ADVERTISEMENT

செவ்வாயின் பிறப்பும்; வைத்தீஸ்வரன் கோவில் சிறப்பும்..! 

01:36 PM Apr 26, 2021 | george@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

"ஒவ்வொரு மனித உடலும் ஆலயம் போன்றது' என்பது சித்தர்களின் வாக்கு. எத்தனை கோடிகள் பணம், பட்டம், பதவி, செல்வாக்கு என்று ஆடம்பரமாக வாழ்ந்தாலும், நோய்நொடி இல்லாத வாழ்க்கையே சிறந்த செல்வம் என்பதை பலர் உணர்வதில்லை. தேவைக்குமீறி பணம் தேடி அலைகிறார்கள். அதனால் ஏதாவது ஒருநோய் ஏற்பட்டு அவர்களை வாட்டுகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு வைத்தியராக இருந்து அருள்புரிகிறார் தையல்நாயகி சமேத வைத்தீஸ்வர சுவாமி.

மயிலாடுதுறைக்கும் சீர்காழிக்கும் இடையிலுள்ளது வைத்தீஸ்வரன் கோவில். இவ்வூருக்கு புள்ளிருக்குவேளூர் என்ற பெயரும் உண்டு. "புள்' என்றால் பறவை. ஜடாயு என்னும் பறவை ராஜனும், ரிக்வேதமும், வேள் என்ற முருகப்பெருமானும், சூர் என்ற சூரியதேவனும் இவ்வாலய இறைவனை வழிபட்டதால் இவ்வூருக்கு புள்ளிருக்குவேளூர் என்ற பெயர் உருவானது.

இவ்வாலயத்திலுள்ள குளக்கரையில் சதாநந்த முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார். அப்போது குளத்தில் வாழ்ந்த தவளை ஒன்றை பாம்பொன்று விழுங்க முயன்றது. அதைப்பார்த்த முனிவர், பாம்பும் தவளையும் இவ்வாலயக் குளத்தில் வாழக்கூடாதென்று சாபம் கொடுத்தார். அதுமுதல் இந்தக் குளத்தில் பாம்புகள், தவளைகள் வாழ்வதே இல்லையென்று பரவசத்துடன் கூறுகின்றனர் ஊர்மக்கள்.

இவ்வாலய இறைவனுக்கு வைத்தீஸ்வரர் என்று பெயர் உருவாகக் காரணமானவர் நவகிரகங்களில் ஒருவராக விளங்கும் செவ்வாய் எனும் அங்காரகன். பரம்பொருளான இறைவனைவிட்டு உமாதேவியார் நீங்கியிருந்த காலத்தில், சிவபெருமான் யோகநிலையில் இருந்தார். அப்போது அவரது நெற்றிகண்ணிலிருந்து வியர்வைத் துளியொன்று பூமியில் விழுந்தது. அதிலிருந்து ஒரு குழந்தை உருவானது. அந்தக் குழந்தையை பூமாதேவி எடுத்து மங்களன் என்று பெயரிட்டு வளர்த்துவந்தாள்.

அந்த குழந்தை வளர்ந்து சிவபெருமானை நோக்கித் தவமிருக்க ஆரம்பித்தார். அவர் தவயோகநிலையில் இருக்கும்போது அவர் மீது தீப்பிழம்பு கொழுந்துவிட்டெரிந்தது. இதனால் அவருக்கு வெண்குஷ்ட நோய் உருவானது. அப்போது அசரீரி குரல், "இளைஞனே, வைத்தீஸ்வரன் ஆலயம் சென்று அங்குள்ள குளத்தில் ஒரு மண்டலம் நீராடி, இறைவனை வழிபட்டால் உனது ரோகம் குணமாகும்' என்றது.

அதன்படி அக்காரகன் இங்குவந்து சித்திரக் குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டார். சிவனது அம்சத்தில் உருவான அங்காரகனின் நோயைத் தீர்பதற்காக பார்வதிதேவி தைலப் பாத்திரத்தில் சஞ்சீவி வேர்களையும் வில்வ மரத்தடி மண்ணையும் கொண்டு வந்து இறைவனிடம் கொடுக்க, அதை அவர் அரைத்து மருந்தாக்கி வைத்தியராக மாறி அங்காரகன் உடலில் பூசினார். அங்காரகனுக்கு ஏற்பட்ட வெண்குஷ்ட நோய் குணமானது. அங்காரகன் தவத்தை மெச்சிய சிவபெருமான், அவரை நவகிரகங்களில் மூன்றாவது கிரகமாக அமைய வரமளித்தார். தென்கிழக்குநோக்கி அங்காரகனை வணங்குவது மரபு.

அங்காரகன் பற்றிய வேறு சில புராண கதைகளும் கூறப்படுகிறது. அதன்படி பரத்துவாச முனிவருக்குப் பிறந்தது மங்களன் எனும் குழந்தை. அதை பூமாதேவி எடுத்து வளர்த்துவந்தாள். உரிய வயது வந்ததும் பரத்துவாச முனிவரிடம் மங்களனை ஒப்படைத்தாள். முனிவர் மங்களனுக்கு பல கலைகளையும் கற்பித்தார். மங்களனின் நடவடிக்கைகள் முனிவருக்கு பாசத்தை உருவாக்கியது. சிவனைநோக்கித் தவமிருக்குமாறு முனிவர் மங்களனுக்கு ஆலோசனை வழங்கினார். அதன்படி மங்களன் தவம்செய்ய, சிவபெருமான் அவருக்கு கிரகபதவி வழங்கினார் என்றும் கூறப்படுகிறது.

அடுத்து, தன்னை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தை அழிக்க சிவபெருமான் வீரபத்திரரை உருவாக்கி அனுப்பிவைத்தார். வீரபத்திரர் தட்ச சம்ஹாரம் முடித்தும் அவரது கோபம் தனியவில்லை. இதனால் உலகம் நடுங்கியது. அது கண்டு அஞ்சிநடுங்கிய தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் வீரபத்திரரின் கோபத்தைத் தணித்தார். அதனால் வீரபத்திரர் அழகாக உருமாறினார். அவரை அங்காரகனாக மாற்றினார் சிவபெருமான் என்கிறது மச்சபுராணம். வீரபத்திரர் அம்சம் என்பதால் செவ்வாய்க்கிழமை விரதமிருப்பது சிறந்தது. அதிலும் சித்திரை மாத முதல் செவ்வாய்க்கிழமை விரதமிருந்து செவ்வாய் என்கிற அங்காரனை வழிபட்டால் மிகச்சிறந்த பலன் கிடைக்குமென்று கூறப்படுகிறது.

சிவந்த நிறமுடையவர் என்பதால் இவருக்கு செவ்வாய், செம்மீன், லோகிதாங்கன், ரக்தாய தேஷணன், ரக்தவர்ணன், மகாகாயன், மங்களன், தனப்பிரதன், ஹேமகுண்டலி, குணகர்த்தா, ரோககுரு, ரோகநாசணன், வித்யுபிரபன், வரண கரன், காமதன் என பல பெயர்கள் உள்ளன. முருகனுக்கும் அங்காரகனுக்கும் சிலவகை ஒப்புமை உண்டு. சிவபெருமானின் வியர்வையில் உதிர்த்தவர்; சிவந்தமேனி உடையவர்; அழகுத் திருவுருவம் பெற்றதால் குமாரன் என்றும் அழைக்கப்படுகிறார். ஆட்டை வாகனமாகக் கொண்டுள்ளவர்; சக்தியை ஆயுதமாகக் கொண்டவர். இவருக்கு அதிதேவதை பிருத்வி; பிரத்யதிதேவதை க்ஷேத்ரபாலகன். இவருக்கு சிவப்புக் குடை, மேஷக்கொடி. திருமுடி தரித்து தன் பத்தினியோடு முக்கோண மண்டலத்தில் வீற்றிருப்பார். அவருடைய நாடு அவந்தி. பாரத்துவாசர் மரபைக் கோத்திரமாக உடையவர். தெய்வீக ரதத்தில் அமர்ந்து மேருவை வலம் வருவார். மூன்று திருக்கரங்களில் சக்தி, சூலம், கதை ஏந்தியுள்ளார். நான்காவது கரத்தால் அபயம் தருகிறார்.

பழங்காலத்தில் ரோமாபுரியை ஆண்ட ரோமர்கள் செவ்வாயை போர்க் கடவுளாகக் கொண்டிருந்தனர். தங்களுடைய குல முதல்வன் என்று இவரை கோவிலில் வைத்து வழிபாடு செய்தனர். வைத்தீஸ்வரன் கோவில் ஆலயத்தில் செவ்வாய் தனித்த சன்னதி கொண்டுள்ளார். இவ்வாலயத்தில் வைத்தியநாதரின் சன்னிதிக்குப் பின்புறம் நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து, இறைவனின் கட்டளைக்குப் பணிந்து பக்தர்களின் நோய்களையும் தோஷங்களையும் போக்குவதாக ஐதீகம்.

இக்கோவிலுக்குக் கிழக்கில் பைரவர், தெற்கில் விநாயகர், மேற்கில் வீரபத்திரர், வடக்கில் காளி ஆகியோர் காவல் தெய்வங்களாக இருந்து அருள் புரிகின்றனர். தேவராப்பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. ஐந்து பிராகாரங்களைக் கொண்ட இக்கோவில் ஏழு நிலை ராஜகோபுரம் கொண்டது. தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் சிறப்புடன் விளங்கிவருகிறது.

4,448 நோய்களைத் தீர்க்கும் சித்த மருத்துவத்தைக் கண்டுபிடித்த சித்தர் களின் தலைமைப் பீடமாக இந்தக் கோவில் கருதப்படுகிறது. பக்தர்களின் பலவகை நோய்களைத் தீர்ப்பதற்கு புற்றுமண், அபிஷேகத் தீர்த்தம், அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி, வேப்பிலை (இக்கோவிலின் தல விருட்சம் வேம்பு) ஆகியவற்றைக் கலந்து திருச்சாந்து உருண்டை தயாரித்து வழங்கப்படுகிறது. இதை உண்பவர்கள் எத்தகைய நோய்களிலிருந்தும் குணமடைந்து வருகிறார்கள். வெண்குஷ்ட நோய்க்கு சிறந்த நிவாரணமாக இம்மருந்து உள்ளது என்பது இங்குவந்து வழிபடுபவர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இக்கோவிலிலுள்ள கற்பக விநாயகர் பக்தர்களின் எத்தகைய கோரிக்கையையும் நிறைவேற்றும் சக்திகொண்டவராக விளங்குகிறார். அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவான் சந்நிதியில் செவ்வாய் தோஷ நிவர்த்திப் பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்குள்ள முருகப் பெருமான் செல்வமுத்துக்குமரர் என அழைக்கப்படுகிறார். இவருக்கு அர்த்தசாம பூஜையின்போது புனுகு, சந்தனம், பச்சைக் கற்பூரம், எலுமிச்சை, பன்னீர் புஷ்பம், பால், பால்சாதம் ஆகியவற்றைக் கொண்டு விஷேபூஜைகள் செய்யப்படுவது மிகச் சிறப்பு. இத்தல அம்மனான தையல்நாயகியை வழிபடுவதால் குழந்தைகளுக்கு உண்டாகும் பாலாரிஷ்ட தோஷம் நீங்கும். மருத்துவர்கள் மற்றும் மருத்துவக்கல்வி பயிலும் மாணவ- மாணவிகள் ஏராளமானவர்கள் தினசரி வந்து வழிபடும் கோவிலாக இது உள்ளது.

ராமர், ஜடாயு, சுப்பிரமணியர், சூரியன், அங்காரகன் (செவ்வாய்), திருஞானசம்பந்தர், அப்பர், காலமேகப்புலவர், குமரகுருபரர், அருணகிரிநாதர், வடுகநாத தேசிகர் என பல்வேறு தேவர்களும் முனிவர்களும் இவ்வாலய இறைவன் வைத்தீஸ்வரன், அம்பாள் தையல்நாயகியை வழிபட்டுள்ளனர்.

இக்கோவிலில் ஆறுகால பூஜை சிறப்புடன் நடைபெறுகிறது. காலை 6.00 மணிமுதல் நண்பகல் 1.00 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

ஆகமவிதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு செய்வது மரபு. அதனடிப்படையில் தருமபுர ஆதீனத் தின் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்த தேசிகப்பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை யில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்துசமய அறநிலையத்துறை அனுமதியோடு 12-09-2019 அன்று திருப்பணி செய்ய அடிக்கல் நாட்டப்பட்டது. 2021-ல் குடமுழுக்கு நடத்த திட்டமிட்ட நிலையில் "கொரோனா' நோய் பரவல் காரணமாக காலதாமதம் ஏற்பட்டு, தற்போது திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. வரும் 29-04-2021-ல் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு அறநிலையத்துறையின் அனுமதி கேட்டுள்ளதாக ஆலய நிர்வாகத் தரப்பில் கூறுகின்றனர்.

சுமார் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவில் சிதம்பரம்- மயிலாடுதுறை சாலையில் சீர்காழியை அடுத்துள்ளது. ஆலயத் தொடர்புக்கு- தொலைபேசி: 0436 4279423.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT