ADVERTISEMENT

உக்ரைனில் கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்படும் - ஐநா வேதனை

04:51 PM Jun 08, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமிப்பு பகுதியில் ககோவ்கா அணை உடைந்ததை தொடர்ந்து அந்த அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பல மாதங்களாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்தச் சூழலில் உக்ரைனின் முக்கிய அணையான நோவா ககோவ்கா அணை மீது தாக்குதல் நடத்தப்பட்டு அந்த அணையின் ஒரு பகுதி உடைந்துள்ளது. இதனால் அங்கு நிலைமை மிகவும் மோசம் அடைந்திருக்கிறது.

ககோவ்கா அணையின் கீழ் பகுதியில் நைவர் எனும் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றைச் சுற்றி பல ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் விளை நிலங்களும் அந்த ஆற்றைச் சுற்றி உள்ளன. தற்போது அந்த அணையின் ஒரு பகுதி உடைந்ததால் அங்கிருந்து வெளியேறும் நீர் ஆற்றில் வெள்ளமாக பெருக்கெடுத்து அந்த ஆற்றைச் சுற்றியுள்ள குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களில் புகுந்து அவை மூழ்கி வருகின்றன.

உக்ரைனில் உள்ள நோவா ககோவ்கா அணை முழுதாக உடைந்தால் 80 நகரங்கள் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கக்கூடும் என்று உக்ரைன் நாட்டு அதிபர் வலோதிமிர் செலேன்சுக்கி கூறியுள்ளார். அணையின் ஒரு பகுதி உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் உக்ரைனின் கெர்சன் நகரத்திற்கு வெள்ள அபாயமும், அதனால் பேரழிவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அணை உடைக்கப்பட்டு அதன் அருகில் உள்ள நீர்மின் நிலையத்திலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விபத்துகள் ஏற்படலாம் என்ற பதற்றமும் அங்கு நிலவி வருகிறது. ஏற்கனவே உக்ரைனில் போரினால் பதற்றம் நிலவி வரும் சூழலில் அணை உடைப்பினால் மேலும் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளை இரு நாட்டு ராணுவமும் தீவிரப்படுத்தியுள்ளன. இதுவரை நைவர் ஆற்றின் இரு கரைகளில் இருந்தும் 3,000க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் உடைந்துள்ள ககோவ்கா அணை குறித்து பேசியுள்ள உக்ரைன் அரசு, ககோவ்கா அணையின் மேற்கு கரையையும், அதனை ஒட்டியுள்ள கெர்சன் நகரையும் உக்ரைன் அரசு தான் நிர்வகித்து வருகிறது. இந்தச் சூழலில் இந்த விபத்துக்கு காரணம் ரஷ்யா இராணுவம் தான் காரணம் எனத் தெரிவித்துள்ளது. அதேபோல், இந்த அணை உடைந்த விவகாரம் குறித்து ரஷ்யா கூறுகையில், ஆற்றின் மேற்கு கரையை ரஷ்யா நிர்வகித்து வரும் நிலையில் உக்ரைன் ராணுவமே இந்த விவகாரத்திற்கு காரணம் என ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பழி சுமத்தி வருகின்றனர்.

உக்ரைன் நாட்டில் உள்ள ககோவ்கா அணை உடைப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. ‘இந்தச் சூழலில் சுகாதாரமான குடிநீருக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்படக்கூடும்’ என்று வேதனை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT