ADVERTISEMENT

பிரதமரிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளருக்கு அச்சுறுத்தல்; வெள்ளை மாளிகை கண்டனம்!

03:23 PM Jun 27, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அதன்படி ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தார். அமெரிக்கப் பயணத்தின் போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா கொண்டாட்டத்தில் பங்கேற்றார். மேலும் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்தும் விவாதித்தார். அதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் ஜோ பைடனுடன், செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடியிடம், வால் ஸ்ட்ரீட் ஜெனல் பத்திரிகையாளர் சாப்ரினா சித்திக்கி, “உங்கள் அரசு சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகக் கூறப்படுகிறது. அதனால் இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்த என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, “ஜனநாயகம் எங்கள் ரத்தத்திலும், உணர்விலும் உள்ளது. எங்கள் அரசியல் சாசனத்தில் எங்கள் முன்னோர்கள் ஜனநாயகத்தை ஊக்குவித்துள்ளனர். அரசியல் சாசனத்தில் எழுதப்பட்டுள்ள ஜனநாயக விதிமுறைகளை எனது அரசு பின்பற்றுகிறது. இதில் ஜாதி, இன, மத ரீதியாக எந்த பாகுபாட்டையும் நாங்கள் பார்ப்பதில்லை. மனித நேயம், மனித உரிமைகளுக்கு மதிப்பில்லை என்றால், எந்த நாட்டையும், ஜனநாயக நாடு என அழைக்க முடியாது. இந்தியாவை ஜனநாயக நாடு எனக் கூறும்போது, பாகுபாடு என்ற கேள்விக்கே இடமில்லை. அனைவருடனும் இணைந்து, அனைவருக்குமான வளர்ச்சி என்ற கொள்கை அடிப்படையில்தான் இந்தியா முன்னேறுகிறது. இந்தியாவின் ஜனநாயக விதிமுறைகளில் ஜாதி, மத ரீதியான பாகுபாடு இல்லை” எனப் பதிலளித்தார்.

இதையடுத்து பிரதமர் மோடிக்கு எதிராக கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் சாப்ரினா சித்திக்கி எதிராக சமூக வலைத்தளங்களில் பாஜகவை சேர்ந்தவர்கள் கடும் விமர்சனத்தை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இதனை அமெரிக்க வெள்ளை மாளிகை கடுமையாக கண்டித்துள்ளது. பத்திரிகை சுதந்திரத்திற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்; பத்திரிகையாளர் மீதான இந்த அச்சுறுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.

இதனிடையே பிரதமரின் அமெரிக்க பயணம் தொடர்பாக முன்னாள் அதிபர் ஒபாமா, “எனக்கு பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பியிருப்பேன்” எனக் கூறியுள்ளார். இதற்கு பாகஜவினர் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT