ADVERTISEMENT

மருத்துவமனைக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம்; ஆக்சிஜன் துண்டிப்பால் நோயாளிகளுக்கு நேர்ந்த சோகம்

06:54 PM Feb 16, 2024 | mathi23

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 3 மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

போர் விமானங்கள் மூலம் காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்போது மீண்டும் காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த போருக்கு சர்வதேச அளவில் அழுத்தமும் அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் போர் நிறுத்தம் வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. ஆனால் எதையும் இஸ்ரேல் கண்டுகொள்ளாமல் தான் சொன்னபடி ஹமாஸ் அமைப்பில் இருக்கும் கடைசி நபரை அழிக்கும் வரை யுத்தம் முடிவுக்கு வராது என்று தொடர்ந்து காசா மீது குண்டு மழையைப் பொழிந்து வருகின்றது. இதில் காசாவில் நிமிடத்திற்கு நிமிடம் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 22,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 57,614 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு காசாவில் உள்ள பிரதான மருத்துவமனையான நாசர் மருத்துவமனையில், ஹமாஸ் அமைப்பினர் ஊடுருவி இருப்பதாகவும், அந்த மருத்துவமனையில் இஸ்ரேல் பிணைக் கைதிகளை அடைத்து வைத்திருப்பதாகவும் இஸ்ரேல் ராணுவம் குற்றச்சாட்டு வைத்தது. அதன் பேரில், இஸ்ரேல் ராணுவப் படையினர், நாசர் மருத்துவமனைக்குள் நுழைந்து சோதனை நடத்தி ஆக்சிஜனை நிறுத்தியுள்ளது; இதன் காரணமாக அங்கு 4 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.

இது குறித்து பாலஸ்தீன அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, ‘இஸ்ரேல் ராணுவம் மருத்துவமனைக்குள் நுழைந்து சோதனை நடத்தியதன் மூலம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஜெனரேட்டர்களையும், மின்சாரத்தையும் துண்டித்துள்ளது. இதனால் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஆக்சிஜன் உதவி துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், நான்கு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளின் நிலை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளின் நிலை கவலையளிக்கிறது’ என்று கூறியது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT