ADVERTISEMENT

ஆருத்ரா தரிசன உற்சவ கொடி ஏற்றம்! 

09:51 AM Dec 18, 2023 | tarivazhagan

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வருகிற டிச.18-ம் தேதி திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து டிச.26-ம் தேதி செவ்வாய்க்கிழமை தேர் திருவிழாவும், டிச. 27-ம் தேதி புதன்கிழமை மார்கழி ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் ஆகிய இரு திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு வருகிற டிச.18–ம் தேதி திங்கள் கிழமை மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வருகிற டிச.19-ஆம் தேதி வெள்ளி சந்திர பிரபை வாகன வீதிஉலா, டிச.20-ம் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா, டிச. 21-ம் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா, டிச. 22-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், டிச. 23-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலாவும், டிச. 24-ம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும் நடக்கிறது. டிச.25-ம் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்குதிரையில் வீதி உலாவும் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

டிச. 26-ம் தேதி செவ்வாய்க்கிழமை தேர்த் திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. டிச. 27-ம் தேதி புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. டிச. 28-ம் தேதி வியாழக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர். உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் டி.எஸ்.சிவராமதீட்சிதர், துணைச் செயலாளர் க.சி.சிவசங்கர தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் ஏ.மீனாட்சிநாத தீட்சிதர் ஆகியோர் செய்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT