ADVERTISEMENT

"நெருப்புடன் விளையாடுபவர்கள் எரிந்து போவார்கள்" - பைடனுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்த ஷி ஜின்பிங்!

04:40 PM Nov 16, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமெரிக்கா- சீனா இடையிலான உறவு தொடர்ந்து மோசமாகி கொண்டே இருந்த நிலையில், அமெரிக்க-சீன நாடுகள் காணொளி வாயிலாக ஒரு உச்சி மாநாட்டை நடத்தியுள்ளனர். இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் நீண்ட நேரம் உரையாடியுள்ளனர்.

எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக நேரம் நீடித்த இந்த உரையாடலில் சின்ஜியாங், திபெத் மற்றும் ஹாங்காங் விவகாரங்கள், வர்த்தக பொருளாதார நடவடிக்கைகள் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த உரையாடலின் போது "அமெரிக்காவில் உள்ள சிலர் சீனாவைக் கட்டுப்படுத்த தைவானைப் பயன்படுத்துகின்றனர். இந்த போக்கு மிகவும் ஆபத்தானது. இது நெருப்புடன் விளையாடுவது போன்றது. நெருப்புடன் விளையாடுபவர்கள் எரிக்கப்படுவார்கள்" என சீன அதிபர் கூறியதாக அந்தநாட்டு அரசு ஊடகம் கூறியுள்ளது.

இதற்கிடையே இந்த உரையாடல் தொடர்பாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சின்ஜியாங், திபெத் மற்றும் ஹாங்காங்கில் சீனாவின் செயல்பாடுகள் மற்றும் மனித உரிமைகள் குறித்து அதிபர் ஜோ பைடன் கவலைகளை எழுப்பினார். சீனாவின் நியாயமற்ற வர்த்தகம் மற்றும் பொருளாதார நடைமுறைகளில் இருந்து அமெரிக்கத் தொழிலாளர்கள் மற்றும் தொழில்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர் தெளிவாக இருந்தார். அவர் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதித்தார்" என கூறப்பட்டிருந்தது.

மேலும் தைவானில் நிலவும் நிலையை ஒரு தலைப்பட்சமாக மாற்றும் முயற்சிகளையும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்தார் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த உரையாடலின் தொடக்கத்தில் பேசிய ஜோ பைடன், "எங்கள் நாடுகளுக்கு இடையேயான போட்டியானது, திட்டமிடப்பட்டோ அல்லது திட்டமிடப்படாமலோ மோதலாக மாறாமல் இருப்பதை உறுதிசெய்வது சீனா மற்றும் அமெரிக்காவின் தலைவர்களாகிய நமது பொறுப்பு என்று எனக்குத் தோன்றுகிறது" எனத் தெரிவித்தார்.

அப்போது பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங், "நாம் ஒன்றாக பல சவால்களை சந்திக்கிறோம். உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்கள் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் என்ற வகையில், சீனாவும் அமெரிக்காவும் தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்" எனக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT