ADVERTISEMENT

'அருணகிரி நாதர் நாக்கில் முருகன் செய்த அதிசயம்' - திருப்புகழ் பாடலுக்கு பின்னுள்ள திகைப்பூட்டும் சம்பவம்

05:38 PM Mar 25, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், அருணகிரி நாதர் குறித்தும் திருப்புகழ் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

தமிழ்நாட்டில் பன்னிரு ஆழ்வார்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடினார்கள். பன்னிரு திருமுறைகள் தொகுக்கப்பட்டது. அவை தமிழ்நாட்டின் கருவூலமாக பார்க்கப்பட்டன. தமிழகம் முழுவதும் கால்நோக நடந்து திருத்தலங்கள் தோறும் யாத்திரை செய்து முருகனை ஆராதித்தார் அருணகிரி நாதர். தன்னுடைய இளம் வயதில் காமசேட்டைகளை இடையறாது செய்தவர் அருணகிரி நாதர். அவருடைய செயல்களால் அவரது குடும்பத்தினர் வருந்தாத நாட்களே இல்லை. ஒருநாள் ஒரு பெண்ணோடு அவசர அவசரமாக வீட்டிற்கு வந்தபோது, ஏன் இப்படி ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறாய், இப்படி எல்லா பெண்களையும் பெண்டாளா நினைக்கிறீயே சண்டாளா என்று அவர் தமக்கை திட்டுகிறார்.

பெண்டாளுவதுதான் வாழ்க்கையின் பெருநோக்கம் என்று நீ நினைத்தால் என்னையும் வைத்துக்கொள் என்று அவர் திட்டியதும் அருணகிரி நாதருக்கு குற்ற உணர்ச்சி மேலோங்கியது. என் தமக்கை இப்படி பேசும்படி நடந்துகொண்டேனா, தமக்கை இப்படி கேட்ட பிறகு உயிர் வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று நினைத்த அருணகிரி நாதர், திருவண்ணாமலையின் மலையுச்சிக்கு ஏறுகிறார். முருகா என்று அழைத்து மலையுச்சியில் இருந்து கீழே குதித்துவிடுகிறார்.

கண்கண்ட கடவுளான முருகன், அருணகிரி நாதரை காப்பாற்றிவிடுகிறார். ஏன் தற்கொலை முடிவுக்கு வந்தாய் என முருகன் கேட்க, நடந்ததை விளக்கிச் சொல்கிறார் அருணகிரி நாதர். நீ என்னைப் பற்றி பாடு என்கிறார் முருகன். அதற்கு அருணகிரி நாதர், 'பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம்தான் அறியேன் ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்' என்கிறார். உடனே முருகன், உன் நாக்கை நீட்டு என்கிறார். அருணகிரி நாதர் நாக்கை நீட்டியவுடன் அதில் ஓம் என்ற மந்திரத்தை எழுதுகிறார். எழுதிய மாத்திரத்தில் அருணகிரி நாதர் வாய் கவிதை மழைபோல பொழிய ஆரம்பித்தது. பின், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, திருச்செந்தூர், திருத்தணி உட்பட சமயக்குறவர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் சென்று அவர் முருகனைப் பாடினார். அந்தப் பாடலுக்கு திருப்புகழ் என்று பெயர்.


"முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே"

என்று அவர் பாடிய பாடல் இன்றைக்கும் உயிர்பெற்று உலாவருகிறது. இந்தப் பாட்டை கர்நாடக சங்கீத கச்சேரி மேடைகளில் கேட்கிறபோது கடலென திரண்டிருக்கும் கூட்டம் அலையாக எழுச்சி கொள்கிறது. தமிழ் இலக்கணம் கற்று தமிழின் சிகரம் தொட்டவர்கள்கூட இந்தப் பாட்டை படித்து பொருள்கூற முடியாத அளவிற்கு இந்தப் பாடலில் ஆழம் உள்ளது, அழகு உள்ளது. அதை தமிழுக்கு செய்து தந்தவர் அருணகிரி நாதர்.

சித்தர்கள் வரிசையில் வைத்து அருணகிரி நாதர் கொண்டாடப்படுகிறார். முருகனின் அருள்பெற்றவர்களில் முதன்மையானவராக இருக்கிறார். அருணகிரி நாதரின் திருப்புகழை ஆய்வு செய்து அதன் புகழை தமிழ்நாடு முழுவதும் பரப்புவோமானால் தமிழ் மீண்டும் தழைக்கும். இறைவனின் அருள் கைகூடினால் ஒன்றுக்கும் ஆகாதவன் என்று பேசப்பட்டவன்கூட பூவாக மலர்வான் என்பதற்கு அருணகிரி நாதர் உதாரணம். திருப்புகழை பாடப்பட வாய் மணக்கும் என்பார்கள். வாய் மட்டுமல்ல, சிந்தையும் செவியும்கூட மணக்கும். தீந்தமிழுக்கு கிடைத்த நன்கொடையான திருப்புகழை அனைவரும் படிப்போம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT