத்தல் என்பது அதன் தெளிவான பொருள். ஆனால், நத்துதல் என்பதற்கு விரும்புதல் என்ற பொருளையும் அகராதி சுட்டுகிறது. அகராதி தொகுத்தவர்கள் நத்துதல் என்பதற்குக் “மனம் மகிழுமாறு ஒருவரைக் குளிர்வித்தல்” என்ற பொருளை அடையமுடியவில்லை. ஏனென்றால் அவர்களுடைய ஆற்றலும் ஒரு வரம்புக்குட்பட்டதே. இவ்வாறு ஒரு வினைச்சொல்லுக்குள் மறைந்துள்ள பற்பல பொருள்களையும் அகராதி தொகுத்தவர்களால் அணுகவே முடியவில்லை என்பதற்கு இஃது ஒரு சான்று.

நத்துதல் என்பது குளிர்வித்தல், ஈரத்தன்மை, நீர்ப்பொருள் ஆகியவற்றைக் குறிப்பிடும் பல இடங்களில் சொல்லுருபாகிப் பயில்வதைக் காணலாம். நத்தம் புறம்போக்கு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஓர் ஊரின் ஒதுக்குப்புறமான நிலப்பகுதி. பெரும்பாலும் அது பயனற்றுக் கிடக்கும். நத்தம் என்பது என்ன? கோடையில் காய்ந்து கிடக்கும் பயன்பாடற்ற நிலப்பகுதியில் மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். நல்ல நிலமாக இருக்கிறதே என்று இறங்கிப் பயன்படுத்திவிட முடியாது. அதை அவ்விடத்தின் சுற்றுப்பகுதிகளோடு ஒப்பிட்டால் தாழ்வான பகுதியாக இருக்கும். மழைபெய்தால் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாகிவிடும். அதனால்தான் நத்தம் புறம்போக்கு நிலங்களைப் பயன்படுத்தாமல் விட்டுவிடுவார்கள். ஈரம், மழை, வெள்ளம் ஆகியவற்றோடு தொடர்புடைய சொல்தான் நத்தம் என்பது. அகராதியில் நத்தம் என்பதற்கு இத்தகைய பொருளைக் காண முடியவில்லை.

மதுரையில் பழங்காநத்தம் இருக்கிறது. நான் முகநூலில் நத்தம் என்பதற்கான அவ்விளக்கத்தைச் சொன்னதும் மதுரை நண்பர் ஒருவர் “ஆம் அண்ணா… மதுரையில் மழை பெய்தால் முதலில் வெள்ளக்காடாகும் பகுதி பழங்காநத்தம்தான்” என்றார். திருச்செங்கோட்டுக்கு அருகில் கூத்தாநத்தம், பிள்ளாநத்தம், கோழிக்கால்நத்தம் ஆகிய பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் வெள்ளக் காலங்களில் கரைபுரண்டு ஓடும் பேரோடைகளும் நீர்தேங்கும்படி பல குட்டைகளும் இருக்கின்றன.

நத்தை என்ற உயிரியை அறிவோம். அது நீர்வளமுள்ள நிலத்தில்தான் ஊர்ந்து திரியும். நத்தையை நசுக்கினால் தண்ணீர்தான் மிஞ்சும். தன் உடலே தண்ணீராகக் கொண்ட உயிரினம் அது. அதனால்தான் அதற்கு நத்தை என்ற பெயர் வந்தது. தண்ணீரில் வாழும் சங்குவகை உயிர்களும் நத்தைகளே.

நத்துதல், நத்தி என்பனவற்றிலிருந்துதான் நதி என்ற சொல்லும் பிறந்திருக்க வேண்டும். நீர் புரண்டு நகரும் இயற்கைப் பேருருவம்தான் நதி. நத்து, நத்தம், நத்தை போன்ற தமிழ்ச்சொற்கள் நீர்தொடர்பான பொருள்வழியில் இருக்கையில் நதி என்பது தமிழ்த்தோற்றுவாய் கொண்டதாகத்தான் இருக்க முடியும். அச்சொல் தமிழில் தோன்றி வடமொழிக்குச் சென்றிருக்க வேண்டும்.

முந்தைய பகுதி:

நூறு கதவுகளைத் திறக்கும் ஒற்றைத் திறவுகோல் -கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #8

அடுத்த பகுதி:

உழவாரம், சலவாரம் என்றால் என்ன தெரியுமா?.. -கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #10

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT