
விழுப்புரம் நகரப் பகுதியில் உள்ளது சாலா மேடு. இங்கு உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பு அருகே நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. அப்பகுதியில் வசித்த மக்கள் வீடுகளிலிருந்து பரபரப்புடன் வெளியே வந்து பார்த்தபோது, இரண்டு நபர்கள் இரண்டு தெரு நாய்களை தங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொன்று அதை வாகனத்தில் கொண்டு சென்றது தெரியவந்தது.
இது குறித்த தகவலை மருதூர் கிராம நிர்வாக அலுவலர் உமாபதியிடம் தெரிவித்துள்ளனர். அவர், விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளார். இதையடுத்து விழுப்புரம் டவுன் டி.எஸ்.பி. பழனிச்சாமி மேற்பார்வையில் போலீசார் இருவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் விழுப்புரம் ஆற்காடு நகரைச் சேர்ந்த கனகராஜ்(51). இவர், தனது வீட்டில் ஆடு, கோழிகளை வளர்த்து வருகிறார். இந்த கோழிகளைத் தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் கடித்துக் குதறி உள்ளது. அந்த நாய்களைச் சுட்டுக் கொல்லுமாறு ஆசாகுளத்தைச் சேர்ந்த நரிக்குறவர் ராஜ்குமார் என்பவரை அழைத்து வந்துள்ளார்.
ராஜ்குமார், நாட்டுத்துப்பாக்கியைக் கொண்டு இரண்டு நாய்களைச் சுட்டுக் கொன்றுள்ளதும், கொல்லப்பட்ட நாய்கள் அப்பகுதியில் புதைத்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் ஆயுத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து நாய்களைச் சுட்டுக்கொன்ற இரட்டை குழல் நாட்டுத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர். மேலும் ராஜ்குமாரின் துப்பாக்கி உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா மூலம் மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்துள்ளனர். இறந்த நாய்களைக் கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவம் விழுப்புரம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.