ADVERTISEMENT

சீனாவில் இனப்படுகொலை - அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிக்கை!

10:55 AM Mar 31, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய ஆசியாவை அடித்தளமாகக் கொண்ட உய்குர் இஸ்லாமியர்கள், சீனாவின் வடமேற்கு எல்லைப்பகுதியில், குறிப்பாக ஷின்ஜியாங் பகுதியில் அதிகளவில் வசித்து வருகின்றனர். பொதுவாகவே உய்குர் இஸ்லாமியர்கள் மீதான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அடக்குமுறைகள் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், கடந்த சில வருடங்களாக உய்குர் இஸ்லாமியர்களை அடைத்து வைக்க தடுப்பு முகாம்கள் கட்டுவது; அவர்களின் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த கட்டாயக் கருக்கலைப்பு, கருத்தடைக்கு உட்படுத்துவது; குடும்ப கட்டுப்பாட்டுக்கு ஒத்துழைக்காத பெண்கள், ஆண்களைத் தண்டனை முகாம்களில் அடைப்பது போன்றவற்றை சீனா செய்து வருகிறது.

சீனாவின் இந்த நடவடிக்கைகளுக்குப் பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல், சீனாவிற்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஜோ பைடன், சீன அதிபரோடு தொலைபேசியில் பேசும்போது, ஷின்ஜியாங் பகுதியில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவலை தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் அமெரிக்க அரசு தற்போது வெளியிட்டுள்ள 2020ஆம் ஆண்டிற்கான மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையில், சீனாவின் ஷின்ஜியாங் பகுதியில் நடப்பது, இனப்படுகொலை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கையில், "2021ஆம் ஆண்டில், பிரதானமாக உய்குர் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், ஷின்ஜியாங் பகுதியில் உள்ள மற்ற மத மற்றும் இன சிறுபான்மையினருக்கு எதிராகவும் இனப்படுகொலை மற்றும் மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் நடந்தன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிக்கையில், “அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில், மனித உரிமைகளை மீண்டும் ஒரு மையப்புள்ளியாக மாற்ற அதிபர் ஜோ பைடன் உறுதிபூண்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து பதிவு செய்துள்ள அந்த அறிக்கை, “அமெரிக்கா, உள்நாட்டில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை எதிர்கொள்ளும் விதம், அது வெளிநாடுகளில் மனித உரிமைகள் குறித்து வாதிடுவதற்கான நியாயத்தன்மையை அளிக்கிறது" எனவும் கூறியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT