ADVERTISEMENT

‘ஐந்து நாட்களுக்குள் வெளியேற வேண்டும்’ ; கனடாவிற்கு இந்தியா பதிலடி

11:49 AM Sep 19, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். அதில் கனடா நாட்டில் உள்ள இந்து கோவில்கள் மீது அதிக தாக்குதல் நடத்தப்பட்டதற்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்பட்டது. மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தினர்.

கனடாவில் உள்ள காலிஸ்தான் புலி படைப்பிரிவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் மற்றும் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதில் தாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக கனடா அரசு தெரிவிக்கப்பட்ட போதிலும் அங்கு காலிஸ்தான் பயங்கரவாதிகள் செயல்கள் அதிகரித்து கொண்டு தான் இருந்தது.

இந்நிலையில், காலிஸ்தான் தலைவரும், பயங்கரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அவர், கனடாவில் குடிமகனாக இருந்துள்ளார். மேலும், அவர் சுர்ரே நகர குரு நானக் சீக்கிய குருத்வாராவில் தலைவராகவும் இருந்துள்ளார். இவருடைய படுகொலைக்கு இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு உள்ளதாக காலிஸ்தான் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “இந்திய அரசாங்க ஏஜெண்டுகளுக்கும் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் படுகொலைக்கும் தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளன. கனடாவில் குடிமகன் ஒருவர் படுகொலைக்கு அந்நியர் ஒருவரின் அல்லது வெளிநாட்டு அரசின் தொடர்பு இருப்பது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால், சில இந்தோ-கனடியர்கள் கோபத்திலும் அச்சத்திலும் உள்ளனர். இந்த விவகாரத்தில், உண்மை விவரங்கள் தெரிய கனடாவுக்கு இந்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று கூறினார்.

அதை தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கனடா நாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலானி ஜூலி, “ தங்கள் நாட்டின் குடியுரிமை பெற்ற ஹர்தீப் சிங் நிஜாரின் கொலைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரியை நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளோம். அவர் இந்தியாவின் வெளிநாடு புலனாய்வு அமைப்பின் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பிரிவின் (RAW) தலைவராக செயல்பட்டவர்” என்று கூறினார்.

இதனிடையே, ஹர்தீப் சிங் நிஜாரின் கொலைக்கு இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கனடா அளித்துள்ள புகாருக்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இது அடிப்படை ஆதாரமற்ற அபத்தமான குற்றச்சாட்டு என இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. கனடாவில் இந்தியாவுக்கு எதிரான தேசத்துரோக செயல்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. அதை தொடர்ந்து, இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரியை கனடா அரசு வெளியேற்றியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவிற்கான கனடா நாட்டு தூதரை நேரில் அழைத்து, இந்தியாவை விட்டு ஐந்து நாள்களுக்குள் வெளியேறுமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT