ADVERTISEMENT

பாகிஸ்தான் தேர்தல்: தவறை ஒப்புக்கொண்டு ராஜினாமா செய்த அதிகாரியால் பரபரப்பு

06:41 PM Feb 17, 2024 | mathi23

பாகிஸ்தானில் கடந்த 8 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு இடையே நாடு தவித்து வரும் நிலையில், அந்நாடு பொதுத் தேர்தலை சந்தித்தது. இந்தத் தேர்தலில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீக் லீக்-என் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.

ADVERTISEMENT

இதனிடையே, பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கானுக்கு, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. மேலும், அவரது மனைவி புஷ்ரா பிபிக்கும் இந்த வழக்குகளில் தொடர்பு இருப்பதாகக் கூறி 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதித்திருந்தது. இதனால், அக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சுயேட்சையாகப் போட்டியிட்டனர்.

ADVERTISEMENT

இந்தத் தேர்தலில், மொத்தமுள்ள 265 நாடாளுமன்றத் தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 133 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம். அதன்படி, காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் தெக்ரீக் - இ - இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 101 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றனர். அதேபோன்று, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்களைக் கைப்பற்றியது. பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

தேர்தல் நடந்து முடிந்த பிறகு, புதிய அரசை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியும், பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. அந்த வகையில், நவாஸ் ஷெரீபின் சகோதரரும் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானின் தெக்ரீக் - இ - இன்சாப் கட்சி எதிர்க்கட்சியாக இருக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, நாடாளுமன்றத் தேர்தலில் மோசடி நடந்ததாக இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த சூழ்நிலையில், தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகத் தேர்தல் அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டு ராஜினாமா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராவல்பிண்டியின் முன்னாள் கமிஷ்னரான லியாகத் அலி சத்தா, இன்று (17-02-24) ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றவர்களாக மாற்றப்பட்டனர். நடந்த அனைத்து தவறுகளுக்கும் நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன்.

மேலும், இந்த செயலில் தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தலைமை நீதிபதி முழுவதுமாக ஈடுபட்டார்கள். நாட்டின் முதுகில் குத்துவது என்னை தூங்க விடாது. நீதிக்கு எதிரான இந்த செயலுக்காக நான் தண்டிக்கப்பட வேண்டும். இந்த அரசியல் தலைவர்களுக்காக எந்த தவறான செயல்களிலும் ஈடுபடாதீர்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்” என்று கூறி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிகாரியின் இந்த தகவலால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT