ADVERTISEMENT

"ஆண்டாளின் மீது கொண்ட காதலால் கண்ணனே..." - நாஞ்சில் சம்பத் பேட்டி

10:09 AM Nov 04, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு பேச்சாளரும், இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "மார்கழித் திங்களில்தான் ஆண்டாள் நாச்சியார், அதிகாலையில் துயிலெழுந்து உறங்கிக் கிடந்த தன் தோழிகளைத் துயிலெழுப்பி, கண்ணை சேவிப்பதற்கு அழைக்கின்ற காட்சியை தமிழ் இலக்கியத்தில் ஆண்டாள் பதிவு செய்கிற முறையும்; விதமும் ஆண்டாளுடைய தனித்துவத்தையும், மகத்துவத்தையும் பறைசாற்றியது. ஆண்டாளின் மீது கொண்ட காதலால் கண்ணனே ஒருநாள் நாச்சியார் திருக்குளத்தில் இருந்தான் என்பது தான் இந்த நாட்டின் வரலாறு.

அதிகாலைத் துயிலெழச் சொல்லுகிறாள். உறக்கத்தைக் கலைக்க சொல்லுகிறாள். அதையும் தாண்டி ஒரு நம்பிக்கையை நெஞ்சில் நட்டு வைக்கின்றாள் ஆண்டாள். ஒரு தமிழ் பாட்டுக்கு, பஞ்சபூதங்களுக்கு இல்லாத ஆற்றல் இருக்கும் என்பதை ஆண்டாள் தன்னுடைய வீச்சு மிகுந்தப் பாட்டின் மூலம் பதிவு செய்திருக்கிறார். “மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்” என்று ஆண்டாள் திருப்பாவையைத் தொடங்குகிற பொழுதே, குற்றலாக் குதூகலம் நம்மிடத்தில் குடிகொண்டு வருகிறது.

அந்தக் காலத்தில் ஆயர்பாடிகளிலெல்லாம் சீர் மலிந்து கிடந்தது. செல்வம் குவிந்து கிடந்தது. ஒவ்வொருவருடைய வீட்டிலும் வசந்தம் கோலம் போட்டு நின்றது. இதைப் பார்த்து பரவசப்பட்ட ஆண்டாள் நாச்சியார் சொல்லுகிறார், “சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்” என்று சொல்லி கண்ணனை அவள் கொண்டாடுகின்றாள். தமிழ்நாட்டின் பண்பாட்டு வரலாற்றிலும்; இலக்கிய வரலாற்றிலும்; அதிகாலையில் துயிலெழுவதும் ,வாசலில் கோலம் போடுவதும், துயில் கலைந்து நீராடுவதும், நீராடி முடிந்ததற்கு பிறகு கண்ணனை சேவிப்பதும், அந்த வழக்கத்தை மார்கழித் திங்களில் நடைமுறைப்படுத்துவதும் ஒரு நடைமுறையாக இன்றைக்கும் நாடு பின்பற்றித் தீர வேண்டிய அளவிற்கு அதை நடைமுறைப்படுத்தியதிலே ஆண்டாள் வெற்றி பெற்றாள்.

காலைப் பத்திரிகையைப் பார்த்தால், அதிகாலையிலே தலைநகர் சென்னையில் பஜனைப் பாடிக் கொண்டு ஒரு கூட்டம் போகிறது. ஆகவே, பாட்டும், இசையும் பைந்தமிழ் பண்பாட்டின் இரண்டு கண்கள். அதை இரண்டையும் பின்பற்றி ஆண்டாள் பாடியிருக்கிற பாட்டு பன்னிரண்டு ஆழ்வார்கள் பாடிய பாட்டிலும் உச்சத்தைத் தொட்டது. கண்ணனே நாச்சியார் திருக்கோலத்தில் உட்கார்ந்து, அவனை சேவிப்பதற்கு அவரே வழிகாட்டினார் என்றால், ஆண்டாள் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது நமக்கு புரியும். அந்த ஆண்டாள் தான் சொல்லுகிறாள், இன்னுமா உறங்குகிறீர்கள், இன்னுமா உங்களுக்கு உறக்கம் வருகிறது.

உங்களுக்கு பிறை தருவதற்கு அவன் தயாராக இருக்கிறான். உங்களுக்கு கருணைக் காட்டுவதற்கு சித்தமாக இருக்கிறான். உங்களுக்கு அவனுடைய அருள் கடாட்சம் தயார் நிலையில் இருக்கிறது. இதைக் கண்டுகொள்ளாமலும், கவனிக்காமலும் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருப்பவர்களே எழுந்திருங்கள். நாராயணனே நமக்கே பிறை தருவான் என்று சொல்லி ஆண்டாள் துயிலெழுப்புகின்றாள். இந்தத் திருப்பாவை என்று சொல்லக்கூடிய இந்த நோன்பும், இந்த தவமும் கல்யாணத்திற்கு காத்திருக்கிற கன்னிப் பெண்களின் கல்யாணம் கைகூடுவதற்கும், அவர்களுடைய வாழ்வில் ஒரு புதிய திருப்பமும், விருப்பமும் நிறைவேறுவதற்கும் இந்த நோன்பு பலனளிக்கின்ற நம்பிக்கை இந்த மண்ணில் இருந்து வருகிறது.

அந்த வகையிலே தான் அதை தமிழ் பண்பாட்டோடு பொருத்தி தமிழில் இருந்து அந்நியப்பட்டு போகாமல், அதை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு பெண்ணாக பிறந்த பெருமாட்டி. நீ எதை நினைக்கிறாயோ, அதை உயர்வாக நினைக்க வேண்டும். செருப்பை தைத்தாவது பிழைத்துக் கொள்ளலாம். மாடு மேய்த்தாவது வாழ்ந்து விடலாம் என்று கருதுவது குறிக்கோள் அல்ல. அது லட்சியமும் அல்ல. எதை நினைக்கிறாயோ, உயர்ந்த பொறுப்பு. பொறுப்பேற்றால், இந்த நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்பேன்." இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT