ADVERTISEMENT

ஆமானுடன் துர்க்கை.. கண்டெடுத்த கிராமத்தில் வைத்து வழிபட மக்கள் ஆர்வம்

02:52 PM Aug 07, 2019 | Anonymous (not verified)

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகாவிற்கு உட்பட்ட காந்தளூர் கிராமத்தில் மான் வாகனத்துடன் கூடிய அபூர்வமான துர்க்கை அம்மன் சிற்பம், தண்ணீர் குழாய் பதிப்பதற்கு குழிவெட்டியபோது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் சிற்பத்தை தண்ணீர் ஊற்றி கழுவி வழிபாடு நடத்தினர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மண்ணில் புதைந்திருந்த சிற்பம் குறித்தும் அதன் தொன்மை குறித்தும் அறிந்து கொள்ளும் பொருட்டு அவ்வூர் இளைஞர்கள் தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் ஆ. மணிகண்டன் மற்றும் தலைவர் கரு. ராஜேந்திரன் ஆகியோருக்கு படங்கள் உள்ளிட்ட விவரங்களை அனுப்பி தகவல் கேட்டிருந்தனர்.

இதனையடுத்து தொல்லியல் ஆய்வுக்கழகத்தினர் காந்தளூர் கிராமத்திற்கு சென்ற நிலையில், அந்த சிற்பம் வருவாய் துறை வட்டாட்சியர் ரபீக் அகமது தலைமையிலான குழுவினர் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட தகவல் தெரியவந்தது.

இது குறித்து தொல்லியல் கழகத்தினரிடம் கேட்டபோது,
சிற்பம் மீட்கப்பட்டது குறித்து திருச்சி கோட்டாட்சியர் அவர்களிடம் தகவல் கேட்டறியப்பட்டு உறுதிசெய்து கொண்ட பின்னர் திருவெறும்பூர் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்ட சிற்பம் சார்ந்த விவரங்கள் கேட்டறியப்பட்டது.

அப்போது அச்சிற்பம் துணி சுற்றப்பட்டு சீலிடப்பட்ட நிலையில் திருவெறும்பூர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் தகவல் தெரிவித்தார்.

அபூர்வமான துர்க்கை:

சங்க காலப் பாடல்களிலும் இன்னும் பிற இலக்கியங்களிலும் கூறப்பட்டுள்ளவாறு வாகனத்தினை கொண்ட துர்க்கையாக காணப்படுகிறது. எட்டு கரங்களிலும் சங்கு சக்கரம் சூலம் குறுவாள் உள்ளிட்ட ஆயுதங்களை தாங்கி நின்றாலும், சாந்தமான முகத்தோற்றத்துடன் இடது புற கரமொன்றை தொடையில் வைத்தவாறு சிற்பம் வடிக்கப்பட்டிருப்பது சிறப்பான வடிவமைப்பாகும்.

மார்பு கச்சையுடன் நின்ற கோலத்தில் காட்சிதரும் தாயாருக்கு ஆமானைத்தவிர வேறு வாகனங்கள் காட்டப்படவில்லை.

காலம் :
இது முற்கால சோழர் கலைப் பாணியில் அமைக்கப்பட்டிருப்பதால் இதனை பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பமாக கருதலாம் என்றாலும் இதன் முடியமைப்பு , முக வடிவமைப்பு உள்ளிட்டவை தாராசுரம் கோவில் சிற்ப அமைவில் ஒத்துபோகிறது என்பதால் 12 ஆம் நூற்றாண்டுக்குட்பட்து என கணிக்கலாம்.

ஆமான் பற்றிய இலக்கிய பதிவுகள்:
ஆமான் பார்ப்பதற்குப் பசுவைப்போலவும் அதேசமயம் மான் போன்ற தோற்றமும் அதைவிடச் சற்று உயரமாகவும் உள்ள விலங்காகும்.

”கொடுங்கோட்டு ஆமான் நடுங்குதலைக் குழவி புன்தலைச் சிறா அர் கன்றெனப் பூட்டும்” அதாவது வளைந்த கொம்பினை உடைய ஆமான்களின் இளங்கன்றைச் சிறுவர்கள் தம்முடைய சிறுதேர்க்குச் சேங்கன்றாகப் பூட்டி ஓட்டினர் என்று கூறுவதன் மூலம் ஆமான்களின் கொம்பு வளைந்து இருந்தது என்பதும் அது சேங்கன்று போல இருந்ததாகவும் அறிய முடிகிறது. புறநானூற்றின் 319 வது பாடல் மூலமும், ”புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்சினங்கழி மூதாக் கன்றுமடுந் தூட்டும்”
புறநானூற்றின் 323 பாடல் மூலம் புலியால் இறந்துபட்ட மானினுடைய கன்றுக்குக் கறவைப்பசு தன்கன்றாகக் கருதி பாலை ஊட்டும் என்பதால் இது பசுபோன்ற தோற்றம் உடையது என்பது உறுதியாகிறது . இதனால் பசு அல்லாத வேற்றினம் என்னும் பொருளில் ஆமான் என மக்கள் பெயரிட்டு அழைத்துள்ளனர்.

பதிற்றுப்பத்தில் [ 30;10] கருங்கோட்டு ஆமான் என்ற செய்தி
ஆமானின் நிறத்தைக் குறிக்கக் கருங்கோட்டு ஆமான் என கூறப்படுகிறது .

குறிஞ்சிப்பாட்டில்
(253) ”புழற்கோட்டு ஆமான்” என்று கூறுவதன் மூலம் இதன் கொம்பு உள்துளை உடையது என்பதையும்,

சிறுபாணாற்றுப்படையில் ஆமான் பற்றிய செய்தி முல்லை நிலத்தூராகிய வேலூரில் (உப்பு வேலூர்) பாணர்கள் சென்று தங்கிய போது அவர்களுக்கு எயினர்குலப் பெண்கள் புளியங்கறியிட்ட சோற்றுடன் ஆமாவின் இறைச்சியையும் தந்து அவர்களுடைய பசியைத் தீர்த்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.


சிலப்பதிகாரத்தில் கொற்றவையைப் பற்றிக் குறிப்பிடும் வேட்டுவ வரிகளில்
”கரிய திரிக்கோட்டுக் கலைமிசைமேல்நின்றாயால்' என துர்க்கையின் வாகனம் மான் என குறிப்பிடப்பட்டுள்ளது.
'இருண்முகைச் சிலம்பின் இரைவேட்டு எழுந்த' 'பனைமருள் எருத்திற் பல்வரி இரும்போத்து''மடக்கண் ஆமான் மாதிரத்து அலறத்' 'தடக்கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு என்கிறது அகநானூறு( 238)
ஆமான் பாவை[துர்க்கை]ச் சிலைகளில் துர்க்கையின் வாகனமாக ஆமான் உள்ளதால் துர்க்கை சிற்பம் "ஆமான் பாவை" என அழைக்கப்பட்டது .


திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் உள்ள கட்டளைக் கிராமம் , மானூர், நத்தமேடு இவ்வூரில் உள்ள துர்க்கை சிலைகளில் வாகனமாக ஆமான் உள்ளது.
புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் துர்க்கை தேவகோட்டத்தின் இருபுறங்களிலும் வாகனமான சிங்கம் மற்றும் மான் வடிக்கப்பட்டுள்ளது.


தற்போது காந்தளூரில் அடையாளம் காணப்பட்ட அதே கோலத்தில் திருவண்ணாமலை செல்லும் பாதையில், 5 கி.மீ தொலைவில் அகரம் - குலதீபமங்களம் என்ற அழகிய சிற்றூர் அமைந்துள்ளது. வழிபாட்டில் இருக்கும் துர்க்கை வடிவம் மிகவும் சிறப்பானது. இலக்கியங்களில் கொற்றவை என அழைக்கப்படுகிறாள்.


மேலிருகரங்களில் சக்கரமும் - சங்கும் தாங்கியும், கீழிருகரங்களில் வலது கரம் மலர் ஏந்தும் நிலையிலும், இடதுகரம் தொடை மீது வைத்தும் தேவியின் பின்புறத்தில் கலை மான் நிற்கும் கோலத்தில் துர்க்கை அம்மன் வடிக்கப்பட்டுள்ளது ஒப்புநோக்கும் வகையில் உள்ளது. என்றனர்


இந்த அபூர்வ சிலையை கண்டுத்த கிராம மக்கள் தாங்களே வைத்து வழிபாடுகள் நடத்துகிறோம் என்று முதல்கட்டமாக அபிஷேகங்களும் செய்தனர். ஆனால் தகவல் அறிந்து வந்த வருவாய் துறை அதிகாரிகள் தொல்லியல் துறைக்கு தகவல் சொல்லவில்லை. சிலையை மீட்க வந்த நிலையில் பொதுமக்கள் சிலையை இதே ஊரில் வைத்து விட்டுபோகச் சொன்னார்கள்.

சிலர் சிலையை எடக்கவிடாமல் தடுக்க வந்தனர். அப்போது குறுக்கிட்ட அதிகாரிகள் 100 நாள் வேலை செய்யும் பெண்கள் சிலையை எடுக்க விடாமல் தடுக்கிறார்கள். அவர்களுக்கு இன்று ஆப்செண்ட் போடுங்கள் என்று ஒன்றிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததால் பெண்கள் ஒதுங்கினார்கள். அடுத்து சில இளைஞர்கள் அபூர்வ சிலை எஙகள் ஊரில் இருந்தால் ஊருக்கும் எங்களுக்கும் பெருமை என்றனர். அவர்களைப் பார்த்த வருவாய் துறை அதிகாரிகள் ஜாதி, வருமானம், இருப்பிடசான்று என்று எங்களிடம் வரும் போது தரமாட்டோம் என்று மிரட்டல் தொணியில் சொன்னதால் அவர்களும் ஒதுங்கினார்கள். அதன் பிறகு எடுத்து சென்றுள்ளனர்.


ஆனால் மத்திய, மாநில, தொல்லியல் துறைக்கு தகவல் கொடுத்து ஆய்வு செய்தது போல தெரியவில்லை. அபூர்வ சிலை இதை ஆய்வு செய்தால் தமிழர்களின் வரலாறு, கலை, பண்பாடு தெரிய வரும். அதை துணியில் சுற்றி ஓரமாக வைத்திருந்தால் எப்படி வெளிவரும் வரலாறு. அதனால் தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்கிறார்கள் கிராம மக்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT