ADVERTISEMENT

ஒமிக்ரான் கரோனா: பைசர் முதல் சீரம் வரை - தடுப்பூசி நிறுவனங்கள் கூறுவது என்ன?

06:28 PM Nov 30, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தென்னாப்பிரிக்கா நாட்டில் 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529 என்ற புதிய கரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளில், 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் வைரஸின் ஸ்பைக் ப்ரோட்டினில் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் என உலக சுகாதார நிறுவனத்தால் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய வகை கரோனா, இதுவரை 13 நாடுகளுக்குப் பரவியுள்ளது. மேலும், இந்தக் கரோனா பரவலால் பல்வேறு நாடுகள், தங்கள் நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன. அதேபோல் இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகள் தங்கள் நாட்டிற்கு வெளிநாட்டினர் வருவதைத் தடை செய்துள்ளனர்.

இந்த சூழலில் ஒமிக்ரான் கரோனாவிலிருந்து தடுப்பூசிகள் பாதுகாப்பு அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும் ஒமிக்ரான் தொற்று ஏற்படலாம் எனவும் ஆனால் அதன் பாதிப்பு தீவிரமாக இருக்கலாம் எனவும் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பைசர் நிறுவனம், ஒருவேளை தங்கள் நிறுவனத்தின் தற்போதைய தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக செயல்படாமல் போகலாம் என்பதால், அதற்கு எதிரான ஒரு தடுப்பூசி வெர்சனை உருவாக்கும் பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளது.

மாடர்னா தடுப்பூசி நிறுவனமோ, ஒமிக்ரானுக்கு எதிராக தடுப்பூசி பூஸ்டர் டோஸை உருவாக்குவதாக கூறியுள்ளது. ஜான்சன்&ஜான்சன் நிறுவனம், ஒமிக்ரானுக்கு எதிராக தனியான ஒரு தடுப்பூசியை உருவாக்கி வருவதாகவும், தேவைக்கு ஏற்ப அதனை மேம்படுத்துவோம் என கூறியுள்ளது.

அதேபோல் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம், ஒமிக்ரானுக்கு ஏற்றாற்போல, ஸ்புட்னிக் தடுப்பூசி வெர்சன் ஒன்றை தயாரிக்கும் பணிகளை தொடங்கிவிட்டதாகவும், இப்போது இருக்கும் தடுப்பூசியில் மாற்றம் தேவையென்றால், ஸ்புட்னிக்கின் ஒமிக்ரான் வெர்சன் 45 நாட்களில் பெரும் அளவிலான உற்பத்திக்குத் தயாராகிவிடும் எனக் கூறியுள்ளது.

அதேபோல் கோவிஷீல்டை தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவல்லா, ஒமிக்ரான் மீதான கோவிஷீல்ட் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார். மேலும் ஆக்ஸ்போர்டில் உள்ள நிபுணர்களும் ஆய்வை தொடர்ந்து வருவதாகவும், அவர்களின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் பூஸ்டராக செயல்படும் ஒரு புதிய தடுப்பூசியை ஆறு மாதங்களில் தாங்கள் உருவாக்கலாம் எனவும் கூறியுள்ளார். ஆய்வின் அடிப்படையில் நமக்கான மூன்றாவது டோஸ், நான்காவது டோஸ் பற்றியும் அறிந்துகொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT