ADVERTISEMENT

தொடரும் போர் பதற்றம்; ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா

02:35 PM Jan 27, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்டகாலமாகவே பிரச்சனை நிலவி வருகிறது. இந்தநிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு உக்ரைனின் பகுதியான கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்து, அதைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. மேலும் ரஷ்ய ஆதரவு பெற்ற உக்ரைன் கிளர்ச்சியாளர்கள், அந்தநாட்டின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளனர். இந்தநிலையில் தற்போது ரஷ்யா, உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்துள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் எனக் கருதப்படுகிறது. ஆனால் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை எனக் கூறி வருகிறது. ஆனால் இதனை மற்ற நாடுகள் நம்பவில்லை. உக்ரைன் மீது படையெடுத்தால், ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்கும் என அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

இதன்தொடர்ச்சியாக அமெரிக்கா, உக்ரைனைக்கு அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை அனுப்பியுள்ளது. மேலும் அமெரிக்கா, தனது 8,500 இராணுவ வீரர்களை கிழக்கு ஐரோப்பில் களமிறங்குவதற்குத் தயாரான நிலையில் வைத்துள்ளது. நேட்டோ நாடுகள், உக்ரைனைப் பாதுகாக்க போர் விமானங்களையும், போர் கப்பல்களையும் கிழக்கு ஐரோப்பாவிற்கு அனுப்பியுள்ளன. இந்தநிலையில் ரஷ்யா உக்ரைன் எல்லையில் குவித்துள்ள படைகளைத் திரும்ப பெற, கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ கூட்டணி விரிவுபடுத்தப்படுவது தவிர்க்கப்படும், நேட்டோவில் உக்ரைனை சேர்க்கப்படாது என்பது போன்ற உத்தரவாதங்களை வலியறுத்தியது. ஆனால் இதனை ஏற்க அமெரிக்காவும், நேட்டோ கூட்டணியும் மறுத்துள்ளது. மேலும் உக்ரைன் தொடர்பான பதற்றத்தை தணிக்க, தாங்கள் ரஷ்யாவிற்கு ஒரு இராஜதந்திர ரீதியிலான வழியை வழங்கியுள்ளோம் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.

இதற்கிடையே கிழக்கு உக்ரைனில் போர் நிறுத்தத்தை தொடர ரஷ்யாவும், உக்ரைனும் ஒப்புக்கொண்டுள்ளன. உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகளை தங்கள் வசம் வைத்துள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் அரசுக்கும் 2014ஆம் ஆண்டு செப்டம்பரில் போரை நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்டன. அந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து கடைபிடிக்க பாரிஸில், ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ரஷ்யாவும், உக்ரைனும் ஒப்புக்கொண்டுள்ளன. கிழக்கு உக்ரைனில் அமைதியைக் கொண்டுவர பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் 2014ஆம் ஆண்டு முதலே ரஷ்யாவோடும், உக்ரைனோடும் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மற்றும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக அடுத்தகட்ட பேச்சுவார்தை இரண்டு வாரங்களில் பெர்லினில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT