ADVERTISEMENT

இந்திய விளையாட்டு வீரர்களுக்கு விசா மறுத்த சீனா

05:24 PM Sep 22, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

19வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நடக்கவுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு அடுத்தபடியாக ஆசியக் கண்டத்தில் யார் சாம்பியன் என்பதைத் தீர்மானிப்பதற்காக நடத்தப்படக்கூடிய ஒரு முக்கியமான போட்டி இந்த ஆசிய விளையாட்டுப் போட்டி. இந்த போட்டியானது நாளை (23-09-23) தொடங்கி, வரும் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. ஆசிய விளையாட்டு சம்மேளனம் நடத்தும் இந்த போட்டியில் ஆசியக் கண்டத்தில் உள்ள இந்தியா, இலங்கை, சீனா, மலேசியா உள்ளிட்ட 45 நாடுகள் கலந்து கொள்ளவிருக்கிறது.

இந்த போட்டியில் சாம்பியன்ஷிப் வெல்லப்போகும் நபர் நேரடியாக ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்புகளைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், நாளை தொடங்கவிருக்கும் இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து மட்டும் 600க்கு மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். மேலும், இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில், இந்தியா சார்பில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கலந்துகொள்வதற்குத் தயாராக இருந்தார்.

இந்த நிலையில், இந்த போட்டியில் கலந்துகொள்ளவிருக்கும் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 வீரர்களுக்கு விசா வழங்காமல் சீன அரசு அனுமதி மறுத்துள்ளது. இது தற்போது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், சீனாவிற்குச் செல்லவிருக்கும் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். இதையடுத்து, சீனாவின் இந்த செயல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது கண்டத்தைத் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றைப் பதிவு செய்திருந்தார். அவர் பதிவிட்ட அந்த அறிக்கையில், “சீன அதிகாரிகள் சிலருக்கு எதிராகப் பாரபட்சம் காட்டியுள்ளனர் என்பதை இந்தியா அரசு அறிந்துள்ளது. குடியிருப்பு மற்றும் இனத்தின் அடிப்படையில் தனது குடிமக்களை வேறுபடுத்தி நடத்தப்படுவதற்கு எதிராக இந்தியா உள்ளது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும். சீனாவின் பாரபட்ச நடவடிக்கைகளால் ஆசிய விளையாட்டுகளின் தன்மையையும், விதிமுறைகளையும் சீனா மீறியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

இதனிடையே சீனா வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறியதாவது, “சீனா அரசாங்கம், ‘அருணாச்சலப் பிரதேசம்’ என்று அழைக்கப்படுவதை அங்கீகரிக்கவில்லை. ஜங்னான் (அருணாச்சலப் பிரதேசம்) சீனாவின் ஒரு பகுதி ஆகும்” என்று கூறினார். சில தினங்களுக்கு முன்பு அருணாச்சலப் பிரதேசத்தை தங்கள் பகுதியாக அறிவித்து உரிமை கொண்டாடி சீனா புதிய வரைபடத்தை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அந்த மாநில விளையாட்டு வீரர்களைச் சீனா புறக்கணித்திருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT