Skip to main content

ஓரங்கட்டப்படும் அண்ணாமலை; லைம் லைட்டுக்கு வரும் வானதி - டெல்லியில் புதிய திட்டம்

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

annamalai vs vanathisrinivasan bjp issuse

 

அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா பண்ணிடுவேன் என அதிரடி கிளப்பிய அண்ணாமலையின் பேச்சின் பின்னணியில் நிறைய பகீர் தகவல்கள் இருக்கின்றன என்கிறார்கள் தமிழக பா.ஜ.க.வினர்.

 

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து பா.ஜ.க.வின் மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் கடந்த சனிக்கிழமை நடந்தது. காலை 10 மணிக்கு கூட்டம் ஆரம்பிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கம் போல அண்ணாமலை வருவதற்கு லேட்டானதால், அவருக்காகக் காத்திருக்காமல் கூட்டத்தை ஆரம்பித்தார் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம். கூட்டத்தில் அவர் பேசும்போது, "தமிழகத்தில் 65,000 பூத்கள் இருக்கின்றன. இதில் ஏ-பிரிவு என 25 ஆயிரம் பூத்களை நாம் அடையாளம் கண்டிருக்கிறோம்” என்று ஆரம்பித்து, தேர்தல் பணிகளை எப்படி முன்னெடுக்க வேண்டுமென க்ளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார். அவரது உரை போர் அடித்ததால் நிர்வாகிகள் பலரும் நெளிந்து கொண்டிருந்தனர். தேர்தல் குறித்து பல கருத்துக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிலையில், மதியம் 12:10 மணிக்கு உள்ளே நுழைந்தார் அண்ணாமலை.

 

கூட்டத்திற்கு வந்தவர் சிறிது நேரம் ஆசுவாசப் படுத்திக்கொண்டார். பிறகு மைக் பிடித்த அண்ணாமலை, “தமிழக பா.ஜ.க.வுக்கு நான் மேனேஜர் கிடையாது; மாநில தலைவர்! கட்சியை வளர்க்க என்னிடம் நிறைய வியூகங்கள் இருக்கிறது. வருகிற தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் அல்லது தனித்துப் போட்டியிட வேண்டும். தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி என தேசிய தலைமை முடிவெடுத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக பணியாற்றுவேன். கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்காக மே மாதம் 10-ந் தேதி வரை பிஸியாக இருப்பேன். அதன்பிறகு என் முடிவை தெரிவிக்கிறேன்” என பரபரப்பாகப் பேச, கூட்டத்தில் ஏகத்துக்கும் சலசலப்பு எதிரொலித்தது.

 

அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சிலர், “ராஜினாமா செய்வேன் என்கிற பேச்சே கூடாது. பேசியதை வாபஸ் வாங்குங்கள்” என்றெல்லாம் குரல் கொடுத்தனர். வானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதி, கருப்பு முருகானந்தம் போன்றவர்கள் அண்ணாமலையின் பேச்சைக் கண்டித்தும் மறுத்தும் பேசினர். குறிப்பாக வானதி சீனிவாசன் பேசும்போது, “கூட்டணி குறித்தெல்லாம் முடிவு செய்வது தேசிய தலைமைதான். அவர்கள் எடுக்கும் முடிவினை ஏற்று அதனை வெற்றிபெற வைப்பதுதான் நமது கடமை. கட்சியின் மையக் கமிட்டியில் விவாதிக்க வேண்டிய விசயத்தை இந்த கூட்டத்தில் பேசுவது சரி அல்ல” என்றெல்லாம் விளாசினார்.

 

ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியது, அதனைக் கண்டிக்கும் வகையில் சீனியர்கள் பேசியது என ஏக பரபரப்பை ஏற்படுத்தியது அந்த ஆலோசனைக் கூட்டம். அண்ணாமலை இப்படி பரபரப்பாகப் பேசியதற்கு ஏதேனும் பின்னணிகள் இருக்கிறதா? என நாம் விசாரித்தபோது, “சித்தன் போக்கு சிவன் போக்கு என்ற நிலையில் தான் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை. தலைவர் பதவியை வைத்துக் கொண்டு அவரைத்தான் ப்ரமோட் செய்து கொள்கிறாரே தவிர கட்சியை வளர்க்கவில்லை. வெறும் சோசியல் மீடியாக்களில் ஸ்டேடஸ் போட்டால் கட்சி வளர்ந்துவிடும் என நினைக்கிறார். சீனியர்களிடமும் நிர்வாகிகளிடமும் பொறுப்பாளர்களிடமும் எதையும் விவாதிப்பதில்லை. அவருக்கு ஜால்ரா தட்டுகிற நாலு பேர்தான் கட்சி என நினைத்துக்கொண்டு அவர்களிடம் மட்டுமே ஆலோசிக்கிறார். தலைவர் ஆனதிலிருந்தே இப்படித்தான் கட்சியை நடத்தி வருகிறார் அண்ணாமலை.  இதனால் கட்சியினருக்கும் இவருக்குமான இடைவெளிகள் அதிகரித்துவிட்டன. இந்த இடைவெளிதான் பா.ஜ.க.விலிருந்து பலரும் அ.தி.மு.க.வுக்கு செல்ல உந்தித் தள்ளியது. இதையெல்லாம் தேசிய தலைமைக்கு தமிழக தலைவர்கள் ரிப்போர்ட் அனுப்பியபடியே இருந்தனர்.

 

தமிழகத்திலிருந்து ஓரிரு எம்.பி.க்களையாவது இந்த முறை பெற்றாக வேண்டும் என திட்டமிட்டுள்ள ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் தேசிய தலைமைகள், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என முடிவெடுத்துள்ளனர். அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்தால் பட்டியலின  மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகள் கூட்டணிக்கு கிடைக்காமல் போகும். அதற்கு பதிலாக அதனை ஈடுகட்டும் வகையில் மற்ற சமூகத்தினரின் வாக்குகளும் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியும் பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் என்பதை கணக்கிட்டே அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி என முடிவெடுத்து வைத்திருக்கிறார்கள்.

 

இப்படிப்பட்ட சூழலில், அண்ணாமலையின் சர்வாதிகார தொனியிலான அரசியல் தேசிய தலைமையின் முடிவுகளுக்கு செக் வைப்பதாக மோடியிடமும் அமித்ஷாவிடமும் கொடுக்கப்படும் ரிப்போர்ட்டுகள் அலறின. இதனையடுத்துத்தான் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை தமிழகத்திற்கு அனுப்பி வைத்த அமித்ஷா, அ.தி.மு.க. வுடன்தான் கூட்டணி என்பதை அழுத்தமாக சொல்லி வாருங்கள் என உத்தரவிட்டார். அதன்படி கிருஷ்ணகிரி கூட்டத்தில் இதனைத் தெரிவித்த ஜே.பி.நட்டா, அண்ணாமலையிடம் மட்டும் தனியாக, “உங்கள் தலைமை மீது மோடியும் அமித்ஷாவும் அதிருப்தியடைந்திருக்கிறார்கள். நாடாளுமன்றக் கூட்டம் முடிந்ததும் நீங்கள் டெல்லிக்கு அழைக்கப்படுவீர்கள். தலைவர் பதவியிலிருந்து உங்களை நீக்கவும் ஒரு அஜெண்டா மேலிடத்தில் இருக்கிறது” என எச்சரித்தார். அப்போதே அண்ணாமலைக்கு உதறல் எடுத்துவிட்டது.

 

அதன்பிறகு டெல்லியில் தனக்கு எதிராக நடப்பவைகளை அறிந்து அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை, "அவர்களாக நீக்குவதற்கு முன்பு தேசிய தலைமையிடம் ஒரு மோதல் போக்கினை உருவாக்கி வைத்துக் கொள்வோம் என்கிற திட்டமிடலில்தான், ராஜினாமா அஸ்திரத்தை வீசினார்” என்று விவரிக்கிறார்கள் அண்ணாமலையின் உள்ளும் புறமும் அறிந்த சீனியர்கள்.

 

உளவுத்துறை வட்டாரங்களில் இதுகுறித்து விசாரித்தபோது, "சமீபத்தில் ஜி.கே.வாசனை டெல்லிக்கு அழைத்து அவரிடம் 30 நிமிடங்கள் தனிப்பட்ட முறையில் ஆலோசித்தார் பிரதமர் மோடி. தமிழக அரசியல், நாடாளுமன்ற தேர்தல், தி.மு.க. நிலவரம் என நிறைய ஆங்கிளில் விவாதித்திருக்கிறார்கள். குறிப்பாக, அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி நீடித்தால் மட்டுமே அது பா.ஜ.க.வுக்கு லாபம். கூட்டணியை உறுதிப்படுத்துவதில் நீங்கள்தான் முயற்சிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் என்பதால், பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தித்தான் வாக்கு கேட்க முடியும் என்பதால் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணிக்கு அது பலம். எடப்பாடிக்கும் அண்ணாமலைக்குமிடையே தனிப்பட்ட அரசியல் ஓடுவது பா.ஜ.க.வுக்கு நல்லதல்ல. அண்ணாமலையின் அரசியல், கூட்டணிக்குள் சிக்கலைத்தான் ஏற்படுத்துகிறது. எடப்பாடி உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்கள் என்னிடம் பேசும்போது இதனைத்தான் வெளிப்படுத்துகிறார்கள். இதற்கெல்லாம் சரியான தீர்வை நீங்கள்தான் தர வேண்டும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார் ஜி.கே.வாசன்.

 

இது மட்டுமல்ல; ஏற்கனவே உளவுத்துறையிடமிருந்து அண்ணாமலையை பற்றி நிறைய ரிப்போர்ட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, தலைவர் பதவியை வைத்து சுமார் 300 கோடிக்கும் அதிகமாக நிறைய சம்பாதித்துவிட்டார். தேர்தலில் ஜெயிக்க பணம் இருந்தால் மட்டுமே முடியும்; கொள்கையும், பா.ஜ.க. தலைவர் பதவியும் உதவாது என நம்புகிறார் அண்ணாமலை. அதற்காகவே கோடிகளை சேமித்து வைக்கிறார். அப்படி சேமித்ததுதான் 300 கோடி ரூபாய்.

 

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்துவிட வேண்டும்; அதனை வைத்து மத்தியில் அமைச்சராகிவிட வேண்டும்; அந்த இமேஜை வைத்து 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக முதலமைச்சராக வேண்டும் என்பதுதான் அண்ணாமலையின் கனவு; அஜெண்டா எல்லாம்! இதில் தனக்கு எதிராக தேசிய தலைமை ஏதேனும் முடிவெடுத்தால் தனிக்கட்சி ஆரம்பிப்பது என்கிற மூடில் இருக்கிறார் அண்ணாமலை. இதனை நோக்கி அண்ணாமலையை நகர்த்த தி.மு.க.வின் முக்கிய அதிகார மையமும் தூபம் போட்டுக்கொண்டிருக்கிறது. அந்த அதிகார மையத்துடனான நெருக்கம் கடந்த பல மாதங்களாக ஆரோக்கியமாக வளர்ந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களையும் கைப்பற்றத் துடிக்கும் தி.மு.க., எதிர்க்கட்சிகளின் வாக்குகள், ஆளும் கட்சி மீதான அதிருப்தி வாக்குகளை சிதறடிக்கும் யுக்தியை திட்டமிடுகிறது. அந்த வகையில்தான் அண்ணாமலையை தனிக்கட்சி ஆரம்பிக்க வைக்கவும் அதற்கு நிதி உதவி பண்ணுவதாகவும் ஆசைகளைத் தூண்டி விடுகிறது அந்த அதிகார மையம். இதில் மயங்கியுமிருக்கிறார் அண்ணாமலை.

 

உளவுத்துறையின் இத்தகைய ரிப்போர்ட்டுகளை வைத்து அண்ணாமலை மீது மோடியும் அமித்ஷாவும் கடும் கோபத்திலிருக்கிறார்கள். இந்த மாத இறுதியில் டெல்லிக்கு வரவழைக்கப் பட்டிருக்கும் அண்ணாமலையிடம் ராஜினாமா கடிதத்தை அமித்ஷா வாங்குவார். கர்நாடக தேர்தல் முடிந்ததும் அண்ணாமலை நீக்கப்படுவார்” என்று விவரிக்கிறார்கள் உளவுத்துறையினர். இதற்கிடையே அண்ணாமலை நீக்கப்படும் பட்சத்தில், புதிய தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், நரேந்திரன் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. இதில் வானதிக்கு அதிக வாய்ப்பிருப்பதாக சொல்கிறது கமலாலய வட்டாரம்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“ஸ்மிருதி இராணியை இழிவுபடுத்த வேண்டாம்” - ராகுல் காந்தி வேண்டுகோள்

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Rahul Gandhi said that Don't insult Smriti Irani

கடந்த 2019 நாடாளுமன்றத்  தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது குடும்பத் தொகுதியான அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி தோற்கடித்தார். அதேபோன்று இந்த முறையும் ராகுல் காந்தியை அமேதி தொகுதியில் தோற்கடிப்பேன் என்று ஸ்மிருதி இராணி சவால் விடுத்தார். ஆனால் கடைசி நேரத்தில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடாமல், காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். 

அதே சமயம் அமேதியில் ஸ்மிருதி இராணியை எதிர்த்து ராகுல் காந்தி குடும்பத்தின் நம்பிக்கைக்குரிய நபரான கிஷோரி லால் சர்மாவைக் காங்கிரஸ் நிறுத்தியது. பின்னர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இராணியைத் தோற்கடித்து கிஷோரி லால் சர்மா அமோக வெற்றிபெற்றார். இதனைத் தொடர்ந்து தோல்வியை ஒப்புக்கொண்ட ஸ்மிருதி இராணி, தொடர்ந்து அமேதி தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினர் ஸ்மிருதி இராணிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

இந்த நிலையில் ஸ்மிருதி இராணியை இழிவுபடுத்த வேண்டாம் என நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பக்கத்தில், “வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் சகஜம். அதனால் அந்த விஷயத்தில் ஸ்மிருதி இராணி அல்லது வேறு எந்தத் தலைவர்களையும், இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும், கேவலமாக நடந்து கொள்வதையும் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மக்களை அவமானப்படுத்துவதும் அவமதிப்பதும் பலவீனத்தின் அடையாளம், வலிமை அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

‘ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினம்’ - மத்திய அரசு அறிவிப்பு

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
central govt said June 25 to be observed as Constitution black Day

1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 352 தொகுதிகளையும், கம்யூனிஸ்ட்கள் 48 தொகுதிகளையும், ஜனசங்கம் 22 தொகுதிகளையும், காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் 16 தொகுதிகளையும் கைப்பற்றியது. உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி போட்டியிட்டார். அவரை எதிர்த்து சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் ராஜ் நாராயணன் போட்டியிட்டார். இதில் ராஜ் நாராயனணை தோற்கடித்து ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றிபெற்றார்.

இந்த நிலையில், இந்திராகாந்தியின் வெற்றியை எதிர்த்து ராஜ் நாராயணன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இந்திராகாந்தியின் வெற்றி செல்லாது என்று கடந்த 1975 ஆம் ஆண்டு ஜூன்12 ஆம் தேதி அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹ தேர்தலில் வெற்றிபெற இந்திராகாந்தி பல்வேறு முறைகேடுகளில் ஈட்டுப்பட்டுள்ளார். அதனால் அவரது வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தார். மேலும், தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதால் அடுத்த 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் இந்திராகாந்தி போட்டியிட முடியாது என்றும் உத்தரவிட்டார். 

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை இந்த தீர்ப்பு ஏற்படுத்திய நிலையில், அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் இந்திராகாந்தி. ஆனால் 1975 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் ஆண்டு அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி, கிருஷ்ண ஐயர் இந்திராகாந்தி மனுவைத் தள்ளுபடி செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார். இதனால் இந்திராகாந்திக்கு நெருக்கடி அதிகரித்து, கட்டாயம் பதவி விலகி ஆக வேண்டிய சூழல் உருவானது.

இந்த சூழலில் 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி நள்ளிரவில் இந்தியாவில் அவசரநிலை சட்டத்தை அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அமல்படுத்தினார். இந்தியாவில் முதல்முறையாக எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. நாடுமுழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் நடவடிக்கைகளுக்கு உள்ளாகினர். எதிர்க்கட்சி தலைவர்கள் மீசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டு சித்ரவதைகள் செய்யப்பட்டனர். பத்திரிக்கைகள் தனிக்கை செய்யப்பட்டது. இதனால் மக்கள், அரசியல் கட்சியினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பலரும் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகள் கழித்து 1977-ம் ஆண்டு மார்ச் 21-ந் தேதி இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் திரும்பப் பெறப்பட்டது. பிற்காலங்கள் நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தியதற்காக மக்களிடம் இந்திராகாந்தி மன்னிப்பு கேட்டதாக  கூறப்படுகிறது. இன்றளவும் எமர்ஜென்சி கலத்தை இந்தியா நாட்டின் கருப்பு தினமாகப் பலராலும் விமர்சிக்கப்படுகிறது.

மத்தியில் ஆளும் பாஜக காங்கிரசுக்கு எதிராக எமர்ஜென்சி காலத்தையே முன்வைத்து மக்களிடம் பிரச்சாரம் செய்துவருகிறது. இந்த நிலையில்தான், ஜூன் 25 ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அவசர நிலையால் பாதிக்கப்பட்டோருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 ஆம் தேதி அஞ்சலி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.