India wants to create an independent Palestinian state

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 7 நாட்களாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.

Advertisment

காசாவிற்கு கொடுக்கும் பதிலடி ஹமாஸ் அமைப்பிற்கு மட்டுமல்ல, நமது எதிரிகள் கூட மறக்க முடியாத நினைவாக இருக்க வேண்டும் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவிற்கு நீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் இஸ்ரேலின் தாக்குதலால் காசா நகரமெங்கும் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருக்கிறது; கட்டடங்கள் நிலைகுலைந்துள்ளன.

Advertisment

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் காசாவை சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ் படையினர் உயிரிழப்பதை விட அப்பாவி பாலஸ்தீன மக்கள் அதிகளவில் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஈரான் உள்ளிட்ட நாடுகள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்தி சுதந்திரமான பாலஸ்தீன தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற பழைய நிலைப்பாட்டை இந்தியா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்‌ஷி, “இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் பயங்கரவாத தாக்குதல். சர்வதேச மனித உரிமை சட்டங்களை பின்பற்ற பொது பொறுப்பு இருக்கும் அதே சமயத்தில், பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் எதிர்க்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்த் விவகாரத்தில், இந்தியாவின் குறிக்கோள் நாடு திரும்ப நினைப்பவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதுதான்” என்றார்.

பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கேள்விக்கு, “தெளிவான எல்லைகளுடன், இறையாண்மை உள்ள சுதந்திர பாலஸ்தீனத்தை உருவாக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு என்று பதிலளித்தார்.