ADVERTISEMENT

வாகனங்களை உடைத்து அட்டகாசம் செய்த இளைஞர்கள்; போலீஸுக்கு பயந்து ஓடியதால் எலும்பு முறிவு

03:37 PM Nov 16, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை கொடுங்கையூர் பகுதியில் நேற்று முன்தினம் (14-11-23) இரவு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 14 ஆட்டோக்கள், இரண்டு கார் என 25 வாகனங்களை அந்தப் பகுதியில் உள்ள சில மர்ம நபர்கள் அடித்து உடைத்துள்ளனர். நேற்று அதிகாலை அங்கு வந்த பொதுமக்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், இது குறித்து புளியந்தோப்பு சரக துணை கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வாகனங்களை அடித்து உடைத்த குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அந்த கேமரா காட்சிப் பதிவில், மது போதையில் இருந்த மூன்று பேர் கையில் கத்தியுடன் ஒவ்வொரு வாகனங்களையும் அடித்து உடைத்துச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து, வாகனங்களை அடித்து உடைத்தது தொடர்பாக அந்தப் பகுதியில் உள்ள 16 வயது சிறுவனைக் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்த லாரன்ஸ் (22) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த விஜய் ஆகியோர் மதுபோதையில் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, அவர்களைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்த நிலையில், நேற்று காலை முல்லை நகர் சுடுகாடு அருகே கொடுங்கையூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த இருவரும் காவலர்களைப் பார்த்ததும் முல்லை நகர் மேம்பாலம் நோக்கி ஓடினர். இதையடுத்து, காவல்துறையினர் அவர்களைப் பிடிக்க துரத்திக் கொண்டு ஓடினர்.

அப்போது செய்வதறியாது இருந்த அந்த 2 பேரும் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தனர். இதில் இருவருக்கும் கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்ட காவல்துறையினர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் இருவருக்கும் கை, கால் பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அங்கு மருத்துவர்கள் அவர்களுக்கு மாவு கட்டு போட்டனர். இதையடுத்து கொடுங்கையூர் காவல்துறையினர், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT