sudan current situation related tweets union minister jaishankar

சூடானை கடந்த 2021 ஆம் ஆண்டில் ராணுவம் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் துணை ராணுவப்படைகளை ராணுவத்தில் இணைப்பது தொடர்பாக ராணுவத் தளபதிக்கும் துணை ராணுவ கமாண்டருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

Advertisment

இதனால் அப்போதிலிருந்தே அந்நாட்டு ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது உள்நாட்டுப் போர் நடந்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்குமுன்னதாக மீண்டும் சூடான் தலைநகரில் ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் இடையே தீவிரமாகப்போர் நடைபெற்று வருகிறது . இதில் சூடான் தலைநகர் கார்டோமில் உள்ள விமான நிலையம் மற்றும் அதிபர் மாளிகை ஆகியவற்றை கைப்பற்றியதாக துணை ராணுவம் அறிவித்தது.

Advertisment

இந்தப்போரில் பொதுமக்கள் சுமார் 185 பேர் கொல்லப்பட்டனர். இதில் இந்தியர் ஒருவரும் அடங்குவார். இறந்தவரின் பெயர் ஆல்பர்ட் அகஸ்டின் என்றும் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்திருப்பதாக இந்தியத்தூதரகம் உறுதி செய்தது. முன்னதாக இந்தியத்தூதரகம் சார்பில், சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், நிதானமாகச் செயல்பட்டு வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்றும் இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டரில், "சூடானில் சிக்கியிருக்கும் சுமார் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை இந்தியாவிற்கு அழைத்து வர மத்திய அரசு ‘ஆபரேஷன் காவேரி’ என்ற பெயரில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஐஎன்எஸ் சுமேதா என்ற மீட்பு கப்பல் சூடான் துறைமுகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விமானப்படையின் சி 130 ஜே 2 என்ற ராணுவ விமானங்கள் சவுதியில் உள்ள ஜெட்டா நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முதற்கட்டமாக 500 இந்தியர்கள் மீட்கப்பட்டு சூடான் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர். சூடானில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. அனைவரும் பத்திரமாக இந்தியாவிற்கு அழைத்து வரப்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.