ADVERTISEMENT

அளவுக்கு அதிகமான மயக்க மருந்து? அரசு மருத்துவமனையில் இளம் பெண் உயிரிழப்பு

04:36 PM Nov 08, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மயக்க மருந்து அளவுக்கு அதிகமாகக் கொடுத்ததால் இளம் பெண் உயிரிழந்ததாகக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்.

கரூர் மாவட்டம், மணவாடி ஊராட்சிக்குட்பட்ட கல்லுமடை காலனிப் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் குமார். இவரது மனைவி ஜோதி (வயது 27) இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக ஜோதியை உறவினர்கள் அருகில் உள்ள உப்பிடமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

நேற்று காலை மருத்துவமனையில் அவருக்கு மயக்க மருந்து அளவுக்கு அதிகமாகக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உடல்நிலை பாதிக்கப்பட்டவர் 108 ஆம்புலன்ஸ் மூலமாகக் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும்போது, வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தவறான சிகிச்சையே அவர் உயிரிழப்புக்குக் காரணம் என்று கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இரண்டாவது நாளான இன்று அரசு தரப்பில் உரிய விளக்கம் தரப்படவில்லை எனவும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்களைக் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி காந்திகிராமம் பகுதியில் கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் கரூர் சரக டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரேதப் பரிசோதனை முடியும் வரை ஒத்துழைப்புத் தருமாறு அதிகாரிகள் கூறியதன் அடிப்படையில் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

ஆனால், தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை ஜோதியின் உடலைப் பெற்றுக் கொள்வதில்லை எனவும், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT