ADVERTISEMENT

இராணுவத்தின் கொடூரத் தாக்குதல்; குழந்தைகள் உட்பட 138 பேர் பலி! - சர்வதேச சமூகத்திற்கு ஐ.நா அழைப்பு!

07:08 PM Mar 16, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

மியான்மர் நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு, ஆங் சான் சூகி உள்ளிட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனநாயக ஆட்சியை வலியுறுத்தியும், கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்குமாறும் மியான்மரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

போராட்டங்களை ஒடுக்க, 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் சட்டத்தைக் கொண்டுவந்துள்ள மியான்மர், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திவருகிறது. போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களைக் கலைக்க கண்ணீர்ப் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகள் மட்டுமின்றி துப்பாக்கிச் சூடும் நடத்தி வருகிறது.

இராணுவத்திற்கு எதிராகப் போராடிவரும் மக்கள், சீனாவிற்குச் சொந்தமான நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள், பாதுகாப்பு கிடங்குகள், உணவகம் என சீனாவிற்குச் சொந்தமான 10 கட்டமைப்புகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. மக்கள் ஆட்சியைத் தடுத்து, தங்கள் ஆட்சியை நடத்தி வரும் இராணுவத்திற்கு, சீனாவின் ஆதரவு இருப்பதாக மியான்மர் மக்கள் கருதுவதே சீனத் தொழிற்சாலைகள் மீதான தாக்குதலுக்கு காரணம் எனச் சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் சபை, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் இதுவரை பெண்கள் குழந்தைகள் உள்பட 138 பேர் மியான்மர் இராணுவம் நடத்திய தாக்குதலில் பலியாகி உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இராணுவத்தின் கொடூரத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, மியான்மர் மக்களுக்கு ஆதரவாக திரளுமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT