ADVERTISEMENT

தமிழாய் நீ ஜொலிப்பாய் கலைஞரே! -மலேசிய தமிழரின் இரங்கல் பா...

04:33 PM Aug 13, 2018 | kamalkumar

திமுக தலைவர் கலைஞரின் மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மலேசியா வாழ் தமிழரான தேவேந்திரன் எழுதிய இரங்கல் பா...

ADVERTISEMENT


ADVERTISEMENT

தமிழ் நிலத்தில்
தமிழ் கொடியேற்றிய
தமிழ் இறக்கப்பட்டதா?

மூப்பான வயதிலும்
மூச்சிரைக்க தமிழானவன்
முடிவுரை ஆனதா..?

நெஞ்சுக்குள் நீதியில்
நெஞ்சம் நிறைந்த இனம்
நொசித்துப் போனதா..!

மரணமில்லா பெருவாழ்வில்
மரணத்தைத் தேடியதா - உன்
'மான'த் தமிழ்...!

தமிழைச் சுற்றிய பகைவனுக்குள்
தலைநிமிர்ந்தே உயிர்க்கொடுத்த
தங்கத் தமிழ் பாடிய சங்கத் தமிழே..!

விம்முகின்ற இதயத்தில்
விடையும் இல்லை
விலையும் இல்லை

கானகத்தில் தமிழ் கேட்கும்
காத்திரு வருவேன் என்றாயோ
கன்னித்தமிழ் நாயகனே

தென்பாண்டிச் சீமையிலும்
தெளித்த
நீரோடையாய்
தெளித்து சந்தனம் பூசினாயே...

கோடான கோடி தமிழிதயம்
'கோ' நீதான் என்றதே
கோலோச்சிய தமிழகம் நீதானே...

சந்தனப் பேழையில்
சந்தனமாய் படுத்துறங்கும்
சரித்திரம் காண சென்றாயோ...

'அண்ணா'வின் இதயத்தை
அன்றே இரவலாக்கிய - உன்
அசாத்திய தந்திரம் புரிகிறது

ஒருவிரல் காட்டியவனின்
ஓங்கா புகழை திருடச் சென்றாயோ..?
ஓங்கும் தமிழை மீட்க போனாயோ?

உன் பேர் சொல்லும் தமிழை
'உடன்பிறப்பே' என்றழைப்பாயே
உடன் வரவா? உழைக்கவா?

மந்திரிகுமாரியும் இராஜகுமாரியும்
மனோகரனும் பராசக்தியும்
மானத் தமிழனை விழிக்குமே..

எழுத்துக்கு எழுத்தானாய்
ஏந்திவரும் பகைவனுக்கு
எழுச்சியாய் முழங்கினாய்

பேசிய நாளிலும் பேசிவைத்தாய்
பேசாத நாளிலும் பேசப்பட்டாய்
பேரின்ப தமிழாய் பேறுபெற்றாய்...

பாசுரத் தமிழில் தாலாட்டி
பாசத் தொண்டனையும்
பாரித் தமிழில் பாமாலை சூட்டினாய்...

தந்தை பெரியாரின் குடியரசில்
தலித்தமிழாய் குடிபுகுந்தாய்
தலைவனாகவே உருவெடுத்தாய்...

காஞ்சித் தலைவனுக்கு கரமானாய்
காலமெல்லாம் களங்கரை விளக்காகி
காவியத் தமிழை கரைச் சேர்ந்தவன் நீ...

கடலுக் கப்பால் கரை உண்டு - அந்தக்
கடலே கரையானால் - எங்கே போய்
கால் வைப்பேன் என்ற தமிழனுக்கு...

காலமெல்லாம் காவல்காரன் ஆனாய்
களம் நின்றாய் - வென்றாய்
காலச் சரித்திரத்தில் நிலைபெற்றாய்...

திருவாரூர் தமிழ்த்தேராய்
திருக்குவளையில் அவதரித்தாய்
தீந்தமிழ் இனத்தில் தீச்சுடரானாய்...

திமுக எனும் மூன்றெழுத்தில்
திரு மு.க.வானாய்
திருவள்ளுவனுக்கே
குறளோவியமானாய்...

குங்குமத்தில் சங்கத்தமிழ் படித்து - தமிழ்க்
குமுகாயத்தில் நுழைந்தவன்நான் - உன்
குற்றாலத் தமிழில் நீராடியவன் நான்...

தமிழாய் - தமிழனாய் - செந்தமிழாய்
தங்கத்தமிழில் மூதறிஞனாய்
தமிழாய் நீஜொலிப்பாய் கலைஞரே!

- கு.தேவேந்திரன் (மலேசியா)

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT