ADVERTISEMENT

"திருவாசகத்தை படித்துவிட்டு எண்ணத்தை மாற்றிய ஜி.யு.போப்" - தமிழ் வரலாறு பகிரும் நாஞ்சில் சம்பத்!

01:36 PM Nov 27, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'தமிழும் சமயமும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்தவகையில், மாணிக்கவாசகர் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

“திருமுறையும் திவ்ய பிரபந்தமும் தமிழின் தகுதியை உயர்த்தின. தமிழின் தகுதி உயர்ந்ததற்கு திருமுறையும் திவ்ய பிரபந்தமும்தான் காரணம் என்று சொன்னால் அதைப் பூரணமாக ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். அதிலும் எட்டாவது திருமுறை முக்கியமானது. எட்டாவது திருமுறையில் திருவாசகமும் திருக்கோவையாரும் உள்ளன. மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு ஈடான வாசகம் இன்பத்தமிழில் மட்டுமல்ல, உலக இலக்கியத்தில்கூட எங்கும் கிடைக்காது. அந்த திருவாசகத்தைப் படித்துவிட்டு இது எலும்பை உருக்குகிற பாடல் என்று ஜி.யு. போப் வியந்தார். திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது தமிழ்நாட்டில் நாம் கேட்டுப் பழகிய மொழி.

ஒருநாள், திருவாசகம் எழுதிய மாணிக்கவாசகர் முன்பு அந்தணர் வடிவில் வந்து சிவன் நிற்கிறார். அவர் சிவன்தான் என்று இவருக்குத் தெரியாது. உன்னுடைய திருவாசகத்தைச் சொல் என்று அவர் கூற, மாணிக்கவாசகரும் சொல்ல ஆரம்பிக்கிறார். மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல அவர் பட்டோலையில் எழுதுகிறார். அதை நிறைவுசெய்த பின், அந்தணர் வடிவில் வந்த இறைவன் கோவை பாடு என்கிறார். உடனே மாணிக்கவாசகர் திருக்கோவையாரும் பாடுகிறார். அதையும் எழுதி முடித்த பிறகு, மாணிக்கவாசகர் சொற்படி, அழகிய சிற்றம்பலம் உடையான் என்று சிவபெருமான் தமிழில் கையெழுத்திட்டார். அதை சிதம்பரம் நடராஜர் வாசலில் வைத்துவிட்டு அந்தணர் காணாமல் போய்விடுகிறார். அடுத்த நாள், தில்லைவாழ் அந்தணர்கள் திருக்கோவிலுக்குப் பூஜை செய்வதற்காக கதவைத் திறக்கிறபோது அங்கே ஓலைச்சுவடி இருக்கிறது. அதைக் கண்டு, இதை யார் கொண்டுவந்து வைத்தது என அந்தணர்களுக்கு ஆச்சர்யமும் அதிர்ச்சியும். இதை மாணிக்கவாசகரிடம் காட்டி இது என்ன என்று அந்தணர்கள் கேட்டபோது இதுதான் திருவாசகமும் திருக்கோவையாரும் என்கிறார். உடனே, இதற்கு என்ன பொருள் என்று அவர்கள் கேட்கின்றனர். அதற்கு மாணிக்கவாசகர் தில்லை கூத்தன் சந்நிதிக்கு முன்னால் நின்றுகொண்டு, இதற்கு பொருளே இந்தத் தில்லைக்கூத்தன்தான் என்கிறார். அவர் கூறிய உடனேயே அங்கு ஒளிப்பிழம்பு தோன்றியது. அந்த ஒளிப்பிழம்பில் மாணிக்கவாசகர் கரைந்து போனார்.

மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திலும் திருக்கோவையாறிலும் எல்லாம் வல்ல சிவபெருமானே கையெழுத்திட்டார் என்ற செய்தியைப் படிக்கிறபோது தமிழ், சமயத்திற்கு எவ்வளவு இடம் கொடுத்தது, சமயம் தமிழுக்கு எவ்வளவு இடம் கொடுத்தது என்பதை அறியமுடிகிறது. ஆனால், இன்று தமிழில் கையெழுத்து இடுவதற்கே இயக்கம் நடத்துகிறார்கள். எட்டாவது திருமுறையில் எல்லோருடைய நெஞ்சையும் உருக்கக்கூடிய திருவாசகத்திற்கு சிவனும் உருகினார். மதுரைக்கு அருகேயுள்ள திருவாதவூர்தான் மாணிக்கவாசகர் பிறந்த ஊர். அவர் பிறந்த இடமே இன்றைக்கு சிவனின் கோவிலாகிவிட்டது. அவர் தீட்சைப்பெற்ற இடமான திருப்பெருந்துறை இன்றைக்கு ஆவுடையார் கோவில். அந்தக் கோவிலைக் கட்டியவரே மாணிக்கவாசகர்தான்.

மதுரையில் மன்னராக இருந்து போருக்குத் தேவையான குதிரைகள் வாங்குவதற்காக வந்த இடத்தில் அந்தப் பணத்தைக் கொண்டு திருப்பெருந்துறை என்ற இடத்தில் சிவனுக்குக் கோவில் கட்டினார். இன்றைக்கு அந்தக் கோவில் ஆவுடையார் கோவில் என்று அறியப்படுகிறது. மாணிக்கவாசகர் காலத்தைத் திரும்பிப் பார்த்தால், சமயத்தின் கொடி உயர பறந்த காலத்தில் தமிழுக்கு தகுந்த மரியாதை இருந்தது என்பதை நாம் தெரிந்துகொள்கிறோம். உலகமே இன்றைக்குத் தமிழை மெச்சுகிறது என்றால் அதற்கு மாணிக்கவாசகரும் ஒருவகையில் காரணமாக இருந்தார். ‘பக்தி இலக்கியங்கள் லத்தீனில்தான் இருக்கின்றன என்று இதுவரைக்கும் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், தமிழில் இருப்பது போன்ற பக்தி இலக்கியங்கள் உலகத்தில் எந்த மொழியிலும் இல்லை’ என்று ஜி.யு. போப் கூறுவதற்கு திருவாசகமே முக்கிய காரணமாக இருந்தது.”

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT