ADVERTISEMENT

அப்ப அவங்க தொழிலதிபர் இல்லையா? - நகைக் கடைக்காரரை ஏமாற்றிய இளம்பெண்!

12:40 PM Mar 16, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

காரைக்காலில் கவரிங் நகையை தங்க நகை எனக் கூறி அடகு வைத்தும் விற்பனை செய்தும் கோடிக்கணக்கில் மோசடி செய்த மாபியா கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

காரைக்கால் பெரமசாமிபிள்ளை வீதியில் நகைக்கடையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவர் 12 பவுன் செயினோடு வந்து, “இதை அடகு வைக்கணும். அவசரமா பணம் தேவைப்படுது. அரசுத்துறை வங்கிகளில் வைத்தால் என் தேவைக்கான பணம் கொடுக்கமாட்டாங்க. எவ்வளவு வட்டியானாலும் பரவாயில்லை, ஒரு மாதத்தில் மீட்டுக்கொள்கிறேன்” எனக் கேட்டுள்ளார். அடகு கடைக்காரரான கைலாஷ் அந்த மர்மநபரிடம் இருந்த நகையை வாங்கி சோதனை இயந்திரத்தில் பரிசோதித்தார். அதில் 916 ஹால்மார்க் எனக் காட்டியிருக்கிறது. 12 பவுனுக்கும் நான்கு லட்சம் கேட்டதால் தனது சித்தப்பா பாலமுரளிக்கு போன் மூலம் தகவலைக் கூறியிருக்கிறார் கைலாஷ்.

கைலாஷின் கடைக்கு வந்த பாலமுரளி நகையைச் சோதித்ததும் அந்த நகையின் மீது ஒருவித சந்தேகம் வர, அதை துண்டித்து பரிசோதித்திருக்கிறார். துண்டித்ததும் செப்புக் கம்பியில் தங்கமுலாம் பூசியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து காரைக்கால் நகர காவல்நிலையத்தில் தகவலைக் கூறியுள்ளனர். அங்கு விரைந்து வந்த போலீசார் நூதனமான முறையில் போலி நகையை அடமானம் வைக்க வந்த நபர் குறித்து விசாரித்ததில் அவர் காரைக்கால் சின்னக்கண்ணுசெட்டி தெருவைச் சேர்ந்த பரசுராம் என்பது தெரியவந்துள்ளது.

பரசுராமிடம் நடத்திய விசாரணையில், தன்னிடம் நகையைக் கொடுத்து விற்கச் சொன்னது திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரத்தை சேர்ந்த ரிபாத் காமில் என்றும் அவர் திருநள்ளாறு சாலையில் எலெக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து போலி நகையை விற்கச் சொன்ன ரிபாத் காமில், பரசுராம் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

போலீசார் இருவரிடமும் நடத்திய விசாரணையில், புதுச்சேரி காவல்துறையில் நிரவி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஜெரோம் ஜெசிமென்ட், நேதாஜி நகரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் எனக் காட்டிக்கொண்ட அழகி புவனேஸ்வரி மற்றும் ரமேஷ் உள்ளிட்ட பெரிய பட்டியலையே கூறியுள்ளனர். மேலும், அழகி புவனேஸ்வரி சப்-இன்ஸ்பெக்டர் ஜெரோமின் கள்ளக்காதலி என்றும், இருவரும் கோவை சென்று போலி தங்க நகையை தயாரித்து வந்து தங்களிடம் கொடுப்பார்கள் எனக் கூறியுள்ளனர்.

புவனேஷ்வரி எப்போதுமே நகைகள், கண்கவர் ஒப்பனை, விலை உயர்ந்த காரில் பவனி வந்ததால், இவரை உண்மையாகவே தொழிலதிபர் என நம்பி பலரும் மிரண்டு கிடந்தனர். போலி நகை விவகாரத்தில் புவனேஸ்வரியை போலீசார் தேடுவதை அறிந்து அவர் தலைமறைவானார். புவனேஷ்வரி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலை வைத்து அவரை சுற்றிவளைத்து கைது செய்த போலீசார் அவரை புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT