ADVERTISEMENT

மாசி மக மகத்துவம்! 01.03.2018

10:19 AM Mar 01, 2018 | karthikp

ADVERTISEMENT

எஸ்.ஆர்.எஸ். ரெங்கராஜன்

ADVERTISEMENT

இன்று 1-3-2018 மாசிமகம்

பாஸ்கர க்ஷேத்திரம் எனப்படும் கும்பகோணத்திற்கு குடந்தை, குடமூக்கு என்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன. கும்பகோணம் என்ற பெயரைச் சொன்னாலே பாவங்கள் நம்மை விட்டு நீங்கும்.

பிற தலங்களில் செய்யும் பாவம் காசி தலத்தில் தீரும்; காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே இத்தலத்தின் சிறப்பு.

மாசிமகம்- மகாமகம் என்றாலே நினைவுக்கு வருவது கும்பகோணம்தான். இது இத்தகைய சிறப்பு பெற்றுள்ளதற்கு புராண வரலாறும் உண்டு.

முன்னொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியப் போகிறதென்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட பிரம்மா, உயிர்கள் அனைத்தும் அழிந்துவிடுமே என அஞ்சி சிவபெருமானிடம் முறையிட்டார்.

பல புண்ணிய தலங்களிலிருந்து மண், அமுதம், அனைத்து ஜீவராசிகளின் ஜீவ வித்துக்கள் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து ஒரு கும்பத்தில் வைத்து, அதை மங்கலப் பொருட்களால் அலங்கரித்து, அதன் நான்கு புறங்களிலும் வேத ஆகமங்களை வைத்து, வில்வத்தால் அர்ச்சனை செய்து மேருமலையில் வைத்துவிடும்படியும்; அது பிரளய வெள்ளம் வரும்போது மிதந்து சென்று ஒரு நிலப்பகுதியில் தங்கும்போது தேவையானவற்றைச் செய்வோம் என்றும் சிவபெருமான் பிரம்மனிடம் கூறினார். பிரம்மனும் அவ்வாறே செய்தார்.

பிரளயம் வந்தபோது அனைத்தும் வெள்ளத்தில் சிக்கி அழிந்தன. அமுதம் நிறைந்த குடத்தை வெள்ளம் உருட்டிச் சென்றது. அக்குடம் ஓரிடத்தில் தடைப் பட்டு நின்றது. அந்த இடம்தான் கும்ப கோணம். சிவபெருமான் வேடன் உருக்கொண்டு அக்கும்பத்தின்மீது அம்பெய்து உடையச் செய்தார். குடம் உடைந்து அமுதம் வழிந்து எட்டு திசைகளிலும் பரவியது. குடத்தை அலங்கரித்திருந்த பொருட்கள் வெவ்வேறு இடங்களில் விழுந்து லிங்கங்களாகக் காட்சியளித்தன.

சிவபெருமான் எந்த இடத்தில் நின்று அம்பு தொடுத்தாரோ அந்த இடம் பாணபுரேசம் என்ற பாணாதுறை ஆகும். கும்பத்தைத் தாங்கியிருந்த உரி விழுந்த இடம் சோமேசுவரர் கோவில். கும்பத்தின் மேலிருந்த தேங்காய் விழுந்த இடம் அபிமுகேஸ்வரர் கோவில். கும்பத்தில் சுற்றியிருந்த நூல் விழுந்த இடம் கௌதமேஸ்வரர் கோவில். வில்வம் விழுந்த இடம் நாகேஸ்வரன் கோவில். குடத்தின் வாய்ப்பகுதி விழுந்த இடம் குடவாயில் எனப்பட்டன.

குடத்திலிருந்த அமுதம் கும்பகோணத் தைச் சுற்றியுள்ள திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலிவனம் ஆகிய ஐந்து தலங் களிலும் பாய்ந்து அப்பகுதிகளைச் செழுமையாக்கியது. அதன்பிறகு பிரம்மா படைப்புத் தொழிலைத் தொடங்க சிவபெருமானிடம் அனுமதி கேட்டார். சிவன் சம்மதிக்க, பிரம்மன் மனம் மகிழ்ந்து பூர்வபட்சத்தில் வரும் அஸ்வினி நட்சத்திர நாளில் கொடியேற்றம் செய்து, பெருமானையும் தேவியையும் எட்டு நாட்கள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளச் செய்தார். ஒன்பதாவது நாள் மேரு மலையைப்போல் உயர்ந்த தேர் செய்து, அதில் பஞ்ச மூர்த்தி களை எழுந்தருளச் செய்தார். பத்தாவது நாளான மக நாளில் பஞ்சமூர்த்திகளை வீதியுலா வரச்செய்து, மகாமகத் தீர்த்தத் தில் தீர்த்தம் கொடுக்கும் மாசிமக விழாவை ஆரம்பித்து வைத்தார். அந்த அடிப்படையில்தான் மாசிமக விழா ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

உமா தேவியார் மாசி மாதத்தில் மக நட்சத்திரத்தில் தட்சனின் மகளாக அவதரித் தாள் என்பதால், இந்த நாள் தேவியின் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

ஒருமுறை வருண பகவானுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டபோது, அவர் கடலில் கட்டிப்போடப்பட்டிருந்தார். வருண பகவானது செயல்பாடுகளின்றி அனைவரும் துன்புற்றனர். எனவே, வருணனை விடுவிக்கும்படி தேவர்கள் சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தனர்.

அவரும் விடுவித்தார். அன்றைய தினம் மாசிமக நாள். தோஷம் நீங்கப்பெற்ற வருணன் சிவபெருமானை நோக்கி, "மாசி மக நன்னாளில் தீர்த்தமாடி வழிபடுகிறவர்கள் தங்கள் பாவங்கள் நீங்கப்பெற்று நற்பலனைப் பெற அருளவேண்டும்' என கேட்டுக்கொண்டார். சிவபெருமான் அவ்வாறே வரமருளினார்.

மாசி மகத்தில் புண்ணிய தீர்த்தங்களை தரிசிப்பதும், தொடுவதும், பருகுவதும், அதில் நீராடுவதும் புண்ணியத்தைத் தரும். பாவங்கள் தொலையும் இந்த தினத்தில் தீர்த்தக் கரைகளில் தர்ப்பணம், பிதுர்க்கடன் ஆகியவற்றை செய்தால் நற்கதி பெறுவர் என்பது நம்பிக்கை.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT