ADVERTISEMENT

சித்திரைத் திருவிழா கோலகலம்! 

12:35 PM Apr 08, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் பக்தர்களின் பங்கேற்போடு தொடங்கியுள்ள மதுரை சித்திரைத் திருவிழாவின் முதல் நாளான நேற்று முன்தினம், மீனாட்சியம்மன் கோவிலில் கொடியேற்ற நிகழ்வு மிக கோலாகலமாக நடைபெற்றது.

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா, கரோனா பெருந்தொற்றுக் காலமான கடந்த 2 ஆண்டுகள் கோவில் வளாகத்திலேயே பக்தர்களின் பங்கேற்பின்றி நடைபெற்றது. இந்நிலையில், தற்போது கரோனா நோய்த் தொற்றுக் கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ள நிலையில், சித்திரைத் திருவிழா வெகு கோலாகலமாக நடைபெறவுள்ளது.


இதனையடுத்து சித்திரைத் திருவிழாவின் முதல் நிகழ்வான கொடியேற்றம் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. சுவாமி சன்னதிக்கு முன்புறம் உள்ள தங்கக் கொடிமரத்தில் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் காலை 10.30 மணியிலிருந்து 10.54 மணிக்குள் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவில் இணை ஆணையர் செல்லத்துரை, அறங்காவலர் கருமுத்து கண்ணன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


கொடியேற்றப்படும் கொடிப்பட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள ரிஷபம் தர்ம உருவாகவும், ஆத்மாவின் உருவாகவும் மதிக்கப்படுகிறது. ஆத்மாக்களையும் தர்மத்தையும் கீழ்நிலையில் இருந்து உயர்நிலைக்கு கொண்டு செல்லும் இறைவனின் கருணை இக்கொடியேற்ற திருவிழாவின் மூலமாக விளக்கப்படுகிறது என்பதும் பொதுவகையில் உயிர்களுக்கு அருள்புரியும் இறைவன் சிறப்பு வகையில் அருள்புரிய இப்பன்னிரண்டு நாட்களும் ஆயத்தமாகக் காத்திருக்கிறார் என்பதை இக்கொடியேற்றம் உணர்த்துவதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.


அன்று இரவு வெள்ளி சிம்மாசனத்தில் கோவிலின் உள்ளே அமைந்துள்ள குலாலர் மண்டகப்படியில் அம்மனும் சுவாமியும் எழுந்தருளின. பிறகு அங்கிருந்து புறப்பட்டு நான்கு மாசி வீதிகளில் கற்பகவிருட்சம் மற்றும் சிம்ம வாகனங்களில் எழுந்தருளி இரவு 7 மணியளவில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT