ADVERTISEMENT

இஸ்ரேல், பாலஸ்தீன் பிரச்சனை; யாருக்கு ஆதரவென அறிவித்த இந்தியா... போப்பிடம் ஆதரவு கேட்கும் துருக்கி!

07:02 PM May 17, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நடைபெற்றுவருகிறது. கிழக்கு ஜெருசலேம் பகுதி யாருக்குச் சொந்தம் என்பதே இரு தரப்பு மோதலின் மையமாக இருந்துவருகிறது. இந்தநிலையில், ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில், யூதர்கள் உரிமை கொண்டாடும் நிலத்தில் வசித்துவரும் பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்ற இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுத்துவந்தது. இதன்தொடர்ச்சியாக, ஜெருசலேமில் உள்ள அல் அச்சா மசூதி அமைந்துள்ள பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் போலீசாருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது.

இதையடுத்து, பாலஸ்தீனத்தின் காசா முனையைத் தன்னாட்சி உரிமை பெற்று ஆட்சி செய்துவரும் ஹமாஸ் போராளிகள் அமைப்பு, இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பு மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால் காசாவில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நேற்று மட்டும் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 43 பேர் வரை உயிரிழந்ததாகவும், அதோடு சேர்த்து இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 58 குழந்தைகள், 34 பெண்கள் உட்பட 197 பேர் காசா நகரில் உயிரிழந்துள்ளதாகப் பாலஸ்தீனம் அறிவித்துள்ளது. மேலும், இதுவரை மொத்தமாக இஸ்ரேலின் வான் தாக்குதலில் 1235 வரை இறந்திருப்பதாகப் பாலஸ்தீனம் கூறியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி உயிரிழந்துள்ளார். இதை இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் தாக்குதலுக்கு ஹமாஸ் இயக்கமும் ஏவுகணை தாக்குதல் நடத்தி பதிலடி அளித்து வருகிறது. உலகின் பல்வேறு நாடுகள் சண்டையை நிறுத்தும்படி வலியுறுத்தியும் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்தியா பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், இஸ்ரேல்- பாலஸ்தீன் குறித்த விவாதத்தின்போது பேசிய இந்தியாவின் உறுப்பினர் திருமூர்த்தி, "இஸ்ரேலில் உள்ள மக்களைக் குறிவைத்து கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட காசாவில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். அதற்குப் பதிலடியாக நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் துன்பத்தையும், பெண்கள் குழந்தைகள் உட்படப் பல உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.பதற்றத்தை அதிகரிக்கும் செயலில் ஈடுபடாமல் இருக்குமாறும், கிழக்கு ஜெருசலேம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது நிலவும் நிலையை மாற்ற முயல்வதைத் தவிர்க்கவும் இருதரப்பையும் கேட்டுக்கொள்கிறோம்" எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர், "இஸ்ரேல்- பாலஸ்தீன் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட, எல்லா முயற்சிகளும் எடுக்கப்படவேண்டும் என இந்தியா நம்புகிறது. முடிவாக பாலஸ்தீனத்திற்கான இந்தியாவின் வலுவான ஆதரவை உறுதிப்படுத்துவதுடன், இருநாடுகளுக்குமிடையே தீர்வு எட்டப்படுவதற்கு இந்தியாவின் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதி செய்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

துருக்கி நாடும் இஸ்ரேல் மீது பொருளாதார தடைவிதிக்க ஆதரவு தருமாறு போப் ஆண்டவரைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து அந்தநாடு, "சர்வதேச சமூகம் இஸ்ரேலைத் தண்டிக்காதவரை பாலஸ்தீனியர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவார்கள்" எனக் கூறியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT