Skip to main content

கோவில் கதை: மன அழுத்தம் குறைக்கும் நன்னிலம் ஆதிபுரீஸ்வரர்

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

Nannilam adhipureeswarar temple

 

பாவமான மனிதர்களும் பாவம் செய்த மனிதர்களும் முதலில் செல்லும் இடம் கோவில். பக்தி இருப்பவர்கள் பற்றிக்கொள்ளும் முதல் நம்பிக்கை கோவில். ஊரே தங்களைக் கண்டு பயந்தாலும் கடவுளுக்கு அஞ்சும் மனிதர்கள் இங்கு ஏராளம். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் உள்ள கீழ்குடி கிராமத்தில் இருக்கும் ஆதிபுரீஸ்வரர் கோவில் குறித்த சிலிர்க்கும் அனுபவங்களை அந்தப் பகுதி மக்கள் நம்மோடு பகிர்ந்து கொள்கின்றனர்.

 

இந்தக் கோவிலின் நாயகன் ஆதிபுரீஸ்வரர். அம்மன் சௌந்தரநாயகி. கலை நுணுக்கத்துடன் கூடிய அழகிய வடிவுடையாள். கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் நீண்ட காலமாக சிதலமடைந்திருந்த இந்தக் கோவிலுக்கு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது 2009 ஆம் ஆண்டில். இந்தத் தலத்தை காவிரி வளநாடு என்றும் சொல்லலாம். உடல்நலக்குறைவு, மன அழுத்தம், குடும்பப் பிரச்சனைகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக மக்கள் இங்கு வருகின்றனர். இங்கு வந்து பிரார்த்தனை செய்யும் மக்கள் தாங்கள் வேண்டிய அனைத்தும் நிறைவேறியதாகக் கூறுகின்றனர். இந்தக் கோவிலில் வழிபட்டால் திருமணத் தடை, குழந்தையின்மை ஆகியவை நீங்கும் என்கின்றனர் மக்கள். நவகிரகத்தின் அதிபதியான சிவனே இங்கு வீற்றிருப்பதால் இங்கு நவகிரகங்கள் கிடையாது. நவராத்திரி பூஜை, ஆடிப்பூரம் ஆகிய காலங்களில் இங்கு வந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.

 

இந்தக் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு ஊரே செழிப்பாக மாறியது என்கிறார்கள் மக்கள். பங்குனி உத்திரத்தின் போது ஒரு வாரத்திற்கு சூரிய கதிர்கள் சிவனின் மீது படும். அதை நேரில் காண்பது மிகவும் சிறப்பு. கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் கூட இங்கு வந்து பிரார்த்தனை செய்த பிறகு குணமான கதைகள் இருக்கின்றன. ஊர் மக்கள் அனைவரும் இணைந்து இந்தக் கோவிலை சிறப்பான முறையில் பராமரித்து வருகின்றனர். திருமணம் நடக்க வேண்டுபவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், உடல்நலம், செல்வம் பெருக விரும்புபவர்கள் அனைவரும் இந்தத் தலத்திற்கு வந்து ஆதிபுரீஸ்வரரை வழிபட்டுச் செல்லலாம்.

 


 

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.