Skip to main content

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் தொடக்கம்... அமெரிக்காவில் பாரதிதாசன் பெயரில் முதல் அமைப்பு...

உலக மொழிகளுள் தொன்மையான மொழிகளில், தமிழ் மொழியும் ஒன்று என்றால் அது மிகையாகாது.  அம்மொழியை தன் உயிருக்கு நிகராக போற்றி, அதன் வழியே பல அரிய கருத்துகளைக்கூறி தமிழர் வாழ்வில் சுடரொளி ஏற்றியவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்!
 

அமெரிக்காவின் முதல் மாநிலமாம் டெலவரில்,  புரட்சிக் கவிஞரின் 129வது பிறந்தநாள் விழாவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் 20 ஏப்ரல் 2019 (சித்திரை 7, தி.ஆ. 2050) அன்று இனிதே தொடங்கப்பெற்றது!
 

மன்றத்தின் முதற்கண் தமிழ்த்தாயை வாழ்த்தி நிகழ்ச்சி தொடங்கியது.  விழாவை தொகுத்து வழங்கினார் விழாக்குழுவில் ஒருவரான திருமிகு. இராஜ்குமார் களியபெருமாள். விழாவிற்கு வந்திருந்த சான்றோர்கள், குழுமியிருந்த மக்கள் மற்றும் சிறார்களை திருமிகு. பிரிசில்லா ரேபன் தன் இனிய சொற்களால் வரவேற்றார்.
 

நற்றொடக்கத்தின் அடையாளமாக வடஅமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் முன்னாள் தலைவர் முனைவர். முத்துவேல் செல்லையா, பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் வாசு அரங்கநாதன் மற்றும் நியூயார்க் தமிழ்க்கல்விக் கழகத்தின் தலைவர் முனைவர். பாலா சுவாமிநாதன் அனைவரும் இணைந்து புரட்சிக்கவிஞர் படத்தை திறந்து வைத்து சிறப்பித்தனர். மன்றம் தொடங்கியதன் நோக்கம், அதன் பயன்களை பற்றி விவரித்து விளக்கினார் விழாக்குழுவில் ஒருவரான திருமிகு. துரைக்கண்ணன் சுந்தரக்கண்ணன்.

 

barathidasan


விழாவின் தொடக்கமாக சிறார்களுக்கான ஓவியப்போட்டி இருப்பிரிவுகளாக நடைப்பெற்றது.  7 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும், 8 வயது முதல் 11 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும் கலந்து கொண்டு பாரதிதாசனின் படத்தை வரைந்து வந்திருந்த மக்களை வியப்பிற்குள்ளாக்கினர்.  முதற்பிரிவில் செல்வன். துருவேஷ் முதல் பரிசையும், செல்வன். ஆதித் இராஜ்குமார் இரண்டாம் பரிசையும் , ஜெசிகா ரேபன் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.  8 வயது முதல் 12 வயதிற்கு உட்பட்ட 2வது பிரிவில் செல்வன். கெளதம்ராஜ் புவனேஷ் முதல் பரிசையும், செல்வன். அறிவாற்றல் இராஜ்குமார் இரண்டாம் பரிசையும், செல்வி. கனிஅன்பு துரைக்கண்ணன் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.


"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்" என்ற கவிஞரின் பாடலுக்கு சிறுவர்கள் நடனமாடி மக்களின் பாராட்டை பெற்றனர். இந்நடனத்துக்கு  சலங்கை நடனப்பள்ளியின் ஆசிரியர் திருமிகு. இந்துமதி கோபாலக்கிருஷ்ணன் வடிவமைத்து,  பயிற்சி அளித்து மேடையேற்றினார்.


பின்னர் பெரியவர்களுக்காக நடந்த பேச்சுப்போட்டியில் பலர் கலந்து கொண்டு பாரதிதாசன் ஒரு புரட்சிக்கவி, பாவேந்தரும் பைந்தமிழும், இந்திய விடுதலையும் பாரதிதாசனும் என்ற தலைப்புகளின் கீழ் பேசினார்கள்.  விழாவில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டிக்கு முனைவர். முத்துவேல் செல்லையா,  முனைவர். பாலா சுவாமிநாதன் மற்றும் முனைவர். திரு. வாசு அரங்கநாதன் ஆகிய மூவரும் நடுவர்களாக இருந்து விழாவை சிறப்பித்து கொடுத்தனர்.  இதில் முதல் பரிசு திருமிகு. மெர்லின் தீபன், இரண்டாம் பரிசு திருமிகு. பிரிசில்லா ரேபன், மூன்றாம் பரிசு திருமிகு. விஜயலக்ஷ்மி மற்றும் திருமிகு. நரசிம்மன் ஆகியோருக்குக் கிடைத்தது.

barathidasanதிருமிகு. விஜய் அவர்களின் ஒருங்கிணைப்பில் வாசிங்டன் மரபிசைக்குழு பம்பை, தவில் போன்ற தமிழ் மரபுக்கருவிகளைக் கொண்டு இசை விருந்து அளித்தனர். தொடர்ந்து டெலவர் கலைக் குழுவும், அடவு கலைக் குழுவும் இணைந்து  முழங்கிய பறையிசை நிகழ்ச்சி நடந்தது. இதனை திருமிகு. ஹென்றி மற்றும் திருமிகு ரமா அவர்கள் ஒருங்கினைத்து பயிற்சி அளித்தனர்.


பின்னர் கவிஞர் வாழ்வியல் தொடர்பாக  மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு. பிரசாத் பாண்டியன் பதிலளித்துப் பேசினார்.


விழாவில் சிறப்பு விருந்தினரில் ஒருவரான பென்சிலவேனியா பல்கலைகழகம், தெற்காசியத்துறையின் தமிழ்ப் பேராசிரியர் திரு.வாசு அரங்கநாதன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.  தமிழியக்கம் என்ற தலைப்பில் திரு. பன்னீர்செல்வம் இராசமாணிக்கம், இயற்கை என்ற தலைப்பில் திரு. தீபக் மோகனகிருஷ்ணன், சமூகம் என்ற தலைப்பில் திரு. கிருஷ்ணன் பழனிச்சாமி, கல்வி என்ற தலைப்பில் திருமிகு. செந்தில்முருகன் வேலுச்சாமி மற்றும் பெண்ணியம் என்ற தலைப்பில் வழக்கறிஞர் ம.வீ.கனிமொழி ஆகியோர் சிறப்பாகப் பேசினார்கள்.


பாரதிதாசனின் சிந்தனைகளை பற்றி முனைவர். முத்துவேல் செல்லையா சிறப்புரையாற்றினார்.  அதன்பின் பாரதிதாசனின் தமிழ்ச்சுவையை பற்றி முனைவர். பாலா சுவாமிநாதன் சிறப்புரையாற்றினார்.


பின்னர் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் டெலவரில் உள்ள "ரஜினி தென்னிந்திய உணவகம்" மதிய உணவை வழங்கி சிறப்பித்தது. விழாக்குழுவில் ஒருவரான  திருமிகு.பிரசாத் பாண்டியன். நன்றியுரை வழங்கிய பின் விழா இனிதே நிறைவடைந்தது.