ADVERTISEMENT

“உங்க பணமும் வேண்டாம்; பட்டமும் வேண்டாம்..!” - சாமானியனை கரம்பிடித்த ஜப்பான் இளவரசி!

11:11 AM Oct 28, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜப்பான் நாட்டின் பேரரசர் நருஹிட்டோவின் இளைய சகோதரரான இளவரசர் புமிஷ்டோவின் மூத்த மகள் இளவரசி மகோ ஆவார். இவர் 2012ஆம் ஆண்டு கல்லூரியில் படித்த போது தன்னுடன் படித்த கெய் கொமுரோ என்னும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நண்பருடன் நட்பாகப் பழகியுள்ளார். பின்னர் நாளடைவில் அது காதலாக மலர்ந்துள்ளது. அரசக் குடும்பத்துப் பெண்கள் சாதாரண நபர்களைத் திருமணம் செய்துகொள்ள தடை உள்ளது. இதனால் கடந்த பல ஆண்டுகளாகவே இவர்களின் திருமணத்துக்கு முட்டுக்கட்டை நிலவியது.

அதன்பின்னர் 2017ஆம் ஆண்டு இருவரும் தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டனர். திருமணம் என அறிவித்தது முதல் திருமண தாமதத்திற்கான காரணங்கள் சர்ச்சைகளாகக் கிளம்பின. ஆனாலும் இருவரும், உடனடியாக திருமணம் செய்துகொள்வதைவிட, தங்கள் வாழ்வைத் திட்டமிட காலம் தேவைப்படுவதாகக் கூறினர். அதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு நவம்பரில் இம்பீரியல் ஹவுஸ் ஹோல்ட் ஏஜென்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் இளவரசி மகோ, “நாங்கள் திருமணம் செய்துகொள்வதுதான் எங்கள் இதயங்கள் மதிப்புடன் வாழ்வதற்கு சிறந்த தேர்வு. எங்களில் ஒருவர் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது.

மகிழ்ச்சியான நேரங்களிலும் மகிழ்ச்சியற்ற நேரங்களிலும் ஒருவருக்கொருவர் தோள் சாய்ந்து கொள்வோம்” என்று கூறினார். அதேபோல் அரசு வழக்கப்படி, இளவரசி சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நபரை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றால், அவர் தனது அரசப் பட்டத்தைத் துறக்க வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி காதலனைக் கைப்பற்றுவதற்காக தனது அரசப் பட்டம் மற்றும் அரசு நிதியுதவி ஆகியவற்றை வேண்டாம் என இளவரசி தெரிவித்துள்ளார். இந்நிலையில், தங்களின் திருமணம் பாரம்பரிய முறையில் இல்லாமல், சாமான்யர்களைப் போல் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தன. இந்நிலையில், இவர்களின் திருமணம் அக். 26 அன்று காலை நிறைவடைந்தது. மகோ பல ஆண்டுகள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காதலுக்காக அரச குடும்பத்தின் சொத்தை விட்டுக்கொடுத்தார்.

அவர் விட்டுக்கொடுத்த தொகை 137 மில்லியன் யென் அதாவது 1.2 மில்லியன் டாலர் எனக் கூறப்படுகிறது. அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண் சாமான்யரை திருமணம் செய்துகொள்ளும்போது ஒரு குறிப்பிட்ட தொகை அவருக்கு சீதனமாகக் கொடுக்கப்படும். அந்தத் தொகையை மகோ வேண்டாம் என்று நிராகரித்துள்ளார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் இவ்வாறாக அரச குடும்பத்தின் சீதனத்தை நிராகரிக்கும் முதல் பெண் மகோதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அரச குடும்பத்தின் பெயரையும் தனது பெயருக்குப் பின்னால் அவர் பயன்படுத்த மாட்டார். அவரது கணவரின் குடும்பப் பெயரையே மகோ இனி பயன்படுத்துவார். உயர்வான அந்தஸ்த்தில் இருந்தபோதிலும் காதலுக்காக இளவரசி செய்த தியாகம் பலரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT