ADVERTISEMENT

குகையில் சிக்கிய தாய்லாந்து சிறுவர்கள்! காத்திருக்கும் பிறந்தநாள் கேக்!

11:34 AM Jul 05, 2018 | Anonymous (not verified)

கரைபுரண்டோடும் வெள்ளத்தின் நடுவே குகையில் சிக்கியிருக்கும், தாய்லாந்தைச் சேர்ந்த பள்ளிச்சிறுவர்கள் 12 பேரை எப்படி மீட்கப்போகிறார்கள் என உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தாய்லாந்தைச் சேர்ந்த இளம் சாக்கர் வீரர்கள் 12 பேர், தங்கள் பயிற்சியாளர் ஒருவருடன் பயிற்சிக்குப் பின்பு ஜாலியாக நேரம் செலவிடுவதற்கு வந்த இடத்தில்தான் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டுள்ளனர். வெள்ளத்திலிருந்து தப்பிக்க ஒரு குகையில் அடைக்கலம் புகுந்திருக்கும் இவர்கள் ஒரு வார காலத்துக்கும் மேலே என்ன ஆனார்கள் என்றே தகவல் தெரியாமலிருந்தது.
தாய் கடற்படை வீரர்களும் பிரிட்டிஷ் நேவி எக்ஸ்பர்ட்டுகளும்தான் அவர்கள் உயிரோடு இருப்பதை உறுதிசெய்து பேஸ்புக்கில் புகைப்படம் வெளியிட்டனர். இதையடுத்து சியாங் ராய் மாகாணத்தின் தாம் லுவாங் குகையிலிருந்து அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.

தொடர்ந்து பெருகிவரும் வெள்ளத்தால் அவர்களை அங்கிருந்து மீட்பதில் தாமதம் ஏற்பட்டுவருகிறது. அதனால் குகைக்குள் செல்லும் நீரின் அளவைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை 120 மில்லியன் லிட்டர் குகையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறது. குகையின் வாசலிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் அவர்களை மீட்பு படையினர் மூலம் குகை வாசலுக்குக் கொண்டுவருவது, அல்லது குகையை துளையிட்டு அதன் மூலம் மீட்பது என இரு மீட்பு முறைகள் பரிசீலிக்கப்படுகின்றன.

இரு முறைகளிலுமே ஆபத்துகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் சிறுவர்களுக்கு டைவிங் மற்றும் ஸ்விம்மிங் பயிற்சியளிக்கப்படுகிறது. வெள்ளத்தின் வேகம் குறையும்பட்சத்தில், அவர்களை மீட்பது சுலபமாகும் என மீட்புக் குழு எதிர்பார்க்கிறது.

சிறுவர்களுக்கு குளிரைத் தாங்கிக்கொள்ள அவசரகால பாயில் பிளாங்கட், வெளிச்சத்துக்காக டார்ச் அளிக்கப்பட்டிருக்கிறது. மீட்புப்பணியில் ஆஸ்திரேலியன் பெடரல் போலீஸ், அமெரிக்க ராணுவம், பிரிட்டிஷ் குகை நிபுணர்கள், சீனா, ஜப்பான், மியான்மர் என பன்னாட்டு நிபுணர் பட்டாளமே ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

குகையில் சிக்கிக்கொண்ட சிறுவர்களில் ஒருவன் நைட். நைட்டின் குடும்பம், அவன் பயிற்சிக்குச் சென்ற இரவு அவனது பெர்த்டே கேக்குடனும், விருந்து தயாரிப்புகளுடனும் பிறந்தநாளைக் கொண்டாடக் காத்திருந்தது. ஆனால் அவனோ கொஞ்சம் சிற்றுண்டிகளுடன் குகையில்போய் மாட்டிக்கொண்டான். நைட் கொண்டுசென்ற சிற்றுண்டிதான், ஒரு வார காலத்துக்கும் மேலான குகைவாசத்தில் அவர்களது பசிக்கு ஆதாரமாக இருந்திருக்கிறது என்கிறார்கள்.

நைட்டின் சகோதரியான புன்பஸ்தா, அந்த கேக்கை பத்திரமாக ஃபரிட்ஜில் பத்திரப்படுத்தியிருக்கிறாராம். அவன் திரும்பிவந்ததும் அவனுக்கு அந்த கேக்கைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தி தாமதனாலும் அவன் பிறந்தநாளைக் கொண்டாடக் காத்திருக்கிறாள்.

தாய்லாந்தின் லட்சோப லட்சம் உள்ளங்களுடன், ஒரு கேக்கும் காத்திருக்கிறது சிறுவர்களின் வருகைக்காக..

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT