ADVERTISEMENT

நண்பனையே கொன்ற இளைஞர்கள்; சடலத்தை மீட்ட காவல்துறை

03:59 PM Dec 20, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வெங்கடேஸ்வரா நகரில் வசிப்பவர் கலியமூர்த்தி. கூலித் தொழிலாளியான இவரது மகன் 26 வயது கவியரசை கடந்த அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி முதல் காணவில்லை என்றும், பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்றும் தந்தை கலியமூர்த்தி விக்கிரவாண்டி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், கவியரசு காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதில், கவியரசு காணாமல் போவதற்கு முன்பு கடைசியாக அவரது நண்பர் ஆவுடையார்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவருடன் இருந்ததாகத் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ராம்குமாரை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், அக்டோபர் ஆறாம் தேதி கவியரசு, ராம்குமார் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஆவுடையார்பட்டு கிராமத்தின் ஏரிக்கரையில் அமர்ந்து மது விருந்து நடத்தியதாகவும் அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராற்றில் கவியரசு தலையில் கல்லைப் போட்டு கொலை செய்து, பின்பு அவரை அதே ஏரியில் புதைத்து விட்டதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சம்பவத்தன்று 7 பேர் மது குடித்ததை விசாரணையில் அறிந்த போலீசார் மற்றவர்களையும் தேட ஆரம்பித்தனர். இதில் அன்புமணி சஞ்சய் மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 4 பேர் வெளியூர் தப்பிச் செல்ல முயலும்போது மேலகொந்தை கிராமத்தில் போலீசார் கைது செய்தனர். அத்தோடு கொலை செய்த அந்த நால்வரை சம்பவம் நடந்த ஏறிப் பகுதிக்கு அழைத்துச் சென்ற போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கவியரசன் உடலை 11 அடி ஆழ நீரில் இறங்கித் தேடினார்கள். இறுதியாக நேற்று முன் தினம் மாலையில் கவியரசு உடலை கண்டெடுத்தனர். அதன் பிறகு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் கீதாஞ்சலி தலைமையிலான மருத்துவ குழுவினர் உடலை அதே இடத்தில் வைத்து பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதன்பிறகு கவியரசு உடலை அவரது தந்தை கலியமூர்த்தியிடம் ஒப்படைத்தனர். காணாமல் போன கவியரசு வழக்கை கொலை வழக்காக மாற்றி இதில் சம்பந்தப்பட்ட மேலும் சில இளைஞர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். மது போதையில் ஏற்பட்ட தகராற்றில் நண்பனை நண்பர்களே கொலை செய்துள்ள சம்பவம் விக்கிரவாண்டி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT