Skip to main content

"கண்ணகியிடம் கோவலன் கேட்டான்... நான் இல்லாத நேரத்தில் நீ..." - நாஞ்சில் சம்பத் பகிரும் சுவாரசியம்

Published on 04/11/2022 | Edited on 04/11/2022

 

"Kovalan asked Kannaki. In my absence you...."- Nanjil Sampath interview!

 

'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு பேச்சாளரும், இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதிலிருந்து, "காலங்காலமாகக் கட்டிக் காப்பாற்றி வந்த பண்பாடு, கண் முன்னாலே உடைந்து சிதறி உருமாறிக் கொண்டிருக்கிறது. யாசிப்பவனுக்கு யாசகம் கொடுப்பதிலே மகிழ்ச்சி அடையலாம். ஆனால், அதிலே விளம்பரம் தேடிக் கொள்கின்ற மனிதர்களை நாம் இன்றைக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கோவிலில் எரிந்து கொண்டிருக்கின்ற டியூப் லைட்டின் வெளிச்சத்தை அடைத்துக் கொண்டு, அதைக் கொடுத்தவனுடைய பெயர் பதிவு செய்யப்படுகிறது. 

 

ஆகவே, விளம்பரப் பிரியர்களாக இந்த நாட்டில் சராசரி மனிதர்கள் கூட இருக்கிற இந்த நிலைமை நேற்றிருந்ததா என்று பார்த்தால், இல்லை. சேதுபதி சீமையில் நெல் வயல் சூழ்ந்த; கழனி சூழ்ந்த திருத்தலம் இளையான்குடி. அந்த இளையான்குடியிலே, 63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறநாயனார் என்கிற நாயனார் இருந்தார். 63 அடியார்களுக்கும் தனித்தனி பெருமை இருக்கின்றது என்றால், இந்த இளையான்குடி மாறனாரின் பெருமை, தமிழ்ப் பண்பாடான விருந்தோம்புவது தான். 

 

வருகிற விருந்தைப் பேண வேண்டும். அடுத்த விருந்துக்குக் காத்திருக்க வேண்டும். அப்படி காத்திருக்கிறவன் எவனோ, அவன் வானத்தில் இருப்பவர்களுக்கு விருந்தாவான் என்று வான்புகழ் வள்ளுவன் சொல்லி வைக்கிறான். விருந்து உபசாரம் செய்வது என்பது தமிழர்களின் பண்பாடு. கண்ணகி கோவலனை பிரிந்திருந்த காலத்தில், மீண்டும் கோவலனோடு கண்ணகி சேர்ந்த பிறகு கண்ணகியிடம் கோவலன் கேட்டான். நான் இல்லாத நேரத்தில் நீ எதற்காவது வருந்தினாயா கண்ணகி? என்று கேட்ட பொழுது, கண்ணகி அறம் பேசினாள். 

 

நீங்கள் இல்லாததால் வீட்டில் யாரும் உங்களைத் தேடி வரவில்லை. உங்களைத் தேடி யாரும் வீட்டில் வராத காரணத்தால், வீட்டில் யாருக்கும் நான் அமுது செய்யவில்லை. யாரும் தேடி வராத காரணத்தால், பசித்தவர்களுக்கு நான் பால்சோறு போடவில்லை. யாசகர்கள் வந்து பிச்சை கேட்கவில்லை. சாதுக்கள் என்னை தேடி வரவில்லை. நீங்கள் வீட்டில் இருந்தால், நாலு பேர் வருவார்கள். நாலு பேருக்கும் நான் விருந்து உபசாரம் செய்வேன். அந்த வாய்ப்பை நான் இழந்தேன் என்று கண்ணகி சொன்னாள். ஆகவே, விருந்து சமைப்பது மட்டுமல்ல. விருந்தை, வந்த விருந்தினர்களுக்கு அன்புடன் பரிமாறுவது என்பதும் தமிழ்ப் பண்பாடு. 

 

அப்படித்தான் 63 அடியார்களின் ஒருவரான இளையான்குடி மாறநாயனார் விருந்து சமைப்பதும், விருந்தை அடியார்களுக்கு பரிமாறுவதும், இதுவே வாழ்க்கை முறையாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். கொடுத்துக் கொடுத்து சிவந்த கரம் என்பார்கள். ஆனால், கொடுத்துக் கொடுத்து அவருடைய வாழ்க்கை சிவப்பாகிப் போய்விட்டது. எல்லாவற்றையும் கொடுத்து விட்டார். ஆனாலும், வந்துகொண்டே இருக்கிறார்கள். வந்துகொண்டே இருப்பவர்களுக்கு ஏதாவது கொடுத்தாக வேண்டும் என்கிற, விதை நெல்லைக் கூட சமைத்துப் போடுகிற அளவுக்கு ஒரு நெருக்கடியான தருணத்திலும், அதை மகிழ்ச்சியுடன் செய்தார்".  இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

குரூப் 2 பணியிடங்களுக்கு இன்று முதல் நேர்முகத்தேர்வு!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Interview for Group 2 posts from today

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்தது.

இதனையடுத்து, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து குரூப் 2 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 2 ஆம் தேதி (02-02-24) வெளியிட்டது.

இந்நிலையில் சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் குரூப்-2 பணிகளுக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு வரும் இன்று (12.02.2024) முதல் வரும் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள 327 பேருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. முன்னதாக இது தொடர்பான தகவல்கள் தேர்வர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். தபால் மூலம் அனுப்பப்படாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ராஜஸ்தானில் துர்க்கை; சுஸ்வாணி மாதாஜி மந்திர் !

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
Suswani Mataji Temple

சுஸ்வாணி மாதாஜி மந்திர் என்னும் ஆலயம் ராஜஸ்தான் மாநிலத்தில், பிக்கானிர் மாவட்டத்திலுள்ள மோர்கானா என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது. 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயமிது. இந்துக்கள் மட்டுமின்றி, சமணர்களும் இந்த ஆலயத்தை மிகவும் பக்திப் பெருக்குடன் வழிபடுகிறார்கள். இந்தக் கோவிலில் குடிகொண்டிருக்கும் அன்னை சுஸ்வாணி, துர்க்கையின் அவதாரமாகக் கருதப்படுகிறாள். இந்த ஆலயத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதற்கு அருகில் சிங்கத்தின்மீது அன்னை வீற்றிருக்கிறாள்.

1573-ஆம் வருடத்தில் ஹேம் ராஜ் என்ற மன்னர் இந்த ஆலயத்தைப் புதுப்பித்திருக்கிறார். அதனால் அவரது வம்சத்தைச் சேர்ந்தவர்கள் இந்த அன்னையை குலதெய்வமாகவே வழிபடுகின்றனர். இதுதவிர, டுகார், சங்க்லா ஆகிய சமணப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் இந்த தேவியைத் தங்களின் குலதெய்வமாக வழிபடுகிறார்கள். ஜெய்ஸால்மரிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்களால் இந்தக் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தின் வெளிச்சுவரிலுள்ள சிற்பங்களும் அந்தக் கற்களாலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன.

பிரதான வாயில் மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது. பூமிக்குக் கீழேயும் அறைகள் இருக்கின்றன. ஆலயத்தின் மேற்கூரை 16 தூண்களின்மீது அமைக்கப்பட்டிருக்கிறது. சில தூண்களில் கல்வெட்டுகள் உள்ளன. இந்த ஆலயத்திற்குள் ஒரு சிவன் கோவிலும் இருக்கிறது. இங்கிருக்கும் சிவலிங்கம் 5,000 வருடங்கள் பழமையானது. சிவனது ஆலயமும் புதுப்பித்துக் கட்டப்பட்டிருக்கிறது.

Suswani Mataji Temple

சேட் சக்திதாஸ் - சுகன் கன்வார் என்னும் தம்பதிக்கு 1219-ஆம் வருடத்தில் மகளாகப் பிறந்தவள் சுஸ்வாணி. பத்து வயதுகொண்ட அவளுக்கும், துகார் வம்சத்தைச் சேர்ந்த ஒருவனுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. திருமணம் நடைபெறுவதற்குமுன்பு அவளைப் பார்த்த நாகூர் நவாஸ் என்ற மன்னன் அவளது அழகில் மயங்கி, தான் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக சிறுமியின் தந்தையிடம் கூறினான்.

"அவள் துர்க்கையின் அவதாரம். அவளது சரீரத்தை வேறொரு சரீரம் தொடக்கூடாது. இந்து மதத்தைச் சேர்ந்த அவளை முஸ்லிமான நீ அடைய நினைக்கலாமா? அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்'' என்று கோபத்துடன் கூறினார் சிறுமியின் தந்தை. அதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்து சிறையிலடைத்தான் மன்னன்.

தன் தந்தைக்கு நேர்ந்த கதியை நினைத்தவாறு கவலையுடன் படுத்திருந்த சுஸ்வாணி, தன் துயரத்தைக் கடவுளிடம் முறையிட்டாள். அப்போது கனவில் ஒரு உருவம் தோன்றியது. "கவலைப்படாதே. நவாப்பைப் பார்த்து நீ சவால் விடு. அவனைப் போட்டிக்கு அழைத்து அதில் வெற்றிபெறும்படி கூறு. போட்டி என்னவென்றால்... நீ ஓரிடத்தில் இருக்கவேண்டும். நவாப் அருகில் வந்து உன்னைத் தொடவேண்டும்'' என்று அந்த உருவம் கூறிவிட்டு மறைந்தது. காலையில் எழுந்தபோது, சிறுமியின் நெற்றியில் ஒரு திலகம் இருந்தது. அந்த செந்தூரத்தைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். நவாப்புக்கு தகவல் சென்றது.

அந்த சவாலை ஏற்றுக்கொண்ட அவன், சிறுமியின் தந்தையை விடுதலை செய்தான். தன் சிப்பாய்களுடன் நவாப், சிறுமியின் வீட்டிற்குச் சென்றான். அந்தச் சிறுமி நடக்க ஆரம்பித்தாள். அதற்குமுன்பு தன் கைகளால் அவள் சுவற்றில் செந்தூரத்தைப் பதித்தாள். பின்னர் அவள் ஓட ஆரம்பிக்க, அவளை குதிரையில் அமர்ந்து விரட்டினான் மன்னன். ஆனால் அவளோ மிகவும் வேகமாக ஓடினாள். மன்னனால் அவளைப் பிடிக்கவே முடியவில்லை. சிறுமி கடவுளை வேண்ட, அங்கொரு சிங்கம் தோன்றியது. அதன்மீது அமர்ந்த சிறுமி, அங்கிருந்து மோர்கானாவுக்குப் பயணித்தாள். அங்கிருந்த சிவலிங்கத்தை வழிபட்டாள்.

அவளுக்குமுன் தோன்றிய சிவபெருமான் ஒரு இடுக்கியைத் தூக்கிப் போட, பூமி இரண்டாகப் பிளந்தது. சுஸ்வாணி சிங்கத்துடன் பூமிக்குள் செல்ல, பிளந்த பூமி மூடிக்கொண்டது. அவள் அணிந்திருந்த புடவையின் ஒரு சிறியபகுதி பூமிக்குமேலே இருந்தது. அதைப் பிடிக்கமுயன்ற நவாப்பும் அவனுடைய ஆட்களும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மடிந்தனர்.

மோர்கானாவில் அப்போதிருந்த மரம் இப்போதும் இருக்கிறது. 1232-ஆம் ஆண்டில் சக்திதாஸ், அவரது தம்பி மால்காதாஸ் ஆகியோரின் கனவுகளில் தோன்றிய சுஸ்வாணி, அந்த இடத்தில் ஒரு ஆலயத்தைக் கட்டும்படி கூறினாள். கோசாலையிலிருக்கும் புதையலை எடுத்து அதற்காக செலவிடும்படி சொன்னாள். அதைத் தொடர்ந்து அங்கு ஆலயம் கட்டப்பட்டது. கிணறு தோண்டப்பட்டது. கோசாலை பெரிதாகக் கட்டப்பட்டது.

பாரதத்தில் இந்த சுஸ்வாணி அன்னைக்கு பல இடங்களில் ஆலயங்கள் இருக்கின்றன. ராஜஸ்தானில் நாகூர், ஜோத்பூர், கன்வாலியாஸ், மேற்கு வங்காளத்தில் ராஜாரட், தமிழகத்தில் விழுப்புரம், கர்நாடகாவில் அட்டிபெலே, மகாராஷ்டிரத்தில் அன்டர் சூல் ஆகிய இடங்களில் அன்னை சுஸ்வாணிக்கு கோவில்கள் இருக்கின்றன.

சென்னையிலிருந்து இந்த ஆலயத்திற்குச் செல்ல விரும்புபவர்கள் பிக்கானிருக்குப் பயணிக்க வேண்டும். வாரத்தில் ஒருநாள் வியாழக்கிழமை அனுவ்ராட் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையிலிருந்து சென்னை வழியாகச் செல்கிறது. பிக்கானிரிலிருந்து மோர்கானா 43 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.