ADVERTISEMENT

புது வருடம் நலம் புரிய முருகனடி தொழுவோம்!

04:24 PM Apr 13, 2019 | Anonymous (not verified)

காலம் ஓடுவதே தெரியவில்லை. இப்போதுதான் ஆண்டு பிறந்ததுபோல இருக்கிறது. திரும்பிப் பார்ப்பதற்குள் அடுத்த ஆண்டு வந்துவிடுகிறது. இதைப்போலவே சென்ற தமிழ்ப் புத்தாண்டு பிறந்துமுடிந்து, அடுத்த புத்தாண்டு வந்துவிட்டது. தமிழ் ஆண்டுகள் வரிசையில் 32-ஆவது இடத்திலுள்ள "விளம்பி' ஆண்டு இவ்வருடம் சித்திரை 1-ஆம் தேதி பிறக்கிறது. பொதுவாக தமிழ்ப் புத்தாண்டு அன்று மக்கள் அதிகாலையில் நீராடி, நெற்றித் திலகமிட்டு, புத்தாடை அணிந்து, அவரவர் வீட்டிலுள்ள தெய்வத்தை வணங்கி, பின்பு சுவை மிகுந்த உணவுகளை உண்டு, மாலையில் ஏதாவது ஒரு கோவிலில் அல்லது பொது இடத்தில் புதிய பஞ்சாங்கம் படிக்கப்படுவதைக் கேட்டு அவ்வாண்டு நிலவரத்தைத் தெரிந்துகொள்வார்கள். இது காலங்காலமாகவே நடந்துவருகிறது.

ADVERTISEMENT



ஞானம், வைராக்கியம், வலிமை, புகழ், செல்வம், தெய்வசக்தி என்ற ஆறுமுகங்களையும் ஒருங்கே கொண்டவன் முருகப்பெருமான். அவன் ஆறுமுகன். அவன் அருள் இருந்தால் நமக்கு நடப்பதெல்லாம் நன்மையே. முருகன் தேவர்குலத்திற்குத் தேவன் என்றால், நம் தமிழர் குலத்துக்குத் தலைவன். தமிழை வளர்த்தவன். தமிழ்க் கடவுள். தமிழ்நாட்டில் பிறப்பதற்கும், தமிழ்மொழி கற்பதற்கும், பேசி மகிழ்வதற்கும் தவம் செய்திருக்க வேண்டும். கோடி புண்ணியம் செய்தவனே தமிழனாகப் பிறக்கிறான். காரணம், எந்த மொழிக்கும் கடவுள் என்ற ஒன்றில்லை. ஆனால் தமிழ்மொழிக்கு மட்டும் "முருகன்' என்னும் கடவுள் மும்மூர்த்திகளாலும் போற்றப்படுகிறான். வேதத்திற்கு அர்த்தம் சொன்னவன் முருகன்.

ADVERTISEMENT



பாண்டிய நாட்டுப் புலவரான நக்கீரரை "திருமுருகாற்றுப்படை' என்ற நூலைப்பாட வைத்தவன் தமிழ்முருகன். அருணகிரியாரின் நாவில் வேலால் எழுதி "திருப்புகழ்' என்னும் அற்புதமான சந்தங்கள் நிறைந்த பாடலை எழுத வைத்தவன் ஆறுமுகன். இதேபோல குமரகுருபரர் இயற்றிய "கந்தர்கலிவெண்பா', "பிள்ளைத் தமிழ்', கச்சியப்ப சிவாச்சாரியாரின் "கந்தபுராணம்', பாம்பன் ஸ்வாமிகளின் "சண்முக கவசம்', தேவராய சுவாமிகள் இயற்றிய "கந்த சஷ்டிக் கவசம்', ஔவையாரின் முருகன் மீதான பாடல்கள் என்று எண்ணற்ற தமிழ்ப் பாடல்களைப் பாடவைத்தவன் முருகன். இவையெல்லாம் முருகப்பெருமானைத் தமிழால் போற்றி வணங்கக்கூடிய அருமையான, அற்புதமான பிரார்த்தனை நூல்களாகும்.



எனவே தமிழ் வருடப்பிறப்பன்று முருகனை வழிபடவேண்டும். அந்த நாளில் குடும்பத்தலைவி அதிகாலையிலேயே துயிலெழுந்து நீராடி, பூச்சூடி பொட்டிட்டு புத்தாடை உடுத்தி, வள்ளி- தெய்வானையுடன் கூடிய முருகன் படத்தின்முன்பு குத்துவிளக்கேற்றி, படத்திற்குப் பூமாலை சூட்டி, சிவந்த மலர்களால் அர்ச்சித்து, பஞ்சாமிர்தம் நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி காட்டி முருகனை வணங்கி பூஜையைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். அப்போது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் நீராடி தூய உடை உடுத்திப் பூஜையில் கலந்துகொண்டு முருகனை வணங்கவேண்டும். இந்த முருக வணக்கம் சித்திரை வருடப்பிறப்போடு இல்லாமல், வருடம் முழுவதும் வரும் திருமுருகனின் சிறப்பு நாட்களில் கொண்டாட வேண்டும்.

சித்திரை வருடப்பிறப்பன்று முருகனை வழிபடுவது மட்டுமின்றி, நம் தமிழ் மொழியை வளர்த்த சான்றோர்களையும் வழிபடவேண்டும். திரு. உ.வே. சாமிநாத அய்யர்; மகாகவி சுப்ரமண்ய பாரதியார், மு. வரதராசனார் போன்ற தமிழறிஞர்களையும், இராமாயண காவியம் பாடிய கம்பர், தெய்வ நூலான திருக்குறள் இயற்றிய திருவள்ளுவர், சிவபக்தர்களான தேவாரம் பாடிய அப்பர், சுந்தரர், சம்பந்தர், திருமால் அடியார்களான ஆழ்வார்கள், தமிழ்த் தொண்டாற்றிய ஔவையார், முருக பக்தர்களான நக்கீரர், குமரகுருபர ஸ்வாமிகள், தேவராய சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், சிதம்பரம் சுவாமிகள் போன்ற மகான்களையும் நினைவுகூர்ந்து வழிபடவேண்டும். அவர்கள் இயற்றிய பாடல்களைப் பாடி முருகனின் அருள்பெறவேண்டும். அன்று மாலை அருகிலுள்ள முருகன் கோவிலுக்குச்சென்று, வள்ளி- தெய்வானையுடனான முருகனை வழிபட்டு வரவேண்டும்.

அன்று மாலையில் ஏதாவது ஒரு கோவில் அல்லது பொது இடத்தில், ஊர்ப்பிரமுகர் ஒருவராலோ அல்லது கோவில் அர்ச்சக ராலோ படிக்கப்படும் பஞ்சாங்கத்தைக் கேட்கவேண்டும். தற்போது பிறக்கவுள்ளது "விளம்பி' வருடமென்பதால், இந்த ஆண்டு எப்படியிருக்கும் என்பதை பஞ்சாங்கம் படிப்பவர் எடுத்துரைக்க, அதை ஊர்மக்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். இதை "பஞ்சாங்கப்படனம்' என்று கூறுவார்கள். "விளம்பி' வருடப் பஞ்சாங்கப்படி, இந்த ஆண்டு ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, தை, மாசி மாதங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்புண்டு. வைகாசி, ஆடி, கார்த்திகையில் மிதமான மழை இருக்கும். இதர மாதங்களில் மழை பெய்தாலும் பெய்யலாம்; பெய்யாமலும் போகலாம். விவசாயம் முன்பைவிட கொஞ்சம் மேலோங்கும். நீர்நிலைகள் வறட்சியைச் சந்திக்கும். இருந்தாலும் மக்கள் நலமாகவே இருப்பார்கள். இருநாடுகளுக்கிடையே நட்புறவுகள் ஓங்கும்.

இவ்வருட ராஜாவானவர் சூரியன் என்பதால், நாடு பிரகாசமாக நலிவின்றி இருக்கும். மந்திரி சனீஸ்வரன் என்பதால் கேடுகள், கொள்ளைகள், திருட்டுகள் ஏற்பட வாய்ப்புண்டு. சேனாதிபதி சுக்கிரன் என்பதால் மணவாழ்க்கைப் பிரச்சினைகள், விவாகரத்து போன்றவை அவ்வப்போது ஏற்பட்டு சில நன்மையிலும், சில கெடுதலிலும் முடியும். இவ்வருட தேவதை உமா மகேஸ்வரி என்பதால் மக்களுக்கு நன்மை- தீமை இரண்டும் மாறிமாறி வரும். கலி பிறந்து 5,118 வருடங்களுக்குமேல் ஆகிவிட்டதால், கலிமகாத்மியத்தின்படி கல்வி, ஞானம் போன்றவை குறையும். தெய்வத்தின் மீதான பக்தி அதிக மிருப்பதுபோல தோன்றினாலும், நிந்தனையும் அதிகமாக இருக்கும். சாதுக்கள் அலட் சியப்படுத்தப்படுவார்கள். காமம், குரோதம், பொறாமை போன்றவை அதிகரிக்கும்.

நாட்டிற்குப் பொதுவாக நற்பலன்களே காணப்படும். தெய்வசக்தியால் தீமைகள் அழிக்கப்படும். இறைவன் பெயரை உச்சரித்து நற்பேறு பெறலாம். "ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே- ஹரேகிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே' என்ற மகாமந்திரத்தை ஜெபித்து நன்மை பல பெறலாம். அறுபது படிக்கட்டுகளைக் கொண்ட சுவாமிமலைத் தலம் அறுபது தமிழ் வருடங்களைக் குறிக்கிறது. பன்னிரண்டு படிக்கட்டுகளைக்கொண்ட திருக்காவலூர் முருகன் தலம் பன்னிரண்டு மாதங்களைக் குறிக்கிறது. 365 படிக்கட்டுக்களைக்கொண்ட திருத்தணிகைத்தலம் ஒரு வருடத்தின் 365 நாட்களைக் குறிக்கிறது. எனவே தமிழ்வருடம் என்பது முழுக்க முழுக்க முருகனுக்கே உரியது என்பதால், வருடப்பிறப்பன்று முருகனை வழிபட்டு முழு அருள் பெறுவோம்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT