ADVERTISEMENT

சூடான் உள்நாட்டுப் போர்; அமெரிக்காவின் கோரிக்கை ஏற்பு

03:40 PM Apr 19, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சூடானை கடந்த 2021 ஆம் ஆண்டில் ராணுவம் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் துணை ராணுவப்படைகளை ராணுவத்தில் இணைப்பது தொடர்பாக ராணுவத் தளபதிக்கும் துணை ராணுவ கமாண்டருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதனால் அப்போதிலிருந்தே அந்நாட்டு ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது உள்நாட்டுப் போர் நடந்து வந்த நிலையில் மீண்டும் கடந்த சில தினங்களாக சூடான் தலைநகரில் ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் இடையே தீவிரமாகப் போர் நடந்து வந்தது. இதில் சூடான் தலைநகர் கார்டோமில் உள்ள விமான நிலையம் அதிபர் மாளிகை ஆகியவற்றை கைப்பற்றியதாக துணை ராணுவம் அறிவித்தது. இந்தப் போரில் பொதுமக்கள் சுமார் 185 பேர் கொல்லப்பட்டனர். இதில் இந்தியர் ஒருவரும் அடங்குவார். இறந்தவரின் பெயர் ஆல்பர்ட் அகஸ்டின் என்றும் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்திருப்பதாக இந்தியத் தூதரகம் உறுதி செய்தது. முன்னதாக இந்தியத் தூதரகம் சார்பில், சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், நிதானமாகச் செயல்பட்டு வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்றும் இந்தியத் தூதரகம் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் நடைபெறும் ஜி 7 மாநாட்டில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பேசுகையில், “சூடான் ராணுவத்துக்கு எதிராகப் போர் புரிந்து வரும் துணை ராணுவப் படை அமெரிக்கத் தூதரக வாகனத்தை தாக்கியுள்ளது. இருப்பினும் இந்த வாகனத்தில் பயணித்த அனைவரும் தற்போது நலமுடன் பாதுகாப்பாக உள்ளனர். தூதரக அதிகாரிகள் மீதான இந்த தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இரு தரப்பினரும் 24 மணி நேரம் போரை நிறுத்திவிட்டு அமைதிப் பேச்சுக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவின் இந்த வேண்டுகோளை ஏற்று ராணுவப் படைத் தளபதி அப்தெல் பத்தா புர்கான் மற்றும் துணை ராணுவ தளபதி டகாலோவும் 24 மணி நேரப் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த போர் நிறுத்தமானது நேற்று மாலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT