ADVERTISEMENT

எச்சரிக்கையை மீறி காரில் சென்ற இளைஞர்கள்! இரண்டு நாட்களுக்கு பின் பிணமாக மீட்பு! 

04:38 PM Dec 01, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

தினேஷ்

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுகாவுக்கு உட்பட்ட மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் கோதண்டராமன் (18). இவர், கடந்த 28ஆம் தேதி வராக நதி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அப்போது அவருடன் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தும் மாணவனை மீட்க முடியவில்லை. அதனைத் தொடர்ந்து மேல்மலையனூர் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அவர்கள், கடந்த இரண்டு நாட்களாக மாணவன் உடலை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில், அந்தக் கிராமத்தின் அருகே ஈச்சமர புதரில் அவ்வாலிபரின் உடல் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு உடலை மீட்டு அரசு செஞ்சி மருத்துவனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்தநிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளியூரைச் சேர்ந்த முருகன் மற்றும் அவரது நண்பர்கள் கிளியான், சங்கர் ஆகிய மூவரும் முருகனுக்கு சொந்தமான இன்டிகா காரில் கெடிலம் ஆற்றின் தரைப்பாலத்தைக் கடக்க முயன்றனர். அப்போது கரையில் இருந்தவர்கள், ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருக்கிறது கடக்க வேண்டாம் என எச்சரித்தனர். ஆனால், அவர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் பாலத்தைக் கடக்க முயன்றனர். அப்போது, அந்தக் கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இதைப் பார்த்து கரையில் இருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதில், சங்கர், கிளியான் ஆகிய இருவரும் காரின் ஜன்னல் வழியாக தப்பி தண்ணீரில் நீந்தி கரையேறிவிட்டனர். ஆனால், முருகன் காரோடு சேர்த்து அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்த தகவல் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு துறைக்கும் காவல்துறைக்கும் தெரியப்படுத்தப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரையும் முருகனையும் தேடிவந்ததனர். தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டுச் சென்றார்.

கடந்த இரண்டு நாட்களாக தேடியும், முருகனையும் காரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிளியூர் கிராம மக்கள் இன்று (01.12.2021) அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேசமயம், அப்பகுதியின் அக்கம்பக்கத்தில் உள்ள கிராம இளைஞர்கள் ஆற்றில் இறங்கி காரையும் முருகனையும் தேடினர். இந்த நிலையில், இன்று மதியம் 3 மணி அளவில் ஆளுரைச் சேர்ந்த தினேஷ் என்பவரின் தம்பி ஆற்று வெள்ளத்தில் சிக்கியிருந்த காரைக் கண்டுபிடித்து காரின் மீது ஏறி நின்று கூச்சலிட்டார். கரையில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்குத் தகவல் அளித்தனர். அவர்கள் உதவியுடன் காருக்குள் இருந்த முருகனை சடலமாக மீட்டு கரைக்குக் கொண்டுவந்தனர். முருகன் சடலத்தைப் பார்த்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இரண்டு நாட்களாக ஆற்று வெள்ளத்தில் தேடப்பட்டு வந்த காரையும் முருகனையும் கண்டுபிடித்த ஆலூர் கிராமத்து இளைஞரின் துணிச்சலைப் பலரும் பாராட்டினார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT