ADVERTISEMENT

அமெரிக்க மண்ணில் புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா - ஒன்பது நாள் தொடர்விழா

12:17 PM Apr 21, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கட்டுரை - டெய்சி ஜெயப்ரகாஷ், கலிஃபோர்னியா

“தமிழர் என்று சொல்வோம் - பகைவர்
தமை நடுங்க வைப்போம்,
இமய வெற்பின் முடியிற் - கொடியை
ஏற வைத்த நாங்கள்.
தமிழர் என்று சொல்வோம் – பகைவர்
தமை நடுங்க வைப்போம்
நமத டாஇந் நாடு - என்றும்
நாமிந் நாட்டின் வேந்தர்,
சமம்இந் நாட்டு மக்கள் - என்றே
தாக்கடா வெற்றி முரசை”


என்று போர் முரசுக் கொட்டி, எட்டுத்திக்கும் முழக்கம் செய்த புரட்சிக்கவி பாரதிதாசனின் பிறந்தநாளை ஒன்பது நாள் விழாவாக கொண்டாடுகின்றனர் அமெரிக்காவில். அங்குள்ள புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் இதனை ஏற்பாடு செய்து வருகின்றது. ஏப்ரல் மாதம் பாரதிதாசனின் நினைவு நாளாம் 21-ஆம் நாள் முதல், பிறந்தநாளாம் 29-ஆம் நாள் வரை தொடர் நிகழ்ச்சிகளாக, ஒன்பது நாட்களுக்கு புரட்சிக் கவிஞருக்குப் பெருவிழா என்ற பெயரில் கவியரங்கம், கருத்தருங்கம், தமிழிசையரங்கம், இலக்கிய அரங்கம், பட்டிமன்றம், போட்டிகள் என புரட்சிக் கவிஞரின் புகழ்போற்றும் பல்வேறு நிகழ்சிகளை நடத்திக் கொண்டாட உள்ளனர். உலகம் முழுமையும் உள்ள தமிழ் பற்றுள்ளார்களும், பாரதிதாசனின் அடியார்ககளும் கலந்துகொண்டு மகிழ்வும், பயனும் பெறும் வகையில் இந்த நிகழ்வு இணையவழியில்(சூம்) நடைபெறவுள்ளது.

முதல்நாள் அன்று நடைபெறும் புரட்சிக்கவிஞர் நினைவு நாள் நிகழ்ச்சியில் 'பாரதிதாசன் நினைவலைகள்' எனும் தலைப்பில், பாவேந்தரின் பேரப் பிள்ளைகள் பாவலர் மணிமேகலை குப்புசாமி, கவிஞர்.புதுவை கோ. செல்வம் மற்றும் முனைவர்.கோ. பாரதி ஆகியோர் அவருடனான நினைவலைகளை நம்முடன் பகிர இருக்கிறார்கள். இந்நிகழ்வினை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றத்தின் பிரசாத் பாண்டியன் நெறியாள்கை செய்ய, துரைக்கண்ணன் வரவேற்புரை வழங்குகிறார். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் செயலர் முனைவர்.பாலா சுவாமிநாதன் வாழ்த்துரை வழங்க உள்ளார்.

இரண்டாம் நாள் ‘பரம்பரை கண்ட பாரதிதாசன்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. கருத்துக்களஞ்சியமாம் பாரதிதாசனை தன் பரம்பரையாக கொண்டவர்களை பற்றிய நிகழ்ச்சி இது. கருத்தரங்கத்தை மதுரையிலுள்ள யாதவர் கல்லூரியின் மேனாள் தமிழ் உயராய்வு மையத் தலைவர் பேராசிரியர்.முனைவர் இ.கி.இராமசாமி. தலைமை தாங்குகிறார். பாரதிதாசன் பரம்பரையில் கவிஞர்.சுரதா பற்றி தமிழியக்கம் அமைப்பின் வட தமிழக ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் கு.வணங்காமுடியும், கவிஞர்.குலோத்துங்கன் பற்றி அமெரிக்காவின் தாம்பா நகரைச் சேர்ந்த பேராசிரியர் மேகலா ராமமூர்த்தியும், கவிஞர்.வாணிதாசன் குறித்து மிச்சிகனிலிருந்து ராம்குமாரும், கவிஞர்.முடியரசன் குறித்து மத்திய இலினாய் தமிழ்சங்கத்தைச் சேர்ந்த செங்குட்டுவனும் உரையாற்றவுள்ளனர்.

மூன்றாம் நாள் அன்று பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. குழந்தைகள் பற்றி பாரதிதாசன் என்ன கூறியுள்ளார் என்று குழந்தைகள் அறிந்து கொள்ளும் வகையில் தலைப்பானது ‘பாரதிதாசன் பாடல்களில் குழந்தைகள்’ என்று கொடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து பல சிறுவர் சிறுமியர் இந்நிகழ்ச்சிக்கு தம்மை பதிவு செய்துள்ளனர். பதிவைத் தொடங்கிய மூன்று நாட்களிலேயே பதிவை மூடுமளவிற்கு நிறைய குழந்தைகள் பதிந்துள்ளது குறிப்பிடத்தக்க செய்தி. இந்நிகழ்வில் உலகெங்குமிருந்து போட்டியாளர்கள் பங்கு பெறுவதால் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசாக 100, 75, 50 அமெரிக்க வெள்ளிக்கு இணையான மதிப்பிற்கு வெற்றி பெருவோர் வசிக்கும் நாட்டின் பணம் வழங்கப்படும்.

நான்காம் நாள் ‘பாரதிதாசனின் சமூக சிந்தனையும், அரசியல் சிந்தனையும்’ என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற உள்ளது. கவியரங்கிற்கு குளித்தலையிலுள்ள தமிழ்ப்பேரவையின் தலைவர் முனைவர் கடவூர் மணிமாறன் தலைமை தாங்கவுள்ளார். அதில் தமிழியக்கம் குறித்து கலிஃபோர்னியாவிலிருந்து கவிஞர் டெய்சி ஜெயப்ரகாஷ், கல்வி குறித்து டெக்சாசிலிருந்து கவிஞர் ப்ரீத்தி வசந்த், பெண்ணியம் குறித்து கோவையிலிருந்து கவிஞர்.தேஜஸ் சுப்பு, உழைப்பாளர் குறித்து சென்னையிலிருந்து கவிஞர் செ.புனிதஜோதி, பகுத்தறிவு குறித்து ல்ண்டனிலிருந்து கவிஞர்.வளர்மதி பாரத், பண்பாடு குறித்து மலேசியாவிலிருந்து தோழர்.இளமாறன் நாகலிங்கம் ஆகியோர் கவிபாட, முனைவர் இரா. பிரபாகரன், மேனாள் தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வாழ்த்துரை வழங்க, கவிஞர்.இப்ராகிம் பாருக் நெறியாள்கை செய்கிறார்.

ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா? சமூக சீர்திருத்தமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நிகழ உள்ளது. திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி அவர்கள் நடுவராக பட்டிமன்றத்தை நடத்தவுள்ளார். திருவாரூரரிலுள்ள திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியின் கௌரவ விரிவுரையாளர் முனைவர் அகிலா அவர்களும், அரிசோனாவிலிருந்து பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகள் சித்திரச்செந்தாழை அவர்களும் மொழி உணர்வு என்ற தலைப்பில் வாதாட, தமிழ் நாட்டிலிருந்து சமூகச் செயற்பாட்டாளர் மணிமேகலை அவர்களும், டெக்சாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் செயலர் சுமிதா கேசவன் அவர்களும் சமூக சீர்திருத்தம் என்ற தலைப்பிலும் வாதடவுள்ளனர். இந்நிகழ்ச்சியை பிரசாத் பாண்டியன் அவர்கள் நெறியாள்கை செய்ய வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முதல் பெண் தலைவராய் இருந்த செந்தாமரை பிரபாகர் அவர்கள் வாழ்த்துரை வழங்கவுள்ளார்கள்.

ஆறாம் நாள் நிகழ்ச்சியாக நடைபெறும் இலக்கியரங்கத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறைத் தலைவர் முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன் அவர்கள் தமிழச்சியின் கத்தி என்ற பாவேந்தரின் படைப்பு குறித்து இலக்கியவிருந்து வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மேனாள் தலைவர் முனைவர் முத்துவேல் செல்லையா அவர்கள் வாழ்த்துரை வழங்க, டெக்சாசிலிருந்து ப்ரீத்தி வசந்த் நெறியாள்கை செய்ய உள்ளார்.

ஏழாம் நாள் நிகழ்ச்சியாக தமிழிசையரங்கம் நடைபெற உள்ளது. “வட மொழிக்கிங்கே என்ன ஆக்கம்? இலங்கும் இசைப் பாட்டுக்கள் பிறமொழியில் ஏற்படுத்த இசைய லாமோ? நலங்கண்டீர் தமிழ்மொழியால், நற்றமிழை ஈடழித்தல் நன்றோ?” என்று முழங்கிய பாரதிதாசனின் பாடல்கள் மெட்டிசைக்கப்பட்டு பல்வேறு அரங்குகளில் தமிழிசையில் ஒலிக்கப்பட வேண்டும் என்பதின் முயற்சியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலைமாமணி தமிழிசை வேந்தர் முனைவர் புஷ்பவனம் குப்புசாமி தலைமையேற்கிறார். தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் மாணவர்க்களம் இதழாசிரியர் மா.பிறைநுதல், அமெரிக்காவிலிருந்து இயங்கும் உலகத் தமிழிசை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் பாபு விநாயகம், அமெரிக்காவின் மேரிலாந்து நகரிலிருந்து இயங்கும் சங்கீத சாரதா இசைப்பள்ளியின் முதல்வர் லாவண்யா சுப்ரமணியன், மேரிலாந்தைச் சேர்ந்த மெல்லிசைப் பாடகி இராஜாம்பாள் ஜோதிமணி, மலேசியாவிலிருந்து பாடகர் விண்ணரசு அறிவழகன் மற்றும் வயலின் கலைஞர் அங்கயற்கனி அறிவழகன் என ஆறு பாடகர்கள் புரட்சிக்கவிஞரின் பாடல்களை தமிழிசையில் பாடவுள்ளனர். இந்நிகழ்ச்சியை பாடகர் மற்றும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான இரா. குமணன் நெறியாள்கை செய்ய, அமெரிக்காவில் தமிழிசைக்காக பல அரிய முயற்சிகளை முன்னெடுக்கும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மேனாள் தலைவர் நாஞ்சில் பீற்றர் அவர்கள் வாழ்த்துரை வழங்கவுள்ளார்.

எட்டாம் நாள் நிகழ்ச்சியாக பாரதிதாசன் நாடகத்தின் கூறுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. நாடகங்கள் நடத்திட ஆர்வம் இருப்பினும் இணைய வழியில் நடத்திட பல்வேறு சிரமங்கள் இருப்பதால் பாரதிதாசன் நாடகத்தின் பல கூறுகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் கருத்தரங்கம் நடத்தப்படவுள்ளது. கருத்தரங்கத்தினை தமிழ் மொழியை ஆழப் படித்தவரும், மும்பையிலிருந்து இயங்கும் தமிழ் இலெமுரியா இதழின் முதன்மை ஆசிரியருமான் சு.குமணராசன் அவர்கள் தலைமை தாங்க, நாடகத்தில் மொழிப் பயன்பாடு குறித்து ஈழத்திலிருந்து பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை இறுதியாண்டு மாணவர் சாரங்கன் விக்கினேசுவரநாதனும், ஆளுமைத் திறன் குறித்து தமிழ்நாடு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர்.வா. நேரு அவர்களும், கதையாக்கம் குறித்து அமெரிக்காவிலிருந்து இயங்கும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தினைச் சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி அவர்களும், பண்பாடு குறித்து புதுச்சேரியிலிருந்து இயங்கும் தேசிய மரபு அறக்கட்டளையின் தலைவர் அறிவன் அருளியார் அவர்களும் ஆய்வுரை வழங்கவுள்ளனர். இதனை பெங்களூருவைச் சேர்ந்த கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்துமணி நன்னன் அவர்கள் நெறியாள்கை செய்ய, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை அமைக்க அரும் பாடுபட்ட தமிழ் இருக்கை குழுமத்தின் தலைவர் மருத்துவர் விஜய் ஜானகிராமன் வாழ்த்துரை வழங்கவுள்ளார்.


ஏப்ரல் 29 புரட்சிக்கவிஞரின் பிறந்தநாள் அன்று நடைபெறும் நிறைவு நாள் நிகழ்ச்சியில் நெருப்பில் பூத்த மலர் என்ற தலைப்பில் பத்மஶ்ரீ மற்றும் இருமுறை சாகித்ய அகாதமி விருதுபெற்ற பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சிறப்புரை வழங்குகிறார். அந்நிகழ்வை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான டெய்சி ஜெயப்ரகாஷ் நெறியாள்கை செய்திட வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தலைவர் கால்டுவெல் வேள்நம்பி அவர்கள் வாழ்த்துரை வழங்கவுள்ளார்.


உலகத் தமிழர்கள் அனைவரும், ஒன்றிணைந்த தமிழ் உணர்வுடனே, அனைத்து நிகழ்வுகளையும் பார்த்தும் கேட்டும் மகிழ இணையவழி சூம்(Zoom) வழியே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சூம் எண்ணிற்கு (Zoom Meeting ID) இணைக்கப்பட்டத் துண்டறிக்கையைப் பார்க்கவும். இணைய வழியே திரண்டு உங்கள் ஆதரவைத் தந்து “எங்கள் வாழ்வும், எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT