Skip to main content

வான் பாதுகாப்பு திறனை அழித்த ரஷ்யா - மெட்ரோ நிலையங்களில் தஞ்சமடைந்த உக்ரைன் மக்கள்!

Published on 24/02/2022 | Edited on 24/02/2022

 

ukraine

 

ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வந்தநிலையில், இன்று காலை உக்ரைனை தாக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து ரஷ்ய படைகள், உக்ரைனின் நகரங்கள் மீது கடும் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது.

 

மேலும் உக்ரைனுக்குள் ரஷ்ய வீரர்கள் நுழையத் தொடங்கியுள்ளனர். உக்ரைன் அதிபர், தங்கள் நாட்டு இராணுவம் தனது பணியை செய்து வருவதாகவும், மக்கள் பதற்றமடைய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர், ரஷ்ய படையெடுப்பிலிருந்து உக்ரைன் தன்னை தற்காத்துக்கொண்டு வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார். அதேசமயம், உலக நாடுகள் புதினை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இந்தச்சூழலில் ரஷ்ய இராணுவம் உக்ரைனின் உக்ரைனின் வான் பாதுகாப்பு திறனை அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது. அதேசமயம் உக்ரைன் நாடு, இதுவரை தங்களின் நூற்றுகணக்கான வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. உக்ரைன் மக்கள் ரஷ்ய படைகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க மெட்ரோ நிலையங்களிலும் சுரங்கப்பாதைகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

 

இதனிடையே கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பேரலுக்கு 102 டாலராக அதிகரித்துள்ளது. போரை நிறுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி, ரஷ்ய மற்றும் உக்ரைன் அதிபர்களை தொடர்புகொள்ள வேண்டும் என இந்தியாவிற்கான உக்ரைன் தூதர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், ரஷ்யா, உக்ரைன் பிரச்சனையில் இந்தியா நடுநிலை வகிக்கும் எனவும், அமைதியான தீர்வை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்