ADVERTISEMENT

“குஜராத்தின் கசாப்பு கடைக்காரர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்” - பிரதமரைத் தனிப்பட்ட முறையில் சாடிய பாகிஸ்தான்

02:28 PM Dec 16, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனைக் கூட்டம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் தொடர்பாக ஆரம்பம் முதலே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காரசாரமாக விவாதங்கள் தொடர்ந்து வருகிறது. நேற்று இந்தக் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி காஷ்மீர் தொடர்பாக ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்தியா நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி, காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகிறது எனக் குற்றஞ்சாட்டினார்.

இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள், அண்டை நாட்டின் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களெல்லாம் மனித உரிமை மீறல்களைப் பற்றி பேசலாமா” எனப் பதிலடி கொடுத்தார். இது தொடர்பாகப் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, “பின்லேடன் இறந்துவிட்டார். ஆனால், குஜராத்தின் கசாப்பு கடைக்காரர் வாழ்கிறார் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். அவர் இந்தியாவின் பிரதமராக இருக்கிறார். அவர் அமெரிக்காவிற்குள் நுழையக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டிருந்தது" என்று பிரதமர் மோடியைக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.

மேலும், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்ட அவர்கள் காந்தியைக் கொன்றவரை ஹீரோவாக வணங்குகிறார்கள் என்றும், குஜராத் மற்றும் காஷ்மீரில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவால் பயங்கரவாதம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பேசியதாகச் சொல்லப்படுகிறது.

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது குஜராத் முதல்வராக மோடி இருந்ததன் காரணமாக, 2005 ஆம் ஆண்டு மோடி அமெரிக்காவினுள் நுழைய அனுமதிக்க முடியாது எனக் கூறி அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு மோடி இந்தியாவின் பிரதமரான பிறகே அத்தடையை அமெரிக்கா தளர்த்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT